தீராத தைலாபுரம் பஞ்சாயத்து.. இதுவரை 16 மாவட்ட செயலாளர்களை நீக்கிய ராமதாஸ்! அன்புமணி உடனடி ரியாக்ஷன்
சென்னை: பாமகவில் தொடர்ந்து அன்புமணி ஆதரவு நிர்வாகிகளை நீக்கிவிட்டு தனது ஆதரவாளர்களை நியமித்து வருகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். இதுவரை கட்சியின் பொருளாளர் திலகபாமா, 16 மாவட்ட செயலாளர்கள் மற்றும் 4 மாவட்ட தலைவர்களை ராமதாஸ் மாற்றியுள்ளார். அதேசமயம், அவர்கள் அதே பொறுப்பில் தொடர்வதாக அன்புமணி அறிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணி இடையேயான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், அன்புமணி மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார். குடும்ப விவகாரங்கள் பற்றியும் வெளிப்படையாகவே விமர்சித்துப் பேசி இருந்தார்.

அன்புமணி ஆலோசனை
இந்நிலையில், சென்னை சோழிங்கநல்லூரில் நேற்றும் இன்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் அன்புமணி ராமதாஸ். இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர், மாவட்ட தலைவர், ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இன்று இந்த கூட்டத்தில் பங்கேற்க மொத்தம் 16 மாவட்டச் செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 15 பேர் பங்கேற்றுள்ளனர். உறுப்பினர் அட்டை மற்றும் உறுப்பினர் படிவம் வழங்கி, புதிய கிளைகளை உருவாக்குவதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கும் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை வழங்கினார்.
10 நிமிடத்தில் லெட்டர் வரும்
இன்று நடந்த 2ஆம் நாள் ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய அன்புமணி ராமதாஸ், "கட்சியில் பொறுப்புகள் கொடுக்குறது, நீக்குறதுலாம் செல்லாது. நான் இருக்கேன். அடுத்த 10 நிமிடத்தில் லெட்டர் வந்துரும். குழப்பங்கள் எல்லாம் சரியாகிடும். பொதுக்குழுவால் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் நான். கட்சியில் விதிகள் எல்லாம் இருக்கு. தலைவர்தான் கையெழுத்து போட வேண்டும். அவர் தான் எல்லாமே நியமனம் செய்ய வேண்டும்.
பாமகவை மேலும் வலுப்படுத்த புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். ஏற்கனவே உறுப்பினர் அட்டை வைத்துள்ளவர்கள் புதுப்பித்துக்கொள்ள ஏண்டும். அதிக உறுப்பினர்களைச் சேர்த்தால் தங்க மோதிரமோ தங்கச் சங்கிலியோ தர மாட்டேன். உண்மையான உறுப்பினர்களை மட்டும் சேர்த்தால் போதும்." எனத் தெரிவித்துள்ளார்.
நிர்வாகிகளை நீக்கிய ராமதாஸ்
இதற்கிடையே அன்புமணி தலைமையில் நடைபெற்ற பாமக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பவர்களை கட்சிப் பொறுப்பிலிருந்து அடுத்தடுத்து நீக்கி வருகிறார் ராமதாஸ். திண்டுக்கல் மாவட்ட பாமக நிர்வாகிகளை கூண்டோடு மாற்றம் செய்து அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டார். அதேபோல் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த லோகநாதன் நீக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 4 மாவட்ட செயலாளர்களையும் நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். கடலூர் மேற்கு மாவட்ட செயலாளராக சுரேஷ் என்பவரை ராமதாஸ் நியமித்துள்ளார். கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக கோபிநாத் என்பவரை ராமதாஸ் நியமித்துள்ளார். கடலூர் தெற்கு மாவட்ட செயலாளராக சசிதரன் என்பவர் நியமிக்கப்ட்டுள்ளார். கடலூர் வடக்கு மாவட்ட செயலாளராக ஜெகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மா.செக்கள் நீக்கம்
விழுப்புரம் மத்திய மாவட்ட பாமக செயலாளர் சிவகுமாரை பொறுப்பில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். புதிய மாவட்டச் செயலாளராக புகழேந்தியை நியமித்து ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டார். பாமக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவராக இருந்த பச்சையப்பனை நீக்கினார் பாமக நிறுவனர் ராமதாஸ். செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவராக ஜோசுவா என்பவரை நியமித்தார் ராமதாஸ்.
பாமக பொருளாளர் திலகபாமா, அன்புமணி ராமதாஸ் நேற்றும் இன்றும் கூட்டிய இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்த நிலையில், பாமக பொருளாளராக இருந்த திலகபாமாவை நீக்கி பாமகவின் நிறுவனர் ராமதாஸ் நேற்று உத்தரவிட்டார். மேலும் பாமகவின் புதிய பொருளாளராக சையத் மன்சூர் உசேனை நியமித்து ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டார்.
16 மா.செக்கள் மாற்றம்
நேற்று 5 மாவட்ட செயலாளர்கள், இரண்டு மாவட்ட தலைவர்களை நீக்கி ராமதாஸ் அதிரடியாக உத்தரவை வெளியிட்டுருந்த நிலையில் தற்போது காலை முதலே பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாவட்ட செயலாளர்கள், முன்னாள் மாவட்ட செயலாளர்கள், முன்னாள் மாவட்ட தலைவர்கள் என அனைவருமே தைலாபுரம் தோட்டத்திற்கு படையெடுத்தனர்.
இன்றும் பல்வேறு நிர்வாகிகளை நீக்கி வருகிறார் ராமதாஸ். இதுவரை கட்சியின் பொருளாளர் திலகபாமா, 16 மாவட்ட செயலாளர்கள் மற்றும் 4 மாவட்ட தலைவர்களை ராமதாஸ் மாற்றியுள்ளார். அதேசமயம், அவர்கள் அதே பொறுப்பில் தொடர்வதாக அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications