ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் களமிறங்கும் ஓபிஎஸ் தரப்பு.. எந்த சின்னம்?.. டென்ஷனில் எடப்பாடி
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் எந்த சின்னத்தில் நிற்கிறார் என்பது குறித்து பெங்களூர் புகழேந்தி விளக்கமளித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக இருந்தவர் திருமகன் ஈவெரா. இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இடைத்தேர்தல் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என இருந்த நிலையில் தேர்தல் தேதியை நேற்றைய தினம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை மார்ச் மாதம் 2ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 31 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. நேற்று இரவே ஈரோடு கிழக்கு தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள தலைவர்களின் சிலைகள் மூடப்பட்டன.

இடைத்தேர்தல்
இந்த நிலையில் இந்த இடைத்தேர்தலில் கடந்த முறை போல் தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால் திமுகவோ காங்கிரஸுக்கு கொடுக்காமல் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புகிறது. அது போல் அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினையால் இரட்டை இலை சின்னம் முடங்கும் அபாயம் உள்ளது.

பாஜக தனித்து போட்டியிட முடிவு
இந்த நிலையில் பாஜக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கூறுகையில், ஓபிஎஸ் உத்தரவிட்டால் இரட்டை இலையில் நிற்போம். ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட ஓபிஎஸ் இல்லாமல் எந்த தேர்தலிலும் அதிமுகவால் வெற்றி பெற இயலாது. எடப்பாடி பழனிசாமிக்கு சரித்திரம் கிடையாது.

இரட்டை இலை எங்கள் சின்னம்
இரட்டை இலை எங்கள் சின்னம். அதன் உரிமையாளர் பன்னீர் செல்வம். எனவே அந்த சின்னத்திற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது. தற்போது உச்சநீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளர் என கூறுவது தொடர்பான வழக்குத்தான். அந்த வழக்கிற்கும் சின்னத்திற்கும் தொடர்பு இல்லை.

அதிமுக சின்னம்
அதிமுக சின்னம் தொடர்பான வழக்கு எங்கேயும் இல்லை. அதிமுக சின்னத்தை பொருத்தவரை ஓபிஎஸ்ஸுக்கு சாதகமான தீர்ப்பு இருக்கிறது. தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தின் உரிமையாளராக ஓ பன்னீர் செல்வத்தைதான் அங்கீகரித்திருக்கிறது என ஓபிஎஸ் ஆதரவாளர் பெங்களூர் புகழேந்தி தெரிவித்தார்.

அதிமுக பொதுக் குழு வழக்கு
அதிமுக பொதுக் குழு கூட்டம் கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்த பொதுக் குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணை கடந்த மாதம் 5 நாட்களுக்கு மேல் நடந்துள்ளது. இதில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினரை நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். மேலும் இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே அதிமுகவின் வரவு செலவு கணக்கை இடைக்கால பொதுச் செயலாளர் என எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்ததை தேர்தல் ஆணையம் பெற்றுக் கொண்டது. மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு மாநில தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயருக்குத்தான் அழைப்பிதழ் அனுப்பியிருந்தார். இதனால் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தவிர்த்தனர்.












Click it and Unblock the Notifications