100 கோடி மோசடி அரசகுமார்.. ரெய்டு விட்ட சிசிபி! சிக்கிய லேப்டாப்.. 44 ஆவணங்களை அலசும் சென்னை போலீஸ்!
சென்னை: தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட பி.டி. அரசகுமார் வழக்கிற்கு தொடர்புடைய 44 ஆவணங்கள் மற்றும் 1 லேப்டாப் கைப்பற்றப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு கூறியுள்ளனர்.
சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், திமுக பிரமுகரும், தனியார் பள்ளி கூட்டமைப்பின் நிர்வாகியுமான பி.டி. அரசகுமார் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரில், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளின் தர உயர்வு, கூடுதல் வகுப்பறைகள் அமைக்க அனுமதி, கட்டிடத் திட்ட ஒப்புதல் உள்ளிட்ட பல்வேறு அரசு அனுமதிகளை பெற்றுத் தருவதாக கூறி சுமார் ரூ.100 கோடி வரை வசூலித்து மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் திமுக செய்தித் தொடர்புக் குழுவின் முன்னாள் துணைத் தலைவரான பி.டி. அரசகுமார் கடந்த ஜூன் 27-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே பிடி அரசகுமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து சென்னை காவல் ஆணையர், ஜூலை 11 ஆம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, பிடி அரசகுமாரின் மனைவி கோகிலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். விசாரணை முடிவில், அரசகுமார் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் அவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.
இதற்கிடையே அரசகுமார், வழக்கில் தலைமறைவாக உள்ள முத்துக்குமார், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமலையின் உதவியாளர் உள்ளிட்டோருக்குச் சொந்தமான இடங்களில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். தற்போது அந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி உள்ளது.
அதில்," தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், சம்பந்தப்பட்ட பி.டி. அரசகுமார், தலைமறைவாக உள்ள முத்துகுமாரின் உறவினர் மற்றும் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரது உதவியாளர்களுக்கு சொந்தமான சென்னை சாலிகிராமம், கோடம்பாக்கம், சூளைமேடு, பூவிருந்தவல்லி மற்றும் நாவலூர் ஆகிய 5 இடங்களில் உள்ள வீடுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் போது, வழக்கிற்கு தொடர்புடைய 44 ஆவணங்கள் மற்றும் 1 Laptop கைப்பற்றப்பட்டன. இவ்வழக்கு தொடர்பாக சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்." என போலீசார் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications
