பிரதமர் நரேந்திர மோடிக்கு 72வது பிறந்தநாள்! வாட் நகர் டூ நாட்டின் தலைநகர்! ருசிகர பின்னணி தகவல்!
சென்னை: பிரதமர் மோடி இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு உள்ளூர் தொடங்கி உலகத் தலைவர்கள் வரை வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து அரசியலில் படிப்படியாக முன்னேறி நாட்டின் உயர்ந்த பீடத்தை அடைந்த பெருமைக்கு சொந்தக்காரர்.
வாஜ்பாய் ஆட்சிக்க்கு பிறகு சரிவை சந்தித்து வந்த பாஜகவை பீனிக்ஸ் பறவையாக மாற்றி உயர பறக்க வைத்திருக்கும் அரசியல் வித்தகர்.

குஜராத்
இன்று நாட்டுப்பணியில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, தனது சிறுவயதில் அம்மாவுக்கு உதவிக்கரமாக வீட்டுப்பணி செய்தவர். பள்ளி முடிந்ததும் வாட் நகர் ரயில் நிலையத்தில் தனது தந்தை நடத்தி வந்த தேநீர் கடைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்த மோடி, அங்கு அவருக்கு தேவையான பணிவிடைகளை செய்வார். பருவ வயதில் மோடியின் நண்பர்கள் பலரும் விளையாட்டு, கேலி கிண்டல் எனச் சுற்றித்திரிய இவர் மட்டும் குடும்ப பொறுப்பை தாங்கி நின்றார்.

வித்தியாசம்
பிரதமர் மோடியை பொறுத்தவரை தனது சிறுவயதில் இருந்தே எந்த ஒரு காரியத்தையும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என விரும்புவர். சவால்களை ஏற்று அதை வெல்ல வேண்டும் என நினைப்பவர். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் பத்தோடு பதினொன்றாக இருந்துவிட்டு போவது அவருக்கு பிடிக்காத ஒன்று என்பது அவரை நெருங்கி அறிந்தவர்கள் கூறிய தகவல். அந்த வைராக்கியமும், லட்சியமும் தான் அரசியலில் கடும் எதிர்ப்புகளையும் மீறி அவரை இந்த உயரத்துக்கு அழைத்து வந்துள்ளது.

விமர்சனங்கள்
தன் மீதான விமர்சனங்களை கண்டு எப்போதும் கலங்காதவர் மோடி. தனது நடை, உடை, பேச்சு, உள்ளிட்ட விவகாரங்களில் அதிக கவனம் செலுத்தக்கூடியவர். எப்போதும் நேர்த்தியான ஆடை அணிந்து கம்பீரமாக காட்சியளிக்க வேண்டும் என நினைப்பவர். காலத்தின் மாற்றத்திற்கேற்ப தன்னை அப்டேட் செய்துக்கொள்ளும் தலைவராக உலக அரங்கில் திகழ்பவர்.

கெட்டிக்காரர்
பிரதமர் மோடியின் உரையை சற்று கூர்ந்து கவனித்தால் ஒன்று புரிய வரும். அவரது மேடைப் பேச்சுகள் எவ்வித பிசிறுமின்றி சொல்ல வரும் கருத்தை வெகுஜன மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் நயமாக எடுத்துரைப்பதை காண முடியும். அதேபோல் ஒருவரை பார்த்து பேசிய சில நிமிடங்களில் அவரது குணாதிசயங்கள், திறமைகளை துல்லியமாக கணிக்கக்கூடிய ஆற்றல் பிரதமர் மோடிக்கு உள்ளதாக பத்திரிகையாளர் வினோத் கே.ஜோஸ் என்பவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications