மின்வெட்டு விவகாரம் தவெக ஆட்சி மீது மக்களுக்கு கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.. பெ சண்முகம்
சென்னை: தமிழகம் முழுக்க மக்கள் மத்தியில் மின் வெட்டு பிரச்சினை தவெக அரசுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என சிபிஎம் பெ சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும் நாங்கள் தவெக அரசுக்கு ஆதரவு அளிப்பதனால், தவெக செய்யும் எல்லா செயல்களுக்கும் நாங்கள் ஆதரவு அளிப்பதாக அர்த்தம் ஆகாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதே போன்று தவெக சார்பில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள 2 வேட்பாளர்களுக்கும் ஏன் வாக்களிக்கக் கூடாது என்பதை நிச்சயமாக பிரசாரத்தில் முன்வைப்போம் என்றும் அவர் கூறினார்.
விஜய்யின் தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்த கம்யூனிஸ்ட் கட்சிகள் தற்போது நடக்க இருக்கும் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதனால் இந்த இடைத்தேர்தலில் 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுக மற்றும் தவெகவுக்கு எதிராக பிரசாரம் செய்யுமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு சிபிஎம் மாநில செயலாள பெ சண்முகம் பதிலளித்து கூறியதாவது:-

மக்கள் மீது இந்த ஆட்சியில் அதிருப்தி
மின் வெட்டு என்பது தமிழ்நாடு முழுவதும் மக்கள் மத்தியில் இந்த ஆட்சி மீது கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காற்றாலை சரியாக வேலை செய்யவில்லை என பல்வேறு சமாதானங்கள் அரசின் சார்பில் சொல்லப்படுகிறது. இருப்பினும், மின் தட்டுப்பாடு இல்லாமல் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
தவெகவுக்கு எதிராக பிரசாரம்
எனவே காற்றின் மீதோ, தண்ணீரின் மீதோ குறைகளை சொல்லி இதை மடைமாற்றம் செய்வது மக்களை திருப்திபடுத்தாது. ஆகவே, 24 மணி நேரமும் தட்டுப்பாடு இல்லாமல் மின்சாரம் வழங்க என்ன செய்ய வேண்டுமோ? அதை செய்ய வேண்டும் என்பதையே நான் வலியுறுத்த விரும்புகிறேன். தவெக சார்பில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள இரண்டு வேட்பாளர்களுக்கும் ஏன் வாக்களிக்கக் கூடாது என்பதை நிச்சயமாக நாங்கள் பிரசாரத்தில் முன்வைப்போம்.
சட்டசபையில் இடதுசாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இந்த 120 நாள் அல்லது இப்போது நடந்து முடிந்து இருக்கக்கூடிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில், எங்களது சட்டசபை உறுப்பினர்கள் 4 பேரும் எப்படி செயல்பட்டனர் என்பதையும், மற்ற உறுப்பினர்கள் எப்படி செயல்பட்டனர் என்பதையும் ஒப்பிட்டு பாருங்கள்.
தவெக ஆட்சிக்கு ஆதரவு மட்டும் தான்
எங்களுடைய இரண்டு, இரண்டு உறுப்பினர்கள் என்ற முறையில் சபாநாயகர் குறைவான நேரம் கொடுத்தாலும் அதை ஆக்கப்பூர்வமாகவும், மக்களின் பிரச்சினைகளை எதிரொலிக்கக் கூடிய வகையிலும் எங்களுடைய எம்.எல்.ஏக்கள் செயல்பட்டார்கள் என்பதை நீங்க பார்த்திருக்க முடியும். எனவே மக்களின் பிரச்சினைகளை சட்டமன்றத்தில் வலுவாக எதிரொலிக்க வகையில் எங்கள் பலத்தை அதிகரிக்க செய்யவே மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் இடதுசாரிகள் போட்டியிடுகிறார்கள்.
தவெக ஆட்சிக்கு ஆதரவு என்பது ஆட்சி அமைக்க மட்டும் தான். அந்த ஆதரவு இன்னும் தொடர்கிறது. ஒரு வேளை நாங்கள் வேறு விதமாக முடிவெடுத்தால் அந்த குழப்பத்தை, சிக்கல்களை பாஜக மீண்டும் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளது. நாங்கள் தவெக அரசுக்கு ஆதரவு அளிப்பதனால், தவெக செய்யும் எல்லா செயல்களுக்கும் நாங்கள் ஆதரவு அளிப்பதாக அர்த்தம் ஆகாது.
எதிர்ப்பை பகிரங்கமாக வெளிப்படுத்துவோம்
இந்த 120 நாள் ஆட்சியில் எந்தெந்த பிரச்சினையிலெல்லாம் தவெகவின் நடவடிக்கைக்கு நாங்கள் மாறுபட்டு இருக்கிறோம் என்பதை இவ்வளவு நாட்களில் பார்த்து இருக்கலாம். எனவே இதே அனுகுமுறை எதிர்காலத்திலும் தொடரும். நாங்கள் உடன்படும் விஷயத்தில் வரவேற்கவும், மாறுபடுகின்ற விஷயங்களில் எங்களுடைய எதிர்ப்பை பகிரங்கமாக வெளிப்படுத்தவதில் தயங்குவதில்லை. இதே நடைமுறை தொடரும்.. என்று கூறினார்.


Click it and Unblock the Notifications
