மனிதாபிமானமற்ற நிலை.. உங்களை மட்டும் ஏன் பாதிக்குது.. கோபமாக பொங்கிய பிடிஆர்.. என்ன நடந்தது?
சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி உள்ள நிலையில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இது குறித்து காட்டமாக ட்வீட் செய்துள்ளார்.
இந்தியாவில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த மாதம் பெட்ரோல் டீசல் விலை உயராத நிலையில் தொடர்ந்து ஆறாவது நாளாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து உள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை வைத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியாவில் தற்போது இதுவரை இல்லாத உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல்
பெட்ரோல், டீசல் விலையை தனியார் நிறுவனங்களே உயர்த்திக்கொள்ள அனுமதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து இந்தியாவில் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டு தற்போது 102 ரூபாயை தாண்டி உள்ளது. இன்று சென்னையில் பெட்ரோல் விலை 26 பைசாவும், டீசல் விலை 33 பைசாவும் உயர்ந்தது. இதனால் சென்னையில் பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 96.26 ரூபாய்க்கு டெல்லியில் விற்பனை செய்யப்படுகிறது.

உச்சம்
கடந்த 6 நாட்களில் மட்டும் இந்தியாவில் பெட்ரோல் விலை கிட்டத்தட்ட 2 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் பெட்ரோல் 103.39 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் 91.95 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பெங்களூரில் பெட்ரோல் விலை 106.97 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 97.36 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.மும்பையில் பெட்ரோல் விலை 109.51 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 99.53 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்தியாவில் பெட்ரோல் அதிக விலைக்கு விற்கும் பெரு நகரங்களில் ஒன்றாக மும்பை உள்ளது.

சென்னை பெட்ரோல் விலை
ஹைதராபாத்தில் பெட்ரோல் விலை 104.30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 98.89 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. முன்னதாக தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை மாநில அரசின் வரி குறைப்பால் 3 ரூபாய் குறைந்தது. இதனால் 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாய்க்கும் கீழ் சென்றது. ஆனால் இப்போது மீண்டும் பெட்ரோல் விலை ஏற்றப்பட்டதால் விலை 100 ரூபாயை தாண்டி உள்ளது.

திமுகவிற்கு கேள்வி
அதாவது தமிழ்நாடு மாநில அரசு 3 ரூபாயை லிட்டருக்கு குறைந்தும் கூட மீண்டும் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி இருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் மாநில அரசு பெட்ரோல் விலையில் மானியம் வழங்குமா என்று இணையத்தில் சிலர் கிண்டலாக தமிழ்நாடு அரசிடம் கேள்வி எழுப்பி இருந்தனர். இன்னும் சிலர் நீங்கள் 5 ரூபாயை குறைப்பதாக சொல்லி இருந்தீர்கள். 3 ரூபாயை குறைத்துவிட்டீர்கள். மீதம் உள்ள 2 ரூபாயை இப்போது குறையுங்கள் என்று சிலர் கேள்வி எழுப்பி இருந்தனர்.

பதிலடி
அதேபோல் பாஜக, அதிமுகவை சேர்ந்த சிலர் பெட்ரோல் விலையை தமிழ்நாடு அரசு மீண்டும் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து மீம்களை வெளியிட்டு வந்தனர். தமிழ்நாடு அரசு ஏற்கனவே விலையை குறைத்த போதிலும் இதுபோல மீண்டும் ட்வீட்கள் செய்யப்பட்டது. தேசிய அளவில் ஒவ்வொரு முறை விலை ஏறும் போதும் தமிழ்நாடு அரசு விலையை குறைத்து தனது வரி வருவாயில் இழப்பை சந்திக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
இந்த நிலையில்தான் இது போன்ற கேள்விகள், விமர்சனங்களுக்கு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்துள்ளார். அதில், எரிவாயு சிலிண்டர்) விலை அல்லது (ஒன்றிய பெட்ரோல்) வரியை உயர்த்துவோரைப் புகழ்ந்து பாராட்டுவது + (பால்) விலை அல்லது (மாநில பெட்ரோல்) வரியை குறைப்பவர்களை விமர்சிப்பது இந்த மனிதாபிமானமற்ற நிலை ஏன் ஒரு குறிப்பிட்ட (முன்னாள் "பத்திரிகையாளர்" உட்பட) கட்சியினர்களை மட்டுமே பாதிக்கிறது, என்று கடுமையாக கேள்வி எழுப்பி உள்ளார்.

பிடிஆர் கோபம்
பெட்ரோல் விலையை குறைக்கும் எங்களை பாராட்டாமல் விலையை உயர்த்தும் ஒன்றிய அரசை பாராட்டுவது ஏன் என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பி உள்ளார். பெட்ரோல், டீசலுக்கு குறைவான வரி வாங்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications