திமுக தலைவர்கள் படிக்காதவங்க! வார்த்தையை விட்ட "நட்டா".. பாய்ந்த பிடிஆர்.. "நட்டம்" யாருக்கு பாருங்க
சென்னை: திமுக தலைவர்களின் கல்வி தகுதி பற்றி கேள்வி எழுப்பிய பாஜக தலைவர் ஜெபி நட்டாவிடம் பிரதமர் மோடியின் கல்வி தகுதி பற்றி கேட்ட அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ளார். நேற்று மதுரைக்கு சென்ற நட்டா அங்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் ஆலோசனை செய்தார்.
இந்த நிலையில் அதன்பின் காரைக்குடியில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஜெ.பி நட்டா தமிழ்நாட்டில் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். திமுக அரசு வாரிசு அரசியல் நடத்துவதாக கடுமையான விமர்சனங்களை நட்டா வைத்தார்.

நட்டா விமர்சனம்
நட்டா தனது பேச்சில், தமிழ்நாட்டில் நீட் தேர்வை திமுக எதிர்ப்பதாக கேள்விப்பட்டேன். நீட் தேர்வு எல்லோருக்கும் வாய்ப்பு அளிக்க கூடிய தேர்வு. இதை அவர்கள் எதிர்க்க காரணம், திமுகவில் உள்ள தலைவர்கள் யாரும் படிக்கவில்லை. அதனால் அவர்களுக்கு கல்வியை பற்றி தெரியவில்லை. அதனால்தான் அவர்கள் நீட் தேர்வை எதிர்க்கிறார்கள்.

கல்வி
நீங்கள் எதுவும் படிக்காமல் இருந்துவிட்டு, கல்வியை பற்றி பேசினால் இப்படித்தான் கருத்துக்களை தெரிவிப்பீர்கள். நீட் தேர்வு காரணமாக கிராமத்தில் உள்ள மக்கள் கல்வியை பெற முடிகிறது. பிற்படுத்தப்பட்ட மக்கள் மருத்துவ படிப்புகளை படிக்க முடிகிறது. பல பிரிவுகளில் இருந்தும் மக்கள் மருத்துவ படிப்புகளில் சேர முடிகிறது, என்று நட்டா விமர்சனம் செய்துள்ளார். திமுக தலைவர்களை படிக்காதவர்கள் என்று நட்டா விமர்சனம் செய்தது கடுமையான எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது.

எதிர்ப்பு
நட்டா விமர்சித்தது போல இல்லாமல் தமிழ்நாட்டில் திமுக தலைவர்கள் பெரும்பாலானோர் மெத்த படித்தவர்கள். முதல்வர் ஸ்டாலின் இளங்கலை படித்தவர், அமைச்சர் மா. சுப்பிரமணியன் பிஏ, எல்எல்பி, செந்தில் குமார் எம்பி டாக்டர், அமைச்சர் பொன்முடி வரலாற்றில் எம்ஏ, அமைச்சர் பிடிஆர் 4 டிகிரி மற்றும் பிஎச்டி படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நட்டாவின் கருத்துக்கு திமுகவினர் தீவிரமாக பதிலடி கொடுத்து வருகின்றனர். கல்வியில் பின்தங்கி உள்ள வடஇந்தியாவில் இருந்து வந்துவிட்டு நீங்கள் தமிழ்நாட்டு தலைவர்களை பற்றி பேசலாமா என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

பிடிஆர் பதிலடி
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் இதற்கும் பதிலடி கொடுத்துள்ளார். அதில், 2 நாடுகளில் உள்ள 3 பெரிய பல்கலைக்கழகங்களில் இருந்து 4 வெவ்வேறு பிரிவுகளில் 4 டிகிரி முடித்து இருக்கிறேன். பல சர்வதேச டெஸ்டுகளை எழுதி இருக்கிறேன். இருந்தும் பட்டாவை பொறுத்தவரை நாங்கள் படித்தவர்கள் கிடையாதாம். நான் மட்டும் "Entire Political Science" ( மோடி படித்ததாக கூறப்படும் படிப்பு) படித்து இருந்தால், எங்களை அவர் படித்தவராக கருதுவார் போல, என்று பிடிஆர் விமர்சனம் செய்துள்ளார். திமுக தலைவர்களின் கல்வி தகுதி பற்றி கேள்வி எழுப்பிய பாஜக தலைவர் ஜெபி நட்டாவிடம் பிரதமர் மோடியின் கல்வி தகுதி பற்றி கேட்ட அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications