தேமுதிக யாருடன் கூட்டணி.. இன்று அறிவிக்கிறார் பிரேமலதா
சென்னை: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என்று 4 முனை போட்டி நிலவுகிறது. கூட்டணிகள் இறுதி செய்யப்பட்டுவிட்டன. ஒரு சில கட்சிகள் மட்டுமே கூட்டணியை அறிவிக்காமல் உள்ளனர். தேமுதிக, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் என்ன முடிவு செய்ய போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் கூட்டணி குறித்து தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் இன்று அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு சில வாரங்களே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்காக திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்காக அதிமுக - பாஜக கூட்டணி மல்லு கட்டுகிறார்கள். நாம் தமிழர் மற்றும் தவெகவும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். இதுவரை இல்லாதளவுக்கு தமிழ்நாட்டில் 4 முனை போட்டி நிலவுவது அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது.

தேமுதிக கூட்டணி
தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. திமுக, அதிமுகவில் கூட்டணியை கிட்டத்தட்ட இறுதி செய்துவிட்டனர். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட சில கட்சிகள் தான் கூட்டணி குறித்து அறிவிக்காமல் உள்ளனர். தேமுதிக தரப்பில் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி அவர்களின் மாநாட்டில் கூட்டணி பற்றி அறிவிப்பதாக கூறினார்கள்.
ஆனால் அதில் கூட்டணியை அறிவிக்கவில்லை. திமுக மற்றும் அதிமுக 2 கட்சிகளுடனும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. அமமுக இணைந்தபோதே தேமுதிகவும் அதிமுக - பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக கூறப்பட்டது. இருப்பினும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தங்களுடன் பேசவில்லை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறினார்.
பிரேமலதா இன்று அறிவிப்பு
தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், "தங்களுக்கு 20 தொகுதிகள் வரை தேவைப்படுகிறது. திமுக, அதிமுக 2 கூட்டணியும் சம பலத்துடன் உள்ளனர். தேமுதிக செல்லும் கூட்டணி வெற்றி பெறும்" என்று கூறியிருந்தார். பிரேமலதா கேப்டனின் ரத யாத்திரை என்கிற பெயரில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார். அந்த பயணம் நேற்று முன்தினம் கன்னியாகுமரியில் நிறைவடைந்தது.
அந்தக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா, "ஆளும், ஆண்ட கட்சிகளுக்கு தேமுதிக சிம்ம சொப்பனமாக தேமுதிக உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக பிரமாண்ட வெற்றியை பெறும். கூட்டணி குறித்து பிப்ரவரி 3 ஆம் தேதி (இன்று) சென்னையில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடுவேன்" என்று கூறியிருந்தார். இதன் மூலம் தேமுதிக கூட்டணி அறிவிப்பு இன்று காலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications