தீவிரமடையும் அக்னிபாத் போராட்டம்.. தமிழகத்தில் பல இடங்களில் போராட்டம்! போலீசார் குவிப்பு.. பதற்றம்!
சென்னை: மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், தமிழகத்தில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
Recommended Video
கடந்த வாரம் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை அறிவித்து இருந்தார். இது பாதுகாப்புத் துறைக்கு வீரர்கள் எடுக்கும் ஒரு முறையாகும்.
இத்திட்டத்தின் கீழ் பாதுகாப்புப் படையில் சேரும் வீரர்கள் 4 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள். அதன் பின்னர் அவர்களில் 75% பேர் ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.

அக்னிபாத்
அவர்களுக்கு ஓய்வூதியம் இல்லை. 4 ஆண்டுகளுக்கு பின்னர், ஒருமுறை மட்டும் கொடுக்கப்படும் தொகை இவர்களுக்கு வழங்கப்படும். அக்னி வீரர்களில் 25% பேர் மட்டுமே ராணுவத்தில் தொடர முடியும். இந்தத் திட்டத்திற்கு வடமாநிலங்களில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. பீகாரில் தொடங்கிய இந்தப் போராட்டம் மெல்ல மற்ற மாநிலங்களுக்கும் பரவியது. பல இடங்களில் ரயில்களுக்கு தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

போராட்டம்
இந்தப் போராட்டம் கடந்த வாரம் தமிழ்நாட்டிற்கும் பரவியது. கடந்த 18ஆம் தேதி தமிழ்நாட்டிலும் அக்னிபாத்திற்கு எதிரான போராட்டம் தொடங்கியது. ஆரணி, கோவை, திருவண்ணாமலை பகுதிகளில் இருந்து வந்த இளைஞர்கள் சென்னை தலைமைச் செயலகம் அருகே காலையில் திடீரென போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து போலீசார் அவர்களைக் கைது செய்தனர்.

தமிழ்நாடு
வடமாநிலங்களில் சற்று போராட்டம் குறைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் இன்று பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. அக்னிபத் திட்டத்தை எதிர்த்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். ரயில் நிலையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்

கோவை
அதேபோல கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) ரயில் நிலைய முற்றுகை நடத்தினர். மாவட்ட செயலாளர் கனகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் முழக்கங்களை எழுப்பினர். ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் ரயில் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்திலும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ அமைப்பினர் ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தியதில் இரு தரப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து தடையை மீறி, ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாணவ அமைப்பினரைத் தடுத்து நிறுத்தி குண்டுகட்டாக தரதரவென போலீஸ் இழுத்துச் சென்று கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. மாநிலத்தில் பல இடங்களில் இதேபோன்ற போராட்டங்கள் நடைபெற்றன.












Click it and Unblock the Notifications