சாலை பள்ளத்தால் கார் சேதமடைந்தால் இழப்பீடு கோர முடியுமாம்.. ஆனால், இதில் ஒரு பெரிய சிக்கல் இருக்கு!
சென்னை: இந்தியாவில் சாலை பள்ளங்களால் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதுபோன்ற மோசமான சாலைகளால் வாகனங்கள் பாதிக்கப்பட்டால் அல்லது விபத்தில் சிக்கி நமக்கு எதாவது காயம் ஏற்பட்டால் இதனால் மக்கள் இழப்பீடுகளைப் பெற முடியுமா.. இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்துப் பார்க்கலாம்.
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் குறைந்தது 19 விபத்துக்களும், 6 உயிரிழப்புகளும் சாலைகளில் உள்ள பள்ளங்களால் மட்டும் ஏற்படுகின்றன. 2013ஆம் ஆண்டில் இதனால் ஏற்படும் உயிரிழப்புகள் 0.27%ஆக நிலையில், 2022ல் அது 0.42ஆக அதிகரித்துள்ளது. 2013 முதல் 2022 வரை, இந்தியா முழுவதும் சாலைகளில் உள்ள பள்ளங்களால் ஏற்பட்ட விபத்துக்களில் 23,420க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அந்தளவுக்கு மோசமான நிலையில் தான் நமது சாலைகள் உள்ளன.

சாலை விபத்துகள்
சாலை விபத்துகளால் ஏற்படும் பொருளாதார இழப்புகளும் மிக அதிகமாகவே இருக்கிறதாம். சாலை விபத்துகளால் இந்தியாவுக்கு ஆண்டுதோறும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3-5% இழப்பு ஏற்படுவதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.. இந்த இழப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.14%ஆக உள்ளதாக மத்திய அரசே தனது அறிக்கையில் கூறியுள்ளது.
வாகன உரிமையாளர்களும் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். ஆண்டுதோறும் சுமார் 2.5 லட்சம் கார்கள் மோசமான சாலைகளால் சேதமடைகின்றன. இதுபோல கார்கள் பாதிக்கப்படும்போது ₹10,000 முதல் ₹30,000 வரை செலவாகிறது. மேலும் பள்ளம் தொடர்பான வாகனச் சேதங்களுக்குப் பெரும்பாலும் காப்பீட்டுத் தொகை கிடைப்பதில்லை என்பதால் கார் ஓனர்களே இந்தச் செலவைச் செய்ய வேண்டி உள்ளது.
இழப்பீடு பெற முடியுமா?
அது சரி இதுபோன்ற சாலைகளில் பள்ளம் இருப்பதால் அதற்கான இழப்பீடுகளை மக்களால் பெற முடியுமா.. இந்த இழப்புகளுக்கு அரசைப் பொறுப்பாக்க முடியுமா? சாலைகளில் உள்ள பள்ளங்களால் ஏற்படும் மரணங்கள், காயங்கள் மற்றும் சொத்து சேதங்களுக்குக் குடும்பங்கள் இழப்பீடு கோர முடியுமா? என்று நமக்குச் சில கேள்விகள் எழும். ஆம் இழப்பீடு கோரலாம் என்பதே இதற்குப் பதிலாகும். ஆனால் இழப்பீடு பெறுவது எளிமையானது இல்லை என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக வல்லுநர்கள் மேலும் கூறுகையில், "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19(1)(g) பிரிவின் கீழ், நாட்டின் எந்தப் பகுதிக்கும் செல்லும் உரிமை அனைவருக்கும் உள்ளது. மேலும், பாதுகாப்பான, நன்கு பராமரிக்கப்பட்ட சாலைகளுக்கான உரிமை, அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் உயிர் வாழ்வதற்கான உரிமையின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனவே, சாலைகளை மேம்படுத்துவதும் பராமரிப்பதும் அரசின் பொறுப்பு
அரசின் கடமை
சாலைகளில் உள்ள பள்ளங்களால் காயம் ஏற்பட்டால் அல்லது கார்களுக்கு இதனால் சேதம் ஏற்பட்டால் அரசு அல்லது சம்பந்தப்பட்ட நகராட்சி மீது வழக்குத் தொடரலாம். பாதுகாப்பான சாலைகளைப் பராமரிப்பது ஒரு சட்டப்பூர்வக் கடமையாகும். இதில் தவறுவது அலட்சியம் என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன. எனவே, இதில் வழக்கு போட்டு இழப்பீட்டைப் பெற முடியும். எந்தச் சாலையால் உங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டதோ அதைப் பொறுத்து நகராட்சி, மாநில பொதுப்பணித் துறை அல்லது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மீது வழக்குத் தொடரலாம்" என்கிறார்கள்.
சிக்கல் என்ன
இருப்பினும் இழப்பீடு பெறுவதும் எளிமையான வழி இல்லையாம். நமது நாட்டில் ஒவ்வொரு சாலைக்கும் ஒவ்வொரு அமைப்பு பொறுப்பாக இருக்கிறது. எனவே, எந்த அரசு நிறுவனம் பொறுப்பு என்பதை அடையாளம் காண்பதே பெரிய பணி. அப்படியே கண்டுபிடித்தாலும் அதிகாரிகளும் ஒப்பந்ததாரர்களும் மாறி மாறி அலைய விடுவார்கள். இதையெல்லாம் தாண்டிய பிறகே இழப்பீடு பெற முடிகிறதாம்.
கவனம் தேவை
இதுபோல வழக்கு தொடரும்போது சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இழப்பீடு கோரும்போது ஆதாரங்களை ரெடியாக வைத்திருக்க வேண்டும். பழுதடைந்த சாலை, விபத்து நடந்த இடத்தையும் காட்டும் போட்டோ அல்லது வீடியோ கைவசம் வேண்டும். விபத்து குறித்த போலீசாரின் அறிக்கையும் தேவைப்படலாம். விபத்தில் காயம் ஏற்பட்டிருந்தால் மருத்துவ ஆவணங்கள், வாகன பழுதுபார்ப்புக்கான பில், சாட்சிகள் இருந்தால் அவர்களின் வாக்குமூலங்கள் ஆகியவை அவசியமானவை.
மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விபத்து நடந்த சாலைப் பகுதியைப் பராமரிப்பது யார் பொறுப்பு என்பதையும் உறுதி செய்யுங்கள். மேலும், எல்லாவற்றையும் தாண்டி அந்தப் பள்ளங்களால் தான் விபத்து ஏற்பட்டுள்ளது என்பதையும் நிரூபிக்க வேண்டும். இத்தகைய வலுவான ஆதாரங்கள் இருந்தால், இழப்பீடு பெறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications