’அங்கிள்’ ஒன்னும் கெட்டவார்த்தை இல்லையே! விஜயை மட்டும் ஏன் டார்கெட் பண்றாங்க? கேட்கிறார் கிருஷ்ணசாமி
சென்னை: தமிழகத்தில் 70 ஆண்டுகளாக திரை பிம்பத்தை வைத்து தான் அரசியல் கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை மட்டும் ஏன் டார்கெட் செய்கிறார்கள் எனவும், அதிமுக கூட்டணி முதலில் இருக்கிறதா? என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," ஜனவரி 7 ஆம் தேதி மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் 7 ஆவது மாநில மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் வருகின்ற சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்தான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. கவின் கொலை குறித்து திருச்சியில் புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆணவ படுகொலை சம்பவங்களுக்கு அரசு தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என வருகின்ற செம்டம்பர் 17 ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகம் முன்பாக புதிய தமிழகம் கட்சியின் சார்பாக ஆர்பாட்டம் நடைபெறும்.

டாக்டர் கிருஷ்ணசாமி
ஆணவ படுகொலைக்கு சட்டம் இயற்றப்படும் போது அது போன்ற நிகழ்வுகள் குறையும். பள்ளி பாடப்புத்தகத்தில் அது குறித்தான பாடங்களை சேர்க்க வேண்டும் . கிராம புறங்களில் இன்றும் அவலமான சூழல் தான் உள்ளது. சோழவந்தான் மற்றும் வாடிப்பட்டியில் வீட்டு மனை பட்டாக்கள் இல்லாமல் உள்ளனர்.
தவெக தலைவர் விஜய் மாநாட்டை நன்றாக நடத்தி இருக்கிறார். அவர் கூறிய அங்கிள் என்ற வார்த்தை ஒன்னும் கெட்டவார்த்தை கிடையாது.
புதிய தமிழகம்
ஆட்சியில் பங்கு என்பதை பற்றி விஜய் தொடர்ந்து பேசி வருகிறார். நாங்கள் தவெக கூட்டணியில் இணைவோமா என கேட்கிறார்கள். எங்கள் கட்சி மாநாட்டிற்கு பிறகு தான் எதுவாக இருந்தாலும் கூற முடியும். அதிமுக கூட்டணியில் இப்போதும் உள்ளீர்களா என்ற கேள்விக்கு, அதிமுக கூட்டணி முதலில் இருக்கிறதா என்பது தான் பதில்.
விஜய் அரசியல்
விஜய் வருகையை பொருத்து வருகின்ற சட்டமன்ற தேர்தலில் என்ன மாற்றத்தை கொண்டு வரும் என்பதை பார்ப்போம். தமிழகத்தில் 70 ஆண்டுகளாக திரைபிம்பத்தை வைத்து தான் அரசியல் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால் விஜயை மட்டும் ஏன் டார்கெட் செய்கிறார்கள். தூய்மை பணியாளர்களுக்கு நாங்களும் குரல் கொடுத்தோம். மேலும் இன்று மழை நீரில் மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர்கள் இறந்துள்ளார். மழை காலம் என்பதால் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தூய்மை பணியாளர்
சென்னை மாநகராட்சியும் தமிழக அரசும் அதனை உறுதிப்படுத்த வேண்டும். அவர்கள் கவனமாக இல்லாததால் பாதிக்கப்படுவது சாமானிய மக்கள் தான் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டங்களில் பல முறைகேடுகள் நடந்துள்ளது. சென்னை மற்றும் மதுரை மாநகராட்சிகளில் தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அவர்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அண்மையில் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் ஒரு சட்டத்தை கொண்டு வந்துள்ளார். பிரதமர் முதலமைச்சர் 30 நாளுக்கு மேல் சிறையில் இருந்தால், அவர்கள் பதவியில் இருந்து நீக்கக் கூடிய சட்டத்தை புதிய தமிழகம் கட்சி வரவேற்கிறது" என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications