விமானியின் உரையாடல்களை வைத்தே.. ஏர் இந்தியா விபத்து அறிக்கை பற்றி மத்திய அரசு கொடுத்த ரியாக்ஷன்
சென்னை: ஏர் இந்தியா விபத்து தொடர்பாக முதல் நிலை அறிக்கை வெளியாகி உள்ளது. இதில் விமானத்தில் உள்ள 2 என்ஜின்களுக்கும் எரிபொருள் செல்லாததன் காரணமாகவே, எரிபொருள் இல்லாமல் 2 என்ஜின்களும் செயல்பட முடியாமல் முடங்கி உள்ளன. மேலும் ஒரு விமானி மற்றொரு விமானியிடம் ஏன் எரிபொருள் செல்லும் லைனை அடைத்தீர்கள் என்று கேட்பது பதிவாகியிருந்தது. இந்த நிலையில், முதல் நிலை அறிக்கையை வைத்தே இறுதி முடிவுக்கு வர வேண்டாம் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு கூறியுள்ளார்.
ஏர் இந்தியா விபத்து தொடர்பாக முதல் நிலை அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், பொதுமக்கள் இந்த விவகாரத்தில் முதல் நிலை அறிக்கையை வைத்தே இறுதி முடிவுக்கு வர வேண்டாம் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு கூறியுள்ளார். விசாகப்பட்டினத்தில் இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அறிக்கையை முழுமையாக விமான போக்குவரத்து துறை அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது. இறுதி அறிக்கை வெளியான பிறகுதான் ஒரு முடிவுக்கு வர முடியும். விசாரணைக் குழுவுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் நாங்கள் ஒருங்கிணைத்து வழங்கி வருகிறோம். இறுதி அறிக்கை விரைவில் வெளியாகும் என்ற நம்பிக்கை உள்ளது. விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்களைப் பொறுத்தவரை, உலகின் சிறந்த விமானிகளும் விமானப் பணியாளர்களும் நம்மிடம் உள்ளனர்" என்றார்.
முன்னதாக விமான விபத்து தொடர்பாக விமானிகள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில், பைலட்கள்தான் குற்றவாளிகள் என்பது போல யூகித்து விசாரணை ஒரு குறிப்பிட்ட திசையை செல்வது போல இருக்கிறது. விசாரணை வெளிப்படத்தன்மையுடன் நடைபெற வேண்டும் என்று கூறியிருந்தது. இத்தகைய சூழலில்தால், மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு மேற்கண்டவாறு பேசியுள்ளார்.
270 பேரை காவு வாங்கிய விபத்து:
குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த மாதம் 12 ஆம் தேதி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 2 நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் 270 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக விமான விபத்து புலனாய்வு அமைப்பின் (ஏ.ஏ.ஐ.பி.) சிறப்புக் குழு விசாரணை நடத்தியது.
விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து பெறப் பட்ட தகவல்கள், உயிர் பிழைத்த பயணியின் வாக்குமூலம் அடிப்படையில் சிறப்பு குழு முதல் கட்ட விசாரணை நடத்தி விமான போக்குவரத்து துறையிடம் சில நாட்களுக்கு முன்பு அறிக்கையை கொடுத்தது. அந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து 15 பக்க முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. அதில், விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் பெட்ரோல் சுவிட்சுகள் அணைக்கப்பட்டு, இரு என்ஜின்களும் செயல் இழந்து உள்ளன.
என்ஜின்களுக்கு எரிபொருள் செல்லவில்லை
விமானம் புறப்பட்ட அடுத்த வினாடியே 2 என்ஜின்களுக்கும் எரிபொருள் செல்லவில்லை. எரிபொருள் இல்லாமல் 2 என்ஜின்களும் செயல்பட முடியாமல் முடங்கி உள்ளன. இதுவே விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது. மேலும் கறுப்பு பெட்டியில் விமானியின் கடைசி உரையாடல் தெள்ள தெளிவாக பதிவாகி இருக்கிறது. அதில் விமானத்தின் 2 என்ஜின்களும் எரிபொருள் இல்லாமல் முடங்கியதை விமானி சுட்டிக்காட்டி இருக்கிறார்.
என்ஜினுக்கான எரிபொருள் துண்டிக்கப்பட்டதும் ஒரு விமானி மற்றொரு விமானியிடம் ஏன் எரிபொருள் இணைப்பை துண்டித்தாய்? என்று கேட்கிறார். அதற்கு மற்றொரு விமானி நான் எரிபொருள் இணைப்பை துண்டிக்க வில்லை என்று சொல்வது விமானிகளின் உரையாடலில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் என்ஜின்கள் எரிபொருள் இல்லாமல் செயலிழந்தது உறுதியாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications