ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க, நீக்க! சென்னையில் நாளை முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
சென்னை: சென்னையில் 19 மண்டலங்களில் நாளை பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. அக்டோபர் 11 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த முகாம் நடைபெறும்.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

அதன்படி அக்டோபர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் 11.10.2025 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு/ மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும் நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகார சான்று வழங்கப்படும்.
பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இந்த முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சென்னையில் உள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது போன்ற முகாம்களில் மட்டுமல்லாமல், ஆன்லைனிலும் ரேஷன் கார்டில் பெயரை நீக்கவும் சேர்க்கவும் செய்யலாம். தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் இணையதளமான www.tnpds.gov.in அல்லது இ சேவை மையங்களுக்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.
தேவையான ஆவணங்களாக புதிய உறுப்பினரின் பிறப்புச் சான்றிதழ், ஆதார் அட்டைகள், குடும்ப அட்டை, முகவரி சான்று (மின் கட்டண ரசீது அல்லது வாக்காளர் அட்டை) ஆகியவற்றை சமர்ப்பிக்கலாம். மேலே சொல்லப்பட்ட இணையதளத்திற்கு சென்று, மின்னணு அட்டை தொடர்பான சேவைகள் என்பதில் "உறுப்பினரை சேர்க்க" என்பதை தேர்வு செய்யுங்கள்.
உங்கள் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணை உள்ளிட்டு திரையில் தோன்றும் கேப்ச்சா எழுத்துகளை பதிவிடவும். பின்னர் தேவையான விவரங்களை உள்ளிட்டு தொடர்புடைய ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்.












Click it and Unblock the Notifications