"இந்த வெளிச்சத்தில் நான் தெரியுறேனா?" விருத்தாசலம் மேம்பாலத்தில் இரவு நேரத்தில் பிரேமலதா ரெய்டு!
கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தொகுதி எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் இரவு நேரத்தில் பாலத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
விருத்தாசலத்தில் இரு நாட்கள் சுற்றுப்பயணம் செய்தார் பிரேமலதா விஜயகாந்த். அதில் முதல் நாளில் அரசு கொளஞ்சியப்பர் கல்லூரியில் சுகாதார விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இரண்டாவது நாளான நேற்று பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டு அங்கு வந்தவர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
மருத்துவமனை
விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று அங்குள்ள மருத்துவக் கட்டமைப்பு மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் ஆய்வு செய்தார். பழுதடைந்த நிலையில் இருந்த பயணிகள் நிழற்குடையை பார்வையிட்டு அதை புனரமைக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
புற்றுநோயால் அவதிப்பட்ட மூதாட்டி
அப்போது புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி ஒருவர் பிரேமலதாவின் காலில் விழுந்து மருத்துவ உதவி கேட்டார். அதற்கு பிரேமலதா, யார் காலிலும் விழக் கூடாதும்மா என அறிவுறுத்தி, தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வதாக வாக்குறுதி அளித்தார்.
விருத்தாசலத்தில் ரெய்டு
விருத்தாசலத்தில் உள்ள ஒரு பாலத்தில் விளக்குகள் இல்லை என்ற தகவலை அறிந்து பிரேமலதா அறிவுறுத்தலின் பேரில் விளக்கு போடப்பட்டது. ஆனால் அது போதிய வெளிச்சம் தரவில்லை என புகார் எழுந்தது.
பிரேமலதா
இதையடுத்து பிரேமலதா நேற்று இரவு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அந்த விளக்கு வெளிச்சத்தின் கீழ் நின்று தான் நிற்பது தெரிகிறதா என அங்கிருப்போரை கேட்டார். இரவு நேரத்தில் ஆள்கள் செல்வது கூட தெரியாத அளவுக்கு விளக்குகள் இருந்தால் விபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது.
தெருவிளக்கு
இதனால்தான் பிரேமலதா ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் அவ்வழியாக சென்ற பேருந்து ஓட்டுநர்களும் விளக்கு வெளிச்சம் போதவில்லை என்றனர். அதற்கு பிரேமலதா மாற்ற சொல்கிறேன், இது சோலார் விளக்கு, அதனால்தான் வெளிச்சம் குறைவாக இருக்கிறது என தெரிவித்தார்.
சோலார் விளக்கு
இதையடுத்து பிரேமலதா விஜயகாந்த், விளக்குகளை பொருத்தும் பணிக்கான ஒப்பந்ததாரை அழைத்து சோலார் விளக்கை நீக்கிவிட்டு நல்ல வெளிச்சம் தரும் விளக்கை போடுமாறு அறிவுறுத்தினார்.
குடிமகன்
அப்போது அங்கு வந்த நபர், "அம்மா அம்மா" என அழைத்தார். உடனே திரும்பிய பிரேமலதா, "என்ன வேண்டும் சொல்லுங்கள்" என்றார். அதற்கு அந்த நபர், சுடுகாட்டுக்கு போகும் பாதை சரியாக இல்லை, புதிய பாதை போட்டு கொடுங்கள்" என்றார்.
உடல்நலம்
அவர் குடித்துவிட்டு வந்ததை அறிந்த பிரேமலதா, "நான் சுடுகாட்டுக்கு பாதை போட்டு தருகிறேன். நீங்கள் குடிப்பதை நிறுத்திவிடுகிறீர்களா?" என கேட்டார். மேலும் அவர், "உடல்நலத்தை பார்த்துக் கொள்ள வேண்டும். குடிப்பதை யாராக இருந்தாலும் நிறுத்திவிடுங்கள்" என அறிவுரை வழங்கினார்.
முதல்முறை
முதல் முறையாக எம்எல்ஏவாகி இருக்கும் பிரேமலதா, சட்டசபையில் பேசிய கருத்துகள் கவனம் ஈர்த்தன. சட்டசபை ஊழியர்கள் டம்ளரில் தண்மீர் கொடுப்பது, நீண்ட நேரம் நின்று கொண்டும், இயற்கை உபாதைகளுக்கு கூட செல்ல முடியாமல் சட்டசபை கேமராமேன்கள் ரெஸ்டே இல்லாமல் நிகழ்வுகளை நேரலை செய்வது உள்ளிட்ட மனிதாபிமான விஷயங்களை அவைத் தலைவரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
விஜய்யை விமர்சித்த பிரேமலதா
அது போல் தொகுதி மக்களின் கோரிக்கைகளையும் ஆணித்தரமாக எடுத்துரைத்தார். ஜோதிடர் ரத்தன் பண்டிட்டுக்கு அரசு பதவி கொடுத்த விவகாரத்தில் முதல்வர் விஜய்யை நேருக்கு நர் கேள்வி எழுப்பினார். இவர் சட்டசபையில் கேள்வி எழுப்பியதும்தான் அந்த பண்டிட்டுக்கான அரசு பதவி உத்தரவு உடனே ரத்தானது. கேப்டன் விஜயகாந்தை போல் பிரேமலதாவும் சட்டசபையில் கர்ஜித்து வருகிறார் என தேமுதிகவினர் கொண்டாடி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
