ம.பி.யில் இருந்து புகார் வந்ததுமே நடவடிக்கை.. இருமல் மருந்து பலி விவகாரம் தொடர்பாக அமைச்சர் விளக்கம்
சென்னை: மத்திய பிரதேசத்தில் கோல்ட்ரிப் இருமல் மருத்து குடித்து 25 குழந்தைகள் இறந்தது குறித்து சட்டசபையில் இன்று எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். தகவல் கிடைத்த 2 நாட்களில் சர்ச்சைக்குரிய மருத்து தயாரிப்பு நிறுத்தப்பட்டது. மருந்து தயாரிப்பு நிறுத்தப்பட்டு நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து குடித்து குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இதன் பின்னணியில் தமிழகத்தை சேர்ந்த நிறுவனம் செயல்பட்டது தெரிவித்தது. அந்த நிறுவனத்தின் மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் அதிமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "23 உறுப்பினர்கள் இருமல் மருந்து விவகாரம் தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்த்துள்ளனர். இதுதொடர்பான அறிக்கை ஏற்கன்வே தரப்பட்டுள்ளது. இருப்பினும் பேசியவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் எனது கருத்துகளை முன்வைக்கிறேன். கோல்ட்ரிப் மருந்து என்பது கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி பிற்பகல் 3 மணியளவில் மத்திய பிரதேச மாநில மருந்து கட்டுப்பாட்டு துறையிடம் இருந்து தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு ஒரு கடிதம் பெறப்பட்டது.
4-9-25 அன்று மத்தியப் பிரதேசம் சிந்துவாரா மாவட்டத்தில் குழந்தை கோல்ட்ரிப் மருந்து சாப்பிட்டு இறந்துவிட்டது. அதில் வேதிப் பொருட்கள் தொடர்பான விவரங்களும் குறிப்பிடப்பட்டிருந்தன. அன்றைய தினம் 4 மணிக்கு துணை மருந்து கட்டுப்பாட்டு இயக்குநர் உத்தரவின் பேரில் முதுநிலை மருந்து ஆய்வாளர் தலைமையில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சென்று ஆய்வு மேற்கொள்கிறார்கள். இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்பது இந்த நிறுவனத்திடம் இருந்து தமிழக அரசு கொள்முதல் செய்வது இல்லை.
இந்நிலையில் கோல்ட்ரிப் மருந்தை தனியார் யாரும் வாங்கி விற்பனை செய்யக் கூடாது என்ற நோக்கில் தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பிக்கிறது. 1-10-25, 2-10-25 ஆகிய இரண்டு நாட்களில் மேற்கொண்ட ஆய்வில் விதிமீறல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கோல்ட்ரிப் உள்ளிட்ட 5 மருந்துகள் சென்னைக்கு பகுப்பாய்விற்கு கொண்டு வரப்படுகின்றன. அதில் டை எத்திலீன் கிளைக்கால் 48.6 சதவீதம் இருப்பது கண்டறியப்படுகிறது. இது வேதிப்பொருள். உயிருக்கு ஆபத்தானது என்று தெரிய வருகிறது.
இந்த சூழலில் கோல்ட்ரிப் மருந்தை புதுச்சேரி, ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து வாங்கி சென்றுள்ளனர். அங்கேயும் இந்த மருந்தை சாப்பிட்டிருந்தால் மோசமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும். எனவே மேற்சொன்ன இரண்டு மாநிலங்களுக்கும் தமிழக அரசு உடனடியாக தகவல் அனுப்பியது. மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் மருந்து தயாரிப்பிற்கு தடை விதிக்கப்பட்டு முழுவதுமாக மூடப்படுகிறது. இந்த நிறுவனத்தின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று கேள்வி எழுப்பி நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. உடனடியாக மூட முடியாது. ஏனெனில் நீதிமன்றத்திற்கு சென்று விடுவார்கள்.
இந்த விவகாரத்தில் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இதையத்து உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்படுகிறார். இதுபோல் எந்த மருந்து நிறுவனம் தவறு செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications