பிடிஆர் ஆடியோ சர்ச்சை! 30 ஆயிரம் கோடி முதல் ராகுல் பிரச்சாரம் வரை.. ஸ்டாலினுக்கு குஷ்பு நேரடி சவால்
சென்னை: மதுரை அரசியல் களத்தில் நிதியமைச்சர் பிடிஆர் மற்றும் இயக்குநர் சுந்தர் சி இடையே வெடித்துள்ள வார்த்தை போர் தற்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதலில் சுந்தர் சி-க்கு ஆதரவாக களமிறங்கியுள்ள நடிகை குஷ்பு, பிடிஆர்-ன் பழைய ஆடியோ விவகாரம் மற்றும் திமுக தலைமையின் செயல்பாடுகள் குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கல்வித் தகுதியை வைத்து ஒருவரை எடைபோடும் போக்கிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ள இந்த விவாதம், தற்போது ஆளுங்கட்சிக்கு எதிரான மிகப்பெரிய அரசியல் குற்றச்சாட்டாக உருவெடுத்துள்ளது.
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சமீபத்தில் ஒரு சினிமா டயலாக்கை சொல்லி, விமர்சித்ததற்கு, இயக்குநர் மற்றும் நடிகர் சுந்தர் சி மிகத் தெளிவான ஒரு பதிலடியைக் கொடுத்துள்ளார்.

பிடிஆர் மீது குஷ்பு சாடல்
ஒருவருடைய கல்வித் தகுதி மட்டுமே அந்த மனிதரின் ஒட்டுமொத்த மதிப்பையோ அல்லது அறிவையோ தீர்மானித்து விடாது என்று சுந்தர் சி சுட்டிக்காட்டியுள்ளார். தான் இயக்கிய படத்தில் இடம்பெற்ற காமெடி டயலாக்கை ஒரு அரசியல் களத்தில் தமக்கு எதிராகப் பயன்படுத்தியதைச் சுட்டிக்காட்டிய அவர், மேலோட்டமான அறிவு அல்லது வெறும் பட்டப்படிப்புகளைக் கொண்டு பிறரைத் தாழ்வாகக் கருதுவது முறையல்ல, ஒருவரின் உழைப்பும் அனுபவமுமே அவர்களைச் சமூகத்தில் உயர்த்தும் என்று மிக உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கு நடுவே, சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த நடிகை குஷ்பு, திமுகவிலிருந்து தான் விலகியது குறித்தும், இப்போது தமிழக அரசியலில் நிலவும் முக்கிய விவகாரங்கள் குறித்தும் மிகக் காரசாரமான கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
குறிப்பாக, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அன்று பேசியதாக கூறப்படும் 30,000 கோடி ரூபாய் ஊழல் தொடர்பான ஆடியோ விவகாரத்தை அவர் மீண்டும் கையில் எடுத்துள்ளார்.
பிடிஆர் ஆடியோ - 30 ஆயிரம் கோடி ஊழல்
"பிடிஆர் அந்த ஆடியோவில் சொன்னது என்ன? ஒரு வருடத்திற்குள் 30,000 கோடி ரூபாயைச் சம்பாதித்துள்ளார்கள் என்று தானே அவர் குறிப்பிட்டார்? இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் என்ன பதில் சொல்லப்போகிறார்? ஒரு நிதியமைச்சரே தன் சொந்தக் கட்சியின் ஊழலைப் பற்றி பேசியிருக்கிறார் என்றால், அதை விடப்பெரிய சாட்சி என்ன வேண்டும்?
பிடிஆர் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ விவகாரம் என்பது ஒரு சாதாரண விஷயம் அல்ல, அது திமுகவின் நிஜ முகத்தைத் தோலுரித்துக் காட்டிவிட்டது, பிடிஆர் போன்ற ஒரு அமைச்சரே இவ்வளவு பெரிய தொகையைப் பற்றிக் குறிப்பிடும்போது, அதை மறைக்க முயற்சிப்பது மக்களை ஏமாற்றும் செயல்" என்று குஷ்பு விமர்சித்துள்ளார்.
ராகுல் காந்தி - பிரியங்கா
அதுமட்டுமல்லாமல், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரின் தேர்தல் பிரச்சாரப் பயணம் குறித்தும் முதல்வர் ஸ்டாலினை குஷ்பு கடுமையாகச் சாடியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களான ராகுலும், பிரியங்காவும் தமிழகத்திற்குப் பிரச்சாரத்திற்கு வராதது குறித்து பேசுவதற்கு முதல்வருக்குத் தைரியம் இருக்கிறதா? என்று குஷ்பு காட்டமாக கேட்கிறார்.
"கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் ஏன் தமிழகத்தை வந்து பார்க்கவில்லை? அவர்களை இங்கே வரச் சொல்லிப் பேசுவதற்கு ஸ்டாலினுக்குத் துணிச்சல் உள்ளதா? திமுகவில் உழைப்பவர்களுக்கு மதிப்பு இல்லை. அதனால்தான் நான் அங்கிருந்து வெளியேறினே" என்றெல்லாம் சாடிய குஷ்பு, திமுகவில் நிலவும் குடும்ப அரசியல் மற்றும் அதிகாரப் போக்குகளை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
முதலமைச்சர் பேசும் பேச்சா
திமுகவில் தனது உழைப்பு ஒருவழிப் பாதையாகவே இருந்ததாகவும், கட்சியின் கொள்கைகளுக்காகத் தான் முழுமையாகப் பங்களித்தபோதும் தனக்குரிய மரியாதையும் அங்கீகாரமும் மறுக்கப்பட்டதாக குஷ்பு கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்..
தமிழகத்தில் என்ன வளர்ச்சி உள்ளது? அதுகுறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடுமா? தொகுதி மறுவரை குறித்து முதல்வர் எச்சரிக்கை ஆடியோ வெளியிட்டுள்ளார்.. ஒரு முதலமைச்சர் பேசும் பேச்சா இது? அவருக்கே இது தவறாக தெரியவில்லையா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
குஷ்புவின் இந்த கருத்துகள்தான் சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.. ஒருவரின் கல்வித் தகுதியை வைத்து மட்டும் யாரையும் எடை போடக் கூடாது என்று சுந்தர் சி சொன்ன அதேசமயம், அமைச்சரின் ஆடியோ விவகாரத்தில் முதல்வர் மவுனம் காப்பது ஏன் என்பதே குஷ்புவின் கேள்வி மதுரைவாசிகளின் கவனத்தை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications