பவுலின் தீபாவின் ஐபோன் மீட்பு ..கதவை உடைத்து எடுத்துச்சென்ற பிரபாகரன்.. போலீஸ் பரபர விசாரணை
சென்னை: தற்கொலை செய்துகொண்ட நடிகை பவுலின் தீபாவின் காணாமல் போன ஐபோன் மீட்கப்பட்டுள்ளது.
கதவை உடைத்து ஐபோனை எடுத்துச்சென்ற பிரபாகரனிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகை பவுலின் ஜெசிகா என்கிற தீபா. 29 வயதாகும் இவர் வாய்தா, துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். வாய்தாவில் கதாநாயகியாகவும் வேறு சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்திருந்தார்.
சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூவில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார் பவுலின் தீபா. இவர் கடந்த சில ஆண்டுகளாக சிராஜுதீன் என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது.

தற்கொலை
பவுலின் தீபா சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் இறப்பதற்கு முன்பு ஒரு கடிதத்தையும் எழுதி வைத்திருந்தார். அதில் தான் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்ததாகவும் அந்த காதலை அந்த நபர் ஏற்கவில்லை என்றும் தனது மரணத்திற்கும் யாரும் காரணமில்லை எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

மரணத்தில் மர்மம்
இவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக தீபாவின் சகோதரர் புகார் கூறியுள்ளார். இதுகுறித்து கோயம்பேடு போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தீபாவின் செல்போன் தகவல்களை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். அதே நேரத்தில் அவரது காதலன் சிராஜுதீனிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அவர் படப்பிடிப்பில் இருப்பதால் ஆஜராக நேரம் கேட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

போனில் வாக்குவாதம்
தற்கொலைக்கு முன்பாக சிராஜுதீனிடம் தீபா போனில் வாக்குவாதம் செய்ததாகவும் தான் தற்கொலை செய்ய போவதாகவும் தெரிவித்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் நடிகை பவுலின் தற்கொலை செய்து கொள்வதற்கு முதல் நாள் வெளியே சென்றுவிட்டு ஆட்டோவில் இருந்து இறங்கி சோர்வாகவே வீட்டுக்குள் செல்கிறார். இந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

போலீஸ் சந்தேக பார்வை
பவுலின் காதலித்து வந்ததாக சொல்லப்படும் சிராஜுதீனுக்கு ஏற்கெனவே திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இந்த விவகாரத்தில் சிராஜுதீனின் நண்பர் பிரபாகரன் மீதும் காவல்துறையினரின் சந்தேக பார்வை விழுந்துள்ளது. பவுலின் தற்கொலை செய்து கொண்டதை சிராஜுதீன் மூலம் அறிந்த அவரது நண்பர் பிரபாகரன் பவுலினின் வீட்டிற்கு பதற்றமாக ஓடி வரும் சிசிடிவி காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

ஐபோன் மீட்பு
இதனிடையே தற்கொலை செய்துகொண்ட நடிகை பவுலின் தீபாவின் காணாமல் போன ஐபோன் மீட்கப்பட்டுள்ளது. நடிகை தற்கொலை செய்துகொண்ட பொது முதல் ஆளாக வந்து கதவை உடைத்து பார்த்த பிரபாகரனிடம் இருந்து ஐபோன் மீட்கப்பட்டது. மொத்தமாக நடிகை பவுலின் தீபா பயன்படுத்திய 3 செல்போன்கள் ஒரு டேப் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர்.

தடய அறிவியல் சோதனை
செல்போனில் உள்ள தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளனவா என்பதை ஆய்வு செய்ய தடவியல்துறைக்கு ஐபோனை அனுப்ப திட்டமிட்டுள்ளனர். பவுலின் தற்கொலை தொடர்பாக பிரபாகரனிடம் கோயம்பேடு போலீஸ் 3 மணிநேரம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications