பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்.. பழைய ஓய்வூதிய திட்டம்.. மீண்டும் கோட்டை போன அரசு ஊழியர்கள் கோரிக்கை
சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், தமிழக அரசு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இதுகுறித்து முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் அரசுக்கு விடுத்துள்ள வேண்டுகோள் என்ன?
தமிழக அரசு, ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதவர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்கள் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றன.. இதற்காக காலவரையற்ற போராட்டத்தையும் அறிவித்துள்ளன.
அரசு ஊழியர்கள்
எனினும் கடைசி நிமிடத்தில் அதாவது வரும் பொங்கல் பண்டிகைக்குள் தமிழக அரசு எப்படியும் ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துவிடும் என்று பெருத்த நம்பிக்கையில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் காத்துள்ளனர்..
அதற்கேற்றார்போல் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசும்போது, எது எப்படி இருந்தாலும், முதல்வர் அரசு ஊழியர்களைக் கைவிட மாட்டார். ஜனவரி 6ஆம் தேதிக்குள் கட்டாயம் நல்ல செய்தி வரும்'' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்..
பழைய ஓய்வூதியத் திட்டம்
இப்படிப்பட்ட சூழலில், பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம் தொடர்பாக மற்றொரு முக்கிய கோரிக்கை தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்திடமிருந்து எழுந்துள்ளது..
தமிழக அரசு 2004-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அரசுப்பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் சம்பளம் வழங்கி வருகிறது. அதாவது அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் பெறுவதற்காக, அவர்கள் பணியில் இருக்கும் காலத்திலேயே ஒரு குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் சேமிக்க வேண்டிய திட்டமாகும்.
ஓய்வூதியம் ரத்து
இந்தத் திட்டத்தில் ஊழியரும் அரசும் தங்களது பங்காக பணம் செலுத்துகிறார்கள். அந்த தொகை பங்குச் சந்தை உள்ளிட்ட முதலீடுகளில் செலுத்தப்படுகிறது. ஓய்வு பெற்ற பின், அந்த முதலீட்டில் கிடைக்கும் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
ஆனால், இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் தெரிவித்துள்ளது.. இது தொடர்பாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்
"தமிழக அரசு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை கொண்டு வர வேண்டும். வருகிற 6-ந் தேதி ஜாக்டோ- ஜியோ அறிவித்துள்ள காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்க உள்ளனர். இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வரை தொடர்ந்து பல்வேறு போராட்டம் நடத்தப்படும்..
பேரையூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கம்ப்யூட்டர் ஆசிரியையாக பணியாற்றிய ரோசன் கதீஜா பீவி என்பவர் கடந்த அக்டோபர் மாதம் திடீரென மரணமடைந்தார்.
பழைய ஓய்வூதிய திட்டம்
அவர் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணியாற்றி வந்ததால், அவரது மரணத்துக்கு பின்னர் குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை. அவரது 2 மகன்களும் கல்லூரியில் படித்து வருகின்றனர். அவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழ்நிலை இருந்தது.
எனவே, பட்டதாரி ஆசிரியர் கழகம் மற்றும் பிற சங்கங்களின் உதவியுடன் அனைத்து ஆசிரியர்களும் இணைந்து அவரது குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சத்து 45 ஆயிரத்து 700
திரட்டி வழங்கப்பட்டது. இது போன்ற சம்பவங்கள் இனியும் தொடராமல் இருக்க வேண்டுமெனில், அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications