முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த பிரக்ஞானந்தா.. ரூ. 30 லட்சம் பரிசளித்து வாழ்த்திய முதல்வர்
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா வாழ்த்து பெற்றார். விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி வாழ்த்து கூறினார்.
உலக செஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று பிரக்ஞானந்தா சாதனை படைத்திருந்தார். உலக செஸ் தொடரில் வென்ற பதக்கத்தை முதலமைச்சரிடம் காண்பித்து மகிழ்ச்சி அடைந்தார். முன்னதாக பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் தேநீர் விருந்து அளித்தார்.

ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன், 18 வயதான இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா மோதினார். இந்த போட்டியில் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்செனிடம் தோல்வி கண்டார். இதன்மூலம் இறுதி போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக கோப்பை செஸ் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரக்ஞானந்தா தனது வெள்ளிப்பதக்கத்துடன் இன்று தமிழகம் திரும்பினார். சென்னை விமானநிலையத்தில் அவருக்கு மேள தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரக்ஞானந்தாவை அவரது பள்ளித்தோழர்கள், அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் மாநில அரசு பிரதிநிதிகள் உள்ளிட்டோர் விமானநிலையம் சென்று வரவேற்றனர்.

செய்தியாளர்களிடம் பேசிய பிரக்ஞானந்தா, "இங்கு நிறைய பேர் வந்திருப்பதைப் பார்த்து மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நான் உற்சாகமாக உணருகிறேன். இது செஸ்ஸூக்கு நல்லது என்று நான் நினைக்கிறேன் என்று கூறினார். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதிபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. தங்கம் வெல்ல முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் செஸ் சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெறுவதே முக்கியம் என்றும் தெரிவித்தார். அடுத்தடுத்து ஏராளமான செஸ் தொடர்கள் வருகின்றன. வழக்கம்போல் பயிற்சி எடுக்க வேண்டும். மக்கள் திரண்டு நின்று அமோக வரவேற்பு அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. புதிதாக விளையாட வருபவர்கள் நன்றாக என்ஜாய் செய்து விளையாடுங்கள். பிரசர் உடன் விளையாட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார் பிரக்ஞானந்தா.

இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு தனது பெற்றோருடன் சென்ற பிரக்ஞானந்தா அவரிடம் வாழ்த்து பெற்றார். உலக செஸ் தொடரில் வென்ற பதக்கத்தை முதல்வர் ஸ்டாலினிடம் காண்பித்து மகிழ்ச்சி அடைந்தார். அப்போது பிரக்ஞானந்தாவிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி வாழ்த்து கூறினார். பிரக்ஞானந்தாவிற்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகையை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications