பி.டி.உஷா டெல்லி சென்றிருந்த நேரத்தில் மயங்கி விழுந்து கணவர் மறைவு.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
சென்னை: இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரும், ராஜ்யசபா எம்.பியுமான முன்னாள் விளையாட்டு வீராங்கனை பி.டி. உஷாவின் கணவர் சீனிவாசன் (64) இன்று அவரது வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம், கோழிக்கோட்டைச் சேர்ந்த பிரபல தடகள வீரங்கனை பி.டி. உஷா. சர்வதேச தடகளப் போட்டிகளில் இந்தியா சார்பில் போட்டியிட்டு பதக்கங்களை வென்று சாதனை படைத்தவர். தற்போது இவர் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருக்கிறார்.

பிடி உஷாவின் கணவர் சீனிவாசன். மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் துணை காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், கோழிக்கோடு மாவட்டம், திக்கோடியில் வசித்து வந்தார். இந்த நிலையில், நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பி.டி.உஷா டெல்லி சென்றிருந்த நிலையில், இன்று சீனிவாசன் தனது வீட்டில் மயங்கி விழுந்துள்ளார்.
அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். கணவர் இறந்த தகவலறிந்த பிடி உஷா, உடனடியாக டெல்லியில் இருந்து கேரளா விரைந்தார். கடந்த 1991 ஆம் ஆண்டு தனது உறவினரான சீனிவாசனை திருமணம் செய்துகொண்டார் பி.டி. உஷா. இவர்களுக்கு உஜ்வால் விக்னேஷ் என்ற மகன் உள்ளார்.
சீனிவாசன் மறைவுக்கு அரசியல் தலைவர்களும், விளையாட்டு வீரர்கள், முக்கிய பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிடி உஷாவின் கணவர் சீனிவாசன் இறந்த செய்தியை அறிந்ததும், பிரதமர் நரேந்திர மோடி, பி.டி. உஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவரது கணவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், "இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான பி.டி.உஷாவின் கணவர் சீனிவாசன் மறைந்த செய்தியறிந்து வருத்தமுற்றேன். அன்புக்குரியவரை இழந்து தவிக்கும் பி.டி.உஷா மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications