பிரபாகரன் இருக்கிறாரா? பழ.நெடுமாறன் பற்ற வைத்த நெருப்பு.. களம் இறங்கிய தமிழ்நாடு கியூ பிரிவு?
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளதாக பழ.நெடுமாறன் கூறிய நிலையில் அவரை விசாரிக்க மாநில உளவுத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளதாக பழ.நெடுமாறன் கூறியிருந்தார். இதனை இலங்கை அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. எனினும் பிரபாகரன் தொடர்பான நெடுமாறன் கூறியதை ஆராய்ந்து வரும் மாநில கியூ பிரிவு போலீசார் நெடுமாறன் ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே யுத்தம் நடைபெற்று வந்தது. 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது பிரபாகரன், இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார் என கூறப்பட்டது. இதற்கு சான்றாக பிரபாகரன் உடல் என ஒன்றும் காட்டப்பட்டது.
அன்று முதல் பிரபாகரன் குறித்து மாறுபட்ட பல தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. பிரபாகரன் இறந்தது உண்மை என ஒருதரப்பும் இல்லை பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என ஒருதரப்பும் கூறி வந்தன. இலங்கை அரசு பிரபாகரன் உயிருடன் இல்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. ஆனால் விடுதலை புலிகள் தரப்போ அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் வெளியிடவில்லை.

பழ.நெடுமாறன் பேச்சு
இந்நிலையில் தஞ்சாவூரில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் திங்கள்கிழமை அன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, பிரபாகரன் குடும்பத்தினர் தம்முடன் தொடர்பில்தான் இருக்கின்றனர். பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார். பிரபாகரன் தற்போது நலமுடன் இருக்கிறார். பிரபாகரன் விரைவில் வெளியே வருவார். பிரபாகரன் அனுமதியுடன் இதனை அறிவிக்கிறேன் என்று கூறி அதிர வைத்தார். பின்னர் பழ.நெடுமாறன் இது பற்றி அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், "சர்வதேசச் சூழலும் இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்து கிளம்பி இருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கி உள்ளது

விடியலுக்கான திட்டம்
இந்தச் சூழலில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன், நலமுடன் இருக்கிறார் என்கிற நற்செய்தியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாகத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இதுவரை அவரைப் பற்றி திட்டமிட்டுப் பரப்பப்பட்ட யூகங்களுக்கும் ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம். தமிழீழ மக்களின் விடியலுக்கானத் திட்டத்தை அவர் விரைவில் அறிவிக்க இருக்கிறார். தமிழீழ மக்களும் உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவினை அளிக்க முன்வருமாறு வேண்டுகிறோம்.

சீனா ஆதிக்கம்
விடுதலைப் புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும் எந்த கால கட்டத்திலும் எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மிக உறுதியாக இருந்தார். தற்போது இலங்கையில் ஆழமாக காலூன்றி இந்திய எதிர்ப்புத் தளமாக அதை ஆக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதையும் இந்துமாக்கடலின் ஆதிக்கம் சீனாவின் பிடியில் சிக்கும் அபாயம் இருப்பதையும் எண்ணிப் பார்த்து அதைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய அரசை வேண்டுகிறோம். இந்த முக்கியமான கால கட்டத்தில் தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் தமிழ்நாட்டு மக்களும் ஒன்றுபட்டு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு துணை நிற்குமாறு வேண்டுக் கொள்கிறோம்" இவ்வாறு பழ.நெடுமாறன் தெரிவித்திருந்தார்.

வைகோ மறுப்பு
பழ. நெடுமாறன் கருத்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மறுத்திருந்தார். இதேபோல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் மறுத்திருந்தார். பலரும் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக வரும் தகவல்களை மறுத்துள்ளனர். அதேநேரம் சிலர் நெடுமாறனின் கருத்தை ஆதரித்தும் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். பிரபாகரன் உயிருடன இருப்பதாக கூறப்பட்ட தகவலை இலங்கை ராணுவம் உடனடியாக மறுப்பு தெரிவித்தது.

கியூ பிரிவு விசாரணை
இது ஒருபுறம் இருக்க, நெடுமாறனின் இந்த கருத்தை முழுமையாக புறந்தள்ளிவிட முடியாது என்பதால், பிரபாகரன் பற்றிய தகவல்களை மீண்டும் திரட்ட உளவு பிரிவினர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரபாகரன் தொடர்பான தகவல்களை தமிழக க்யூ பிரிவு போலீஸாரும் திரட்டத் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக காவல் துறையின் உளவுப் பிரிவு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், அப்பிரிவு ஐ.ஜி. செந்தில்வேலன், க்யூ பிரிவு எஸ்.பி. கண்ணம்மாள் தலைமையிலான போலீஸார் மீண்டும் விசாரித்து வருவதாகவும், பிரபாகரன் மரணமடைந்ததாக ஏற்கெனவே திரட்டப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் மீண்டும் கையிலெடுக்கப்பட்டு புலனாய்வு நடத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பொதுவாகவே கேள்விப்படும் விஷயங்களை ஆய்வு செய்வது உளவுத்துறை பணிதான். எனவே நெடுமாறனின் கருத்தை சீரியசாக எடுத்து விசாரிக்கிறார்களா அல்லது தங்களது பணியை செய்கிறார்களா என்பது விசாரணை பாணியை பார்த்தால் தெரிந்துவிடும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications