பாஜக வழியாக அதிமுகதான் எங்களுடன் கூட்டணி பேச்சுக்கு வந்தது.. நாங்களாக செல்லவில்லை.. பிரேமலதா
சென்னை: பாஜக வழியாக அதிமுக தான் எங்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வந்தது என பிரேமலதா செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் பாஜக வழியாக அதிமுகதான் எங்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வந்தது. அதிமுகவிடம் கூட்டணிக்காக தேமுதிக செல்லவில்லை.
நேற்றைய தினம் பேட்டியில் தேமுதிகவுக்கு பக்குவம் இல்லை என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு நாங்கள் கூட்டணி வருகிறோம் என்ற தகவலை அறிந்து தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லவிருந்த ஜெயலலிதா தனது பயணத்தை ரத்து செய்து விட்டு விஜயகாந்துடன் பேச்சுவார்த்தை நடத்தி 41 தொகுதிகளை கொடுத்து அந்த கூட்டணியை வெற்றிக் கூட்டணியாக மாற்றினார்.

தேமுதிக
ஆனால் ஜெயலலிதாவிடம் இருந்த பக்குவம் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமியிடம் இல்லை. இந்த கூட்டணியை வெற்றி கூட்டணியாக மாற்றும் பக்குவம் எடப்பாடியாரிடம் இல்லை. முதலில் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தாது குறித்து கேட்டோம். அதற்கு தேமுதிக கெஞ்சுகிறது என ஊடகங்கள் கூறின.

25 தொகுதிகள்
கடைசி நேரத்தில் தொகுதிகளையும் வேட்பாளர்களையும் அறிவித்தால் எப்படி பிரச்சாரம் செய்வது எனவே கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்குங்கள் என்ற அர்த்தத்தில்தான் நான் கூறினேன். எல்லா கட்சிகளையும் அழைத்து பேசிவிட்டு எங்களை அழைத்தார்கள். நாங்கள் 41 தொகுதிகளை கேட்டோம், மறுத்தார்கள், பின்னர் 25 தொகுதிகளை கேட்டோம்.

கூட்டணி ஒப்பந்தம்
அப்போது அதிமுக மறுத்துவிட்டது. இதையடுத்து விஜயகாந்திடம் பேசிவிட்டு 18 தொகுதிகளையும் ஒரு ராஜ்யசபா சீட்டையும் கேட்டோம். ஆனால் அதிமுகவோ 13 சீட்டுகள் மட்டுமே கொடுப்போம் என பிடிவாதம் பிடித்தது. சரி அந்த 13 சீட்டுக்கான தொகுதிகள் எவை என கூறுமாறு சுதீஷ் கேட்டார், ஆனால் அதிமுகவோ முதலில் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுங்கள், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என எடப்பாடியார் கூறினார்.

விஜயகாந்த்
13 தொகுதிகளுக்கு விஜயகாந்த் ஒப்புக் கொள்ள மாட்டார் என சுதீஷ் கூறியதற்கு உங்களுக்கு விருப்பமான முடிவை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என எடப்பாடி கூறிவிட்டார். இதையடுத்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 13 தொகுதிகளுக்கு யாரும் ஒப்புக் கொள்ளவில்லை.

13 தொகுதிகள்தான் என கறார்
இதையடுத்து கூட்டணியிலிருந்து விலகும் முடிவுக்கு விஜயகாந்த் வந்தார். ஆனால் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்னர் சுதீஷ் முதல்வரை தொடர்பு கொண்டு போன் மூலம் கேட்டார். அவரிடம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நடந்தவற்றை கூறினார். அப்போதும் 13 தொகுதிகள்தான் கொடுக்கமுடியும். உங்கள் முடிவை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என சொல்லிவிட்டார்கள்.

ஒரே நேரத்தில்
இருப்பதே 3 கூட்டணிதான், ஒன்று பாஜக, பாமக, தேமுதிக. இவற்றை ஒரே நாளில் அழைத்து யாருக்கு எத்தனை தொகுதிகள் என பேசியிருக்க வேண்டும். அதை விடுத்துவிட்டு தனித்தனியாக அழைத்து பேசினார்கள். நாங்கள் எல்லாவற்றுக்குமே பொறுமையாக இருந்தோம். பக்குவமாகவும் விட்டு கொடுத்தே இந்த கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தினோம். இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்.

முதல்வர் பதவி
எங்களுக்கு பக்குவம் இல்லை என்கிறார், இவர் எப்படி முதல்வர் பதவியை வாங்கினார் என்பது எல்லாருக்கும் தெரியும். அந்த பக்குவம் யாருக்கும் வராது. நாங்கள் கூட்டணியை விட்டு வெளியேறிய போது பாஜகவின் பொன் ராதாகிருஷ்ணன் என்னை தொடர்பு கொண்டு கேட்டார். எல்லாம் முடிந்துவிட்டது, இனி இப்போதும் பேசி பலனில்லை, நீங்கள் முன்னரே பேசியிருக்க வேண்டும் என நான் கூறிவிட்டேன்.

60 தொகுதிகள்
எங்களுடன் தினகரன் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் எங்கள் கூட்டணி அமோக வெற்றி பெற்று தமிழக அரசியலில் சரித்திரம் படைக்கும். வாக்கு சதவீதத்தின் அடிப்படையில்தான் தொகுதி எண்ணிக்கை என்றால், அதிமுக கடந்த தேர்தலில் 18 சதவீதம் பெற்றது. அப்போ அந்த வாக்கு வங்கியின் அடிப்படையில்தான் இத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறதா? என பிரேமலதா கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications