சொத்து வைத்திருப்பவர்களுக்கு செம ட்விஸ்ட்.. டவுன் சர்வே ஆவணம் இல்லையெனில் வீடு கட்ட அனுமதி மறுப்பு
சென்னை: தமிழ்நாட்டில் டவுன் சர்வே முடிக்கப்பட்ட நிலங்களுக்கு டி.எஸ்.எல்.ஆர். ஆவணம் வழங்கப்பட்டாலும், கட்டட அனுமதி பெற பழைய பட்டாவைக் கேட்டு அதிகாரிகள் பொதுமக்களை அலைக்கழிப்பதாக புகார் கிளம்பி உள்ளதாம்.. வருவாய்த்துறை உத்தரவிட்டும் உள்ளாட்சி அமைப்புகள் அதை மதிக்காததால், வீடு கட்டுவோர் கட்டட அனுமதி பெறுவதில் பெரும் சிக்கல் நீடிப்பதாக சோஷியல் மீடியாவிலும் செய்திகள் வலம் வருகின்றன.. என்னதான் பிரச்சனை?
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சிகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பரப்பளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உள்ள நிலங்களை முறையாக அளவீடு செய்து, ஆவணப்படுத்தும் பணிகள் வருவாய்த்துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக "டவுன் சர்வே" எனப்படும் நகர நில அளவை முறை பின்பற்றப்படுகிறது.

நிலத்தின் சர்வே எண்கள்
இந்த முறையின் கீழ், நிலங்கள் துல்லியமாக அளக்கப்பட்டு, புதிய சர்வே எண்கள் ஒதுக்கப்படுகின்றன. இந்த செயல்முறை முடிந்த பிறகு, நிலத்தின் சர்வே எண், சரியான அளவு, வகைப்பாடு, உரிமையாளரின் பெயர், தீர்வை உள்ளிட்ட அனைத்து விபரங்களும் அடங்கிய Town Survey Land Record - TSLR எனப்படும் டி.எஸ்.எல்.ஆர். ஆவணம் வழங்கப்படுகிறது.
டவுன் சர்வே பணிகள்
இந்த ஆவணங்கள் அனைத்தும் அரசின் இணையதளத்திலும் அதிகாரப்பூர்வமாகப் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. டவுன் சர்வே பணிகள் முழுமையாக முடிந்த இடங்களில், இந்த டி.எஸ்.எல்.ஆர். ஆவணத்தை அந்த நிலத்தின் முழுமையான பட்டாவாகக் கருத வேண்டும் என வருவாய்த்துறை ஏற்கனவே தெளிவான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இதன் அடிப்படையில்தான் நில விற்பனை, பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளைப் பொதுமக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், தற்போது ஒரு முக்கியப் பிரச்சனை எழுந்துள்ளது. அதாவது டவுன் சர்வே முடிந்து டி.எஸ்.எல்.ஆர். அறிக்கை வழங்கப்பட்ட இடங்களிலும், கட்டட அனுமதி வழங்கும் துறைகள் இந்த ஆவணத்தைப் பட்டாவாக ஏற்க மறுப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இதனால் பொதுமக்களும், நில உரிமையாளர்களும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். டவுன் சர்வே அறிக்கையை பட்டாவாக ஏற்க சில அரசுத்துறைகள் மறுப்பதால், கட்டட அனுமதி பெறுவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
TSLR டி.எஸ்.எல்.ஆர். ஆவணம்
இது குறித்து தேசிய ரியல் எஸ்டேட் வளர்ச்சி கவுன்சிலின் தமிழக துணை தலைவர் பி.மணிசங்கர் ஒரு சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் சொல்லும்போது, டி.எஸ்.எல்.ஆர். எனப்படும் டவுன் சர்வே அறிக்கையை பட்டாவாகக் கருத வேண்டும் என அரசு அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்திருந்தாலும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் அதை மதிப்பதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஒரு நபர் முறையாக கட்டட அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும்போது, இந்த டி.எஸ்.எல்.ஆர். அறிக்கையுடன் சேர்த்து, பழைய பட்டாவையும் தாக்கல் செய்ய வேண்டும் என அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர்.
பழைய பட்டா
இதனால், டவுன் சர்வே முடிந்து பல ஆண்டுகள் கடந்த இடங்களிலும் வீடு கட்டுவோர் பெரும் அலைக்கழிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. பழைய பட்டா இல்லாதவர்கள் அல்லது தொலைந்து போனவர்கள், தற்போது உள்ள சூழலில் அதைத் தேடி அலைவதால் நேர விரயம் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அரசு கொடுத்த ஆவணத்தை ஏற்க மறுக்கும் துறைகளுக்கு, உரிய அறிவுறுத்தல்களை அரசு வழங்க வேண்டும். அப்போதுதான் பொதுமக்கள் எந்தப் பிரச்சனையும் இன்றி கட்டட அனுமதியைப் பெற்று வீடு கட்ட முடியும்.
நிலப் பதிவுகள் நவீனமயமாக்கப்படும் இந்த சூழலில், டவுன் சர்வே அறிக்கையை முழுமையாக ஏற்றுக்கொள்வதில் உள்ள தயக்கம், அரசின் கொள்கைக்கே முரணாக உள்ளது.
எனவே, இது குறித்து சம்பந்தப்பட்ட துறைகளின் உயர் அதிகாரிகள் தலையிட்டு, டவுன் சர்வே அறிக்கையை பட்டாவாக ஏற்றுக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பான தெளிவான அரசாணைகளை அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அனுப்பி, நடைமுறை சிக்கல்களை உடனே களைய வேண்டும். மக்கள் நலன் கருதி, நில நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்..!!












Click it and Unblock the Notifications