பல்லடத்திற்கு 27ம் தேதி வரும் பிரதமர் மோடி.. ஏர்போர்டிலேயே அண்ணாமலை சொன்ன 2 முக்கியமான மேட்டர்
சென்னை: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 'என் மண் என் மக்கள்' யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 27-ம் தேதி தமிழகம் வருகை தர உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
டெல்லியில் பாஜக தேசிய கவுன்சில் கூட்டம் கடந்த இரண்டு நாட்கள் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி சென்றிருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நேற்று சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசுகையில், "டெல்லியில் கடந்த இரண்டு நாட்கள் பாஜக தேசிய கவுன்சில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 2047-இலக்கு வளர்ச்சி அடைந்த பாரதம். எதிர்க்கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியல் ஆகிய 2 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படடிருக்கிறது. சிறப்பு தீர்மானமாக ராமர் கோவில் கட்டிட திறப்புக்கு சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு நன்றி சொல்லி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக நேரம் வரும் போது நிச்சயம் பேசுவோம். அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. வருகிற பிப்ரவரி 27 மற்றும் 28-ந்தேதிகளில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார். வருகிற 27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மதியம் 2 மணியளவில் பல்லடத்தில் நடைபெறும் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
டெல்லியில் பாரத் மண்டபத்தில் நடந்த தேசிய கவுன்சில் கூட்டத்தில் 11 ஆயிரத்து 700 உறுப்பினர்கள் பங்கேற்றனர். உணவு இடைவெளியில் டீ சாப்பிடுவதற்கு கூப்பிட்டார்கள். அப்போது நீங்கள் எங்களுடன் வந்து அமர வேண்டும் என்று கேட்டதால் அவர்களுடன் தரையில் அமர்ந்து பாரத் மண்டபத்தில் பிரதமர் பேசிய உரையை நான் கேட்டேன். பாஜகவில் இதெல்லாம் சாதாரணம். யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் அமரலாம். பிரதமர் மோடியிடம் நேரடியாக சென்று பேசலாம். அருகில் அமர்ந்து சாப்பிடலாம். நானும் சாதாரண தொண்டன் தான்.
2024 தேர்தலில் இப்போதே தோல்வியை ஒப்புக்கொண்ட திருமாவளவன், மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் பிரதமர் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டதாக சப்பக்கட்டு கட்டியிருக்கிறார். தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வப் பெருந்தகைக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பணி சிறக்கட்டும்." இவ்வாறு அண்ணாமலை கூறினார்.












Click it and Unblock the Notifications