லோக்சபா தேர்தல் நடத்த 3 மாதமா? தேர்தல் ஆணையத்தின் திறனற்ற தன்மை! பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காட்டம்
சென்னை: கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் தேர்தல் நடத்த 20 நாட்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், தற்போது தேர்தல் நடத்த 3 மாதங்கள் தேவைப்படுவது என்பது தேர்தல் ஆணையத்தின் திறனற்ற தன்மை என அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் விமர்சித்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்டத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கும் நிலையில், ஜூன் 1ம் தேதி 7வது கட்ட தேர்தல் நடைபெறுகிறது. அனைத்து கட்டங்களிலும் வாக்கு பதிவான பின்னர் இறுதியாக அவை ஜூன் 4ம் தேதி எண்ணப்படும்.

முதல் கட்டத்தில் தமிழ்நாடு (39), புதுச்சேரி (1), அருணாச்சல் பிரதேசம் (2), அசாம் (5), சத்தீஸ்கர் (1), மத்தியப் பிரதேசம் (6), மகாராஷ்டிரா (5), மணிப்பூர் (2), மேகாலயா (2), மிசோரம் (1), நாகலாந்து (1), ராஜஸ்தான் (12), சிக்கிம் (1), உத்தரப்பிரதேசம் (8), உத்தரகாண்ட் (5), மேற்கு வங்கம் (3), அந்தமான் மற்றும் நிகோபார் தீவு (1), ஜம்மு காஷ்மீர் (1), லட்சத்தீவு (1) என 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இரண்டாம் கட்டமாக அசாம் (5), பீகார் (5), சத்தீஸ்கர் (3), கர்நாடகா (14), கேரளா (20), மத்தியப் பிரதேசம் (7), மகாராஷ்டிரா (8), மணிப்பூர் (1), ராஜஸ்தான் (13), உத்தரப்பிரதேசம் (8), திரிபுரா (1), மேற்கு வங்கம் (3), ஜம்மு காஷ்மீர் (1) என 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் ஏப்ரல் 26ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
மூன்றாவது கட்டமாக அசாம் (4), பீகார் (5), சத்தீஸ்கர் (7), கோவா (2), குஜராத் 26), கர்நாடகா (14), மத்தியப் பிரதேசம் (8), மகாராஷ்டிரா (11), உத்தரப்பிரதேசம் (10), மேற்கு வங்கம் (4), தாத்ரா மற்றும் நகர் ஹவேலி (1) மற்றும் டாமன் மற்றும் டையூ (1), ஜம்மு காஷ்மீர் (1) என 12 மாநிலங்களில் 94 தொகுதிகளுக்கு மே 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஆந்திரா (25), பீகார் (5), ஜார்க்கண்ட் (4), மத்தியப் பிரதேசம் (8), மகாராஷ்டிரா (11), ஒடிசா (4), தெலங்கானா (17), உத்தரப்பிரதேசம் (13), மேற்கு வங்கம் (8), ஜம்மு காஷ்மீர் (1) ஆகிய 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கு மே 13ம் தேதியன்று நான்காம் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
பீகார் (5), ஜார்க்கண்ட் (3), மகாராஷ்டிரா (13), ஒடிசா (5), உத்தரப்பிரதேசம் (14), மேற்கு வங்கம் (7), ஜம்மு காஷ்மீர் (1) என 8 மாநிலங்கள் 49 தொகுதிகளுக்கு மே 20ம் தேதி 5ம் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
பீகார் (8), ஹரியானா (10), ஜார்க்கண்ட் (4), ஒடிசா (6), உத்தரப்பிரதேசம் (14), மேற்கு வங்கம் (8), டெல்லி (7) ஆகிய மாநிலங்களுக்கு 6ம் கட்டமாக மே 25 அன்றும், பீகார் (8), இமாச்சல பிரதேசம் (4), ஜார்க்கண்ட் (3), ஒடிசா (6), பஞ்சாப் (13), உத்தரப்பிரதேசம் (13), மேற்கு வங்கம் (9), சண்டிகர் (1) ஆகிய மாநிலங்களுக்கு ஏழாம் கட்டமாக ஜூன் 1 அன்றும் தேர்தல் நடைபெறுகிறது.
இப்படி தேர்தலை 7 கட்டமாக நடத்துவது பிரதமர் மோடியின் பிரசாரத்திற்கு உதவி செய்யதான் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. மட்டுமல்லாது, ஒரே மாநிலத்தில் இரு வேறு தொகுதிகளில், வெவ்வேறு தேதிகளில் தேர்தல்கள் நடத்தப்படும்போது தேர்தல் விதி மீறல்கள் நடக்கவும் வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
இந்நிலையில் இது குறித்து தமிழக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் விமர்சித்துள்ளார். அதாவது, "2004 லோக்சபா தேர்தலின்போது, 20 நாட்கள் தேர்தல் காலமாக இருந்தது. ஆனால், 20 வருடங்கள் கழித்து 2024ல் தேர்தல் நடத்த 3 மாதங்கள் தேவைப்படுகிறது. இது தேர்தல் ஆணையத்தின் திறனற்றத் தன்மையை வெளிக்காட்டுகிறது. தேர்தலைத் திறம்பட நடத்தத் தெரியாத இந்த அரசு, 'ஒரே நாடு ஒரே தேர்தலைக்' கொண்டுவரத் திட்டமிடுகிறது. 542 இடங்களுக்குத் தேர்தல் நடத்த 3 மாதங்கள் தேவைப்பட்டால், நாடு முழுவதுக்கும் ஒரே தேர்தல் நடத்த 1.5 ஆண்டுகள் ஆகும்" என விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications