வடசென்னை சிங்கம் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி இரட்டை இலை சின்னத்தில் போட்டி? எடப்பாடி பிளான்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், இரட்டை இலை சின்னத்தில், வடசென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக 167 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில் 150 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டார்கள். மீதமுள்ள 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஆர்.கே.நகர் உள்ளிட்ட வடசென்னை தொகுதியில், பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் களமிறக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. அதிமுகவுடன் பொற்கொடி கூட்டணி வைத்து போட்டியிடுவதாகவும் சொல்லப்பட்டது.
இதற்காக எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்த பொற்கொடிக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான படிவம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடசென்னையில் எந்த தொகுதி என்பது சரிவர தெரியவில்லை. ஆர்.கே.நகர் தொகுதியில் பிரபல முகமாக பொற்கொடி இருப்பார் என சொல்லப்படுகிறது.
பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் , கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த கே. ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி ஆவார்.
ஆம்ஸ்ட்ராங்கின் மறைவுக்குப் பிறகு, பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
கட்சிக்குள் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் மற்றும் மாநிலத் தலைவர் ஆனந்தன் என்பவருடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக, ஏப்ரல் 2025-ல் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி, இவரைப் பொறுப்பிலிருந்து நீக்கினார்.
தனது கணவரின் முதலாம் ஆண்டு நினைவு தினமான ஜூலை 5, 2025 அன்று, பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் 'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' (Tamil Maanila Bahujan Samaj) என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார்.
தற்போது தனது புதிய கட்சியின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும், தனது கணவரின் படுகொலைக்கு நீதி கோரியும் பொதுவாழ்வில் இயங்கி வருகிறார்.












Click it and Unblock the Notifications