தமிழகத்தில் மின் வெட்டு பிரச்சனை அடுத்த மாதம் சரியாகிவிடும்.. அதிகாரிகள் சொன்ன நல்ல செய்தி
சென்னை: தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின் வெட்டு பல்வேறு இடங்களில் தொடர்வதால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். பொதுவாக கோடைக்காலத்தில் தான் மின் தட்டுப்பாடு அதிகமாக இருக்கும். ஆனால் செப்டம்பர் மாதத்தில் கூட மின் தட்டுப்பாடு இருப்பதற்கு மின்சாரத்தின் தேவை அதிகரித்தத காரணம். எல் லினோ தாக்கம் காரணமாக கோடைக்காலம் போல் இரவில் சென்னை உள்பட பல நகரங்கள் இருக்கிறது. இதுதான் சிக்கலுக்கு காரணம். இந்த சூழலில் அடுத்த மாதம் நிலைமை சீரடையும் என்று மின்வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கோடை காலத்தில் உள்ளது போல் வெப்பம் சற்று அதிகரித்திருப்பதால் அறிவிக்கப்படாத மின்வெட்டு பல மாவட்டங்களில் தொடர்கிறது. மின்சாரத்திற்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், அதற்கு ஏற்ற மின்சாரம் இல்லை. இந்த பற்றாக்குறை காரணமாக சென்னையில் இரவு நேர மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் இரவில் தூக்கத்தை பறிகொடுக்கும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபடுவது தொடர்கதையாக இருக்கிறது.

சென்னை மட்டுமல்ல, தென் மாவட்டங்களிலும், மேற்கு மாவட்டங்களிலும், மத்திய மாவட்டங்களிலும் மின் வெட்டு அதிகமாகவே இருக்கிறது. இதனால் பொதுமக்கள் சாலை மறியல் மற்றும் மின்சார வாரிய அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டங்களில் ஈடுபடுவது தொடர் கதையாக இருக்கிறது.
அறிவிக்கப்படாத 2 மணி நேர மின்வெட்டுகளால் தொழில் மற்றும் விவசாயம் செய்வோர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
சென்னையைபொறுத்தவரை மின்வெட்டுக்கு முக்கியமான காரணம் மின்சார உற்பத்தி பற்றாக்குறை மற்றும் அதிகப்படியான சுமையுள்ள விநியோக வலையமைப்பு ஆகியவை தான் காரணமாக கூறப்படுகிறது. மின்சாரத்தின் தேவையை பொறுத்தவரையில் கடந்த 19-ந்தேதி 19 ஆயிரத்து 283 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டது. இதற்கு தேவையான மின்சாரம் அனல், நீர், மரபுசாரா எரிசக்தி உள்ளிட்டவற்றின் மூலம் பெறப்பட்டு விநியோகம் செய்து அரசு சீர் செய்தது..
ஆனால் நேற்று மின்சாரத்தின் தேவை 15 ஆயிரத்து 260 மெகாவாட் என்ற அளவில் குறைந்தது. ஆனாலும் மின்வெட்டுக்கு பல்வேறு காரணங்களால் தொடர்ந்துள்ளது. தற்போது அரசுக்கு சொந்தமான மின்உற்பத்தி நிலையங்கள் தவிர வெளிவிடங்களில் இருந்து 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு மின்சாரம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டிற்கு மத்திய தொகுப்பில் 4,429 மெகாவாட் மின்சாரம், சோலார் மூலம் 1,257 மெகாவாட் மின்சாரம், காற்றாலை மூலம் 742 மெகாவாட் மின்சாரம், அனல்மின் நிலையங்கள் மூலம் 2,118 மெகா வாட் மின்சாரம், நீர் மின் நிலையங்கள் மூலம் 562 மெகாவாட் மின்சாரம், கேஸ் மூலம் 179 மெகாவாட் மின்சாரம், மரபுசாரா எரிசக்தி மூலம் 138 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு மின்சார உற்பத்திக் கழக அதிகாரிகள் கூறுகையில், அரசுக்கு சொந்தமான அனல் மின்சார நிலையங்கள் அவற்றில் நிறுவப்பட்ட திறனை விட மிகக் குறைவாகவே மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளன. 800 மெகாவாட் திறன் கொண்ட சூப்பர்கிரிட்டிகல் அனல் மின் நிலையமான வடசென்னை அனல் மின்நிலையத்தின் 3-ம் கட்டம் 46 சதவீதம் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளது. அதேபோல் 2-ம் கட்டத்தின் 600 மெகாவாட் அலகுகள் 2-ம் முறையே 42 சதவீதம் மற்றும் 46 சதவீதம் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளன.
ஒரு சில மின்சார உற்பத்தி நிலையங்கள் வருடாந்திர பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டியிருந்தது. அதனால் அவற்றால் தங்களின் முழுத் திறனை எட்ட முடியவில்லை. இருப்பினும், தற்போதைய நெருக்கடியை சமாளிக்க அவை மின்சாரத்தை உற்பத்தி செய்தே வருகின்றன. அடுத்த கோடையில் அவற்றின் பயன்பாட்டை உறுதி செய்ய இந்தப்பராமரிப்பு அவசியம் ஆகும்.
அதிக ஈரப்பதம் மற்றும் வெப்பம் காரணமாக மின்சார நுகர்வு முந்தைய ஆண்டின் அளவை விடக் கணிசமாக அதிகரித்திருக்கிறது. அதே நேரத்தில் காற்றாலை மின்சார உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்பட்டதே தற்போதைய சிக்கலுக்கு காரணம் ஆகும.. காலநிலை மாறிவிட்டால் அடுத்த மாத தொடக்கத்தில் நிலைமை சீரடையும் என்று எதிர்பார்க்கிறோம்" என அதிகாரிகள் கூறினார்கள்.


Click it and Unblock the Notifications
