களம் தைலாபுரத்தில்.. பாமக ஸ்கோர் இதுவரை.. ராமதாஸ் 4, அன்புமணி 3.. ‘உள்ளே வெளியே’ ஆடும் தலைகள்!
சென்னை: பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இடையே நீடித்து வரும் மோதல் போக்கு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பாமக நிர்வாகிகளை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நீக்கி வரும் நிலையில், அவர்களை கட்சியில் சேர்ப்பதாக அறிவித்து வருகிறார் அன்புமணி ராமதாஸ். இதனால் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது நேற்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் பாமக நிறுவனர் ராமதாஸ். அன்புமணிக்கு தலைமைப் பண்பு இல்லை என்றும் விமர்சித்திருந்தார். பாமகவில் இளைஞர் அணித் தலைவர் பதவிக்கு முகுந்தனை நியமிக்கும் விவகாரத்தில் தாயார் மீது பாட்டில் வீசித் தாக்கினார் அன்புமணி. பாஜகவுடனான கூட்டணிக்காக தற்கொலை மிரட்டல் விடுத்தார் என்றும் ராமதாஸ் குற்றம்சாட்டி இருந்தார்.

அன்புமணி தலைமையில் கூட்டம்
இந்நிலையில், இன்று அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக, தைலாபுரத்தில் பாமக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை ராமதாஸ் கூட்டிய போது, அந்தக் கூட்டத்தை பாமக மாவட்ட நிர்வாகிகள் புறக்கணித்தனர். மாவட்ட செயலாளர்கள் 8 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த நிலையில், அன்புமணி தலைமையிலான மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இன்று பெரும்பாலான நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
அதிரடியாக நீக்கி வரும் ராமதாஸ்
பாமக பொருளாளர் திலகபாமா, அன்புமணி ராமதாஸ் இன்று கூட்டிய இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்த நிலையில், பாமக பொருளாளராக இருந்த திலகபாமாவை நீக்கி பாமகவின் நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டார். மேலும் பாமகவின் புதிய பொருளாளராக சையத் மன்சூர் உசேனை நியமித்து ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டார்.
மேலும் பாமகவில் 25 மாவட்டச் செயலாளர்களை மாற்ற அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் முடிவு செய்து இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அன்புமணி ஆதரவு நிலைப்பாடு கொண்டவர்கள் மற்றும் அண்மையில் தைலாபுரத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்தவர்கள் உள்ளிட்டோர் அந்தப் பட்டியலில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மா.செக்கள் நீக்கம்
இநிந்லையில் விழுப்புரம் மத்திய மாவட்ட பாமக செயலாளர் சிவகுமாரை பொறுப்பில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். புதிய மாவட்டச் செயலாளராக புகழேந்தியை நியமித்து ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டார்.
பாமக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவராக இருந்த பச்சையப்பனை நீக்கினார் பாமக நிறுவனர் ராமதாஸ். செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவராக ஜோசுவா என்பவரை நியமித்தார் ராமதாஸ்.
பாமகவின் ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளராக இருந்த ராஜ் என்பவரை மாற்றி பொ.வை. ஆறுமுகம் என்பவரை ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளராக நியமித்துள்ளார் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ்.
இதேபோல மேலும் சில மாவட்ட செயலாளர்களையும் நீக்க ராமதாஸ் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீக்க முடியாது - அன்புமணி
இந்த நிலையில், அன்புமணி ராமதாஸ் நடத்திய கூட்டத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளராக பொதுக்குழுவால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட திலகபாமா அப்பொறுப்பில் தொடர்வார் என்று அறிவிக்கப்படுகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் அவருக்கு தொடர்ந்து முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அன்புமணி அறிவித்துள்ளார்.
மேலும், ராமதாஸ் வெளியிடும் அறிவிப்புகள் செல்லாது என்றும், பொதுக்குழு உறுப்பினர்கள் நினைத்தால் மட்டுமே நிர்வாகிகளை நியமிக்கவோ, நீக்கவோ முடியும். நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக எனது கடிதம் மட்டுமே செல்லும் என்றும் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமதாஸ் - அன்புமணி இடையேயான அதிகார மோதலால் பாமக தொண்டர்கள் கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications