“ஃப்ளைட் பிடித்துச் சென்ற விஜய் இன்று வரை வெளியே வரவில்லை”.. பிரேமலதா விஜயகாந்த் சரமாரி தாக்கு
கிருஷ்ணகிரி: "ஒரு கட்சி என்றால் தைரியம் இருக்க வேண்டும். வீரம் இருக்க வேண்டும். நம்மால் ஒரு குடும்பத்துக்கு பாதிப்பு என்றால் முதல் ஆளாக நிற்க வேண்டும். அன்று விமானம் பிடித்து வீட்டுக்கு சென்ற விஜய் இன்று வரை வெளியில் வரவில்லை." என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கடுமையான நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் குறித்து ஆவேசமாகப் பேசியுள்ளார்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் உள்ளம் தேடி இல்லம் நாடி என்னும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் இன்று கிருஷ்ணகிரியில் சுற்றுப்பயணம் நடத்தினார். அப்போது பேசிய அவர், "வெளி நாட்டுக்கு சென்று என்ன முதலீடுகளை ஈர்த்து வந்தீர்கள், எத்தனை தொழிற்சாலைகளை உருவாக்கினீர்கள் என வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இளைஞர்களுக்கு இந்த அரசு எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். கர்நாடகாவின் கழிவு நீர் கே.ஆர்.பி அணையில் கலப்பதை நிறுத்த உறுதி செய்ய வேண்டும்.
கரூரில் பாதுகாப்பு கொடுக்க தெரியாமல் 41 உயிர்களை பலி கொடுத்து இருக்கிறார்கள். 9 நாட்கள் ஆகிறது. மாநில, தேசிய நெடுஞ்சாலையில் மக்களை சந்திக்க கூடாது என தடை விதிக்கிறார்கள். மக்கள் எங்கு உள்ளார்களோ அங்கு தான் சென்று சந்திக்கும் யாரோ செய்த தவறுக்கு ஏன் தேமுதிகவை வஞ்சிக்கிறீர்கள். இன்று இருப்பவர்கள் பேசுவது சினிமா வசனம். அன்று விமானம் பிடித்து வீட்டுக்கு சென்றவர் இன்று வரை வெளியில் வரவில்லை.
விஜய் மக்களை நேரடியாக சென்று சந்திக்க வேண்டும். அவர் அறிவித்த பணத்தை நேரில் சென்று வழங்க வேண்டும். புஸ்ஸி ஆனந்த் தலைமறைவு என சொல்கிறார்கள். ஏன் மறைய வேண்டும், தூக்கிலா போட்டு விடுவார்கள், தலையை வாங்கி விடுவார்களா? எதையும் எதிர்கொள்ள தைரியம் வேண்டும். கரூர் சம்பவத்தில் இரு தரப்பு மீதும் தவறு உள்ளது.
இன்றைக்கு இவ்வளவு கட்டுப்பாடு விதித்தீர்கள், அதை தேமுதிக மதிக்கிறது. ஆனால் கரூரில் குறுகலான பகுதியில் பேச அனுமதி கொடுத்தது யார்?ஆம்புலன்ஸ் வாகனத்தை கூட்டத்தில் அனுமதித்தது யார்? ஆம்புலன்ஸ் வந்ததால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. விஜய் பேசும்போது யார் செருப்பு, கல் வீசியது இதற்கு அரசு பதில் கூற வேண்டும். இதுவரை செருப்பு வீசிய நபரை அரசு கைது செய்யவில்லை ஏன்? கட்சி தொண்டன் அந்தக் காரியத்தை செய்வானா? உள்ளூர் ரவுடிகள் தான் அந்தக் காரியத்தைச் செய்துள்ளனர். யார் மறைத்தாலும் உண்மை ஒரு நாள் வெளியில் வரும். கூட்டத்தை கட்டுப்படுத்த போதிய காவல்துறை இல்லை. ஆட்சியாளர்கள் வருகிறார்கள் என்றால் 10,000 போலீசார் நிற்கின்றனர்.
நம்மால் ஒரு குடும்பத்துக்கு பாதிப்பு என்றால் முதல் ஆளாக நிற்க வேண்டும். குறித்த நேரத்தில் விஜய் வரவில்லை. உங்களை பார்க்கத்தானே குழந்தைகளை வைத்துக் கொண்டு தாய்மார்கள் உட்பட அனைவரும் காலை முதல் சாலையில் நிற்கிறார்கள். அந்த பொறுப்பு வேண்டாமா?
7 மணிக்கு நிகழ்ச்சி என்றால் 7 மணிக்கு அங்கு இருக்க வேண்டும். நீங்கள் வீட்டில் இருந்தே தனி விமானத்தில்தான் வருகிறீர்கள். விஜயகாந்த் 150 படங்கள் நடித்துள்ளார். படப்பிடிப்புக்கு அவர்தான் மேக்கப் உடன் முதல் ஆளாக வந்து நிற்பார். இந்த கடமை உணர்வை தவற விட்டிருக்கிறார் விஜய். அவர் படப்பிடிப்புக்கு சரியாக போய்விடுவார். ஆனால் அரசியலுக்கு இப்போதுதான் வந்திருக்கிறார். நாங்கள் கட்சி ஆரம்பித்தபோது காவல்துறை சப்போர்ட் கிடையாது. ஆனால் நாங்கள் அமைத்த தொண்டர் படை தான் மக்களை பாதுகாத்தது. மின்சாரம் நிறுத்தப்பட்டதால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது, ஜெனரேட்டர் தான் ஆஃப் ஆனது என கூறுவது பொய்.
ஏன் அரசாங்கத்தையும், காவல்துறையும் நம்பி நீங்கள் போகிறீர்கள்? உங்களை நம்பி வந்த மக்களுக்கு நீங்கள் என்ன பாதுகாப்பு கொடுத்தீர்கள்? நம்பி வந்தவர்களுக்கு, தண்ணீர், சாப்பாடு, பாதுகாப்பு கொடுக்க வேண்டும். ஏதோ கூண்டுக்குள் புகுந்து கொள்வதை போல அவர் பேருந்துக்குள் புகுந்துகொள்கிறார். 4 மணி நேரம் நின்று வரவேண்டியது தானே விஜய். விஜயகாந்த்தை அண்ணன் என கூறும் விஜய், அண்ணன் என்ன செய்தார் என கற்றுக்கொள்ள வேண்டும். விஜய்யை நம்பி வந்த அனைவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இன்று வரை வெளியில் வராதது தவறு. கைது செய்தால் கைது செய்து கொள்ளட்டும். கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயம் குடித்து மக்கள் செத்தார்கள். இன்று சென்றவர்கள் ஏன் கள்ளகுறிச்சி செல்லவில்லை. இது அனைத்துக்கும் பின்னால் அரசியல் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications