பத்திரப்பதிவு செய்ய போறீங்களா.. சொத்து விற்பனை பத்திரப்பதிவில் வந்தது மாற்றம்.. தமிழக அரசு சபாஷ் முடிவு
சென்னை: பத்திரப்பதிவு துறையில் பல்வேறு அதிரடிகளை தமிழக அரசு செய்துள்ளது.. அந்தவகையில், தற்போதும் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல காலமாகப் பதிவுத்துறைக்கான கட்டணம் உயர்த்தப்படாமலேயே இருந்த நிலையில், கடந்த 10ம் தேதி தான் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
ரசீது கட்டணம்: குறிப்பாக, ரசீது ஆவணத்திற்குப் பதிவு கட்டணம் ரூ.20/-லிருந்து ரூ.200/- எனவும், குடும்ப நபர்களுக்கு இடையேயான செட்டில்மெண்ட், பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவு கட்டணம் ரூ.4,000/-லிருந்து ரூ.10,000/- எனவும், அதிகபட்ச முத்திரை தீர்வை ரூ.25,000/-லிருந்து ரூ.40,000/- எனவும் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

இதைத்தவிர, தனி மனை பதிவிற்கான கட்டணம் ரூ.200/-லிருந்து ரூ.1,000/- எனவும், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்குப் பதிவுக்கட்டணம் ரூ.10,000/- என்று உள்ளதைச் சொத்தின் சந்தை மதிப்பிற்கு ஒரு சதவீதம் என்றும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
கட்டண உயர்வு: இந்த கட்டண உயர்வு, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது... இந்த கட்டண உயர்வால், புதிதாக வீடு வாங்க நினைப்பவர்களுக்கு ஒருவித தயக்கம் ஏற்படும் என்றும், அதிலும், செட்டில்மென்ட் பத்திரத்தை பதிவு செய்ய, 10,000 ரூபாய் செலுத்த வேண்டும் என்பது, வெகுஜன மக்களை கடுமையாக பாதிக்கும் என்பதால், செட்டில்மென்ட் பத்திரத்துக்கான கட்டண உயர்வை பழைய நிலைக்கே அரசு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
பிஏஐ மனு: இப்படிப்பட்ட சூழலில், பொது அதிகார ஆவண பதிவு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பிஏஐ எனப்படும் இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கத்தின் தென்னக மையமும் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு மனு ஒன்றையும் அனுப்பியிருக்கிறது. முதல்வர் ஸ்டாலின், பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோருக்கு இந்த சங்கத்தின் தலைவர் ஏஎன் பாலாஜி அந்த மனுவை அனுப்பி, கட்டணங்களையும் குறைக்க வலியுறுத்தி உள்ளார்.
எனவே, இதுகுறித்து அரசு பரிசீலித்து விரைவில் அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.. இந்நிலையில், பத்திரப்பதிவில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் வகையில், "ஸ்டார் 3.0" சாப்ட்வேர் தயாரிக்கும் பணிக்கு, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.. இதுதொடர்பாக, பதிவுத் துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.
அறிக்கை வெளியீடு: அந்த அறிக்கையில் உள்ளதாவது: தமிழகத்தில் சொத்து பரிமாற்றங்கள் தொடர்பான பத்திரப்பதிவு பணிகள் இப்போது, 'ஸ்டார் 2.0' மென்பொருள் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன. இதில் செயற்கை நுண்ணறிவு, 'மிஷின் லேர்னிங்' உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தும் வகையில், 'ஸ்டார் 3.0' மென்பொருள் தயாரிக்கப்படும் என்று சட்டசபையில் பதிவுத் துறை அமைச்சர் அறிவித்து இருந்தார்.
அதன்படி, 323 கோடி ரூபாயில் 'ஸ்டார் 3.0' மென் பொருளை தயாரித்து, அடுத்த ஆண்டில் அமல்படுத்தும் பணிக்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிறப்புக்குழு: இந்த திட்டத்தை கண்காணிக்க, தலைமை செயலர் தலைமையில்..நில அளவிலான குழுவும், பதிவுத் துறை ஐ.ஜி., தலைமையில், திட்ட செயலாக்க குழுவும் அமைக்கப்பட்டுள்ளன.. திட்ட ஒருங்கிணைப்பாளரை தேர்ந்தெடுக்க, திட்ட ஆலோசகர்களை நியமிக்க, மூன்றாம் தரப்பு தணிக்கையாளர்களை அடையாளம் காண, பதிவுத் துறை ஐ.ஜி.,க்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications