"தினமும் ஆஜராகணும்.." தனியார் பள்ளி உரிமம் வழங்க ரூ.100 கோடி மோசடி புகார்! பிடி அரசகுமாருக்கு ஜாமீன்
சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வாங்கி தருவதில் ரூ.100 கோடி பணமோசடி செய்ததாக புகாரில் கைதான தனியார் பள்ளிகள் சங்க தலைவர் பி.டி.அரசகுமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. டி. அரசகுமாருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட சென்னை ஊழல் தடுப்பு நீதிமன்றம், விசாரணை அதிகாரி முன்பு தினமும் காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதித்துள்ளது.
விஜய் தலைமையிலான தவெக ஆட்சிய அமைந்தவுடனேயே கடந்த திமுக ஆட்சி தொடர்பாக சில புகார்கள் கிளம்பின. அதில் முக்கியமானது தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வாங்கி தொடர்பானது. அதாவது கடந்த ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வாங்கி தருவதில் மோசடி நடந்ததாகவும் பணம் கொடுத்தால் மட்டுமே அனுமதி கிடைத்ததாகவும் புகார்கள் எழுந்தன.

சுமார் ரூ.100 கோடி அளவுக்கு இதில் மோசடி நடந்ததாக சொல்லப்பட்ட நிலையில், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்தச் சூழலில் தான் அவருக்கு ஜாமீன் வழங்கி சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் அரசகுமாருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், விசாரணை அதிகாரி முன்பு தினமும் காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கில் தொடர்புடைய சாட்சிகளை கலைக்க முயல கூடாது என்றும் விசாரணையின்போது தலைமறைவாகக் கூடாது என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி பணம் பெற்றதாக பி.டி.அரசகுமார் மீது புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் சுமார் ரூ.100 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசகுமார் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்த நிலையில் தான் இப்போது நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க.. இதற்கிடையே பி.டி.அரசகுமாருடன் தொடர்புடைய இடங்களில் நேற்றைய தினம் தான் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தியிருந்தனர். முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸின் உதவியாளர்களின் வீடுகள், பிடி அரசகுமாரின் வீடு மற்றும் தலைமறைவாக உள்ள முத்துகுமாரின் வீடு உள்ளிட்ட மொத்தம் 5 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றதாக மத்திய குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. அதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
5 இடங்களில் நடைபெற்ற சோதனையில் மொத்தம் 44 ஆவணங்கள் மற்றும் ஒரு லேப்டாப் கைப்பற்றப்பட்டுள்ளன என மத்திய குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. அதில் கல்வி நிறுவனங்களிடமிருந்து பணம் பெற்றது தொடர்பான ஆவணங்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த வழக்கில் நாளுக்கு நாள் விசாரணையும் தீவிரமடைந்து வரும் நிலையில், வரும் நாட்களில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications
