தேர்தல் களம் சூடு பிடித்தது... நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி
சென்னை: பிரதமர் மோடி நாளை சென்னை வருவதை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தேமுதிகவுடன் ஏறக்குறைய கூட்டணி உறுதியாக உள்ள சூழ்நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் அனல் பிடிக்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் நாளை சென்னை வண்டலூரில் நடக்க உள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

பிரதமர் மோடி பங்கேற்பு
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். டெல்லியில் இருந்து சென்னைக்கு தனி விமானம் மூலம் வரும் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வண்டலூர் பொதுக்கூட்டத்திற்கு வரவுள்ளார்.

பலத்த பாதுகாப்பு
இதற்காக மூன்று ஹெலிபேடுகள் அமைக்கும் பணியும், பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. அதேநேரம் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

கருப்புக் கொடி போராட்டம்
முன்னதாக, கடந்த ஒன்றாம் தேதி கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடிக்கு எதிராக வைகோ தலைமையில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது. அப்போது பாஜகவினர் கல்வீசி நடத்திய தாக்குதலில் சிலருக்கு மண்டை உடைந்தது. இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். கூட்டம் ஒரு புறம் ; போராட்டம் மறுபுறம் என சலசலப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மதிமுகவினர் 400க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

விஜயகாந்த் பங்கேற்க வாய்ப்பு
இதற்கிடையே, நாளை நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் பங்கேற்பார் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications