எடப்பாடியை சந்தித்ததுமே மனம் மாறிய பூவை ஜெகன்மூர்த்தி.. அதிமுக கூட்டணியில் தான் போட்டி என அறிவிப்பு
சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து விலகிவிடலாம் என்று புரட்சி பாரதம் கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்திய நிலையில், எடப்பாடி பழனிசாமியை புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி இன்று சந்தித்துப் பேசினார். அதைத்தொடர்ந்து, தாங்கள் என்.டி.ஏ கூட்டணியில் இருப்பதை பூவை ஜெகன்மூர்த்தி உறுதி செய்தார்.
அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு 27 தொகுதிகளும், பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 தொகுதிகளும், அமமுகவிற்கு 11 தொகுதிகளும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் என ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ள இதர கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டு வருகிறது.

பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சிக்கு 2 தொகுதிகள், ஜான் பாண்டியனின் தமமுகவுக்கு 1 மற்றும் புரட்சி பாரதம் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக் கட்சிக்கு 2 சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. திருமாறனின் தென்னிந்திய பார்வர்டு பிளாக் உள்ளிட்ட சில கட்சிகளுக்கு இதுவரை தொகுதிப் பங்கீடு நிறைவடையவில்லை.
அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புரட்சி பாரதம் கட்சிக்கு சட்டமன்ற தேர்தலில் கே.வி. குப்பம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. புரட்சி பாரதம் கட்சியினர், அதிமுக கூட்டணியில் 4 தொகுதிகள் கேட்ட நிலையில், ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில், புரட்சி பாரதம் கட்சியின் பொதுச் செயலாளர் ருசேந்திர குமார் தலைமையில் கட்சி நிர்வாக குழு கூட்டம் ஆண்டரசன் பேட்டையில் நேற்று நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவிற்கு உண்மையாக இருந்ததற்கான பலன் கேள்விக்குறி ஆகியிருப்பதாக கவலை தெரிவித்தார்.
அதிமுகவிடம் நாங்கள் 4 தொகுதிகள் கேட்டோம், ஆனால் ஒரு தொகுதியை மட்டுமே தந்துள்ளனர். கட்சி நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். கூடுதல் தொகுதிகளை தரவில்லை என்றால் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என புரட்சி பாரதம் கட்சியின் பொதுச்செயலாளர் ருசேந்திரகுமார் தெரிவித்தார்.
தனித்துப் போட்டியிடவும் தயங்க மாட்டோம் என புரட்சி பாரதம் கட்சியினர் கூறி வரும் நிலையில், என்.டி.ஏ கூட்டணியில் இருந்து அக்கட்சி விலகுகிறதா என்ற கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக பூவை ஜெகன்மூர்த்தி இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி இன்று நேரில் சந்தித்துப் பேசினார். அதைத்தொடர்ந்து பூவை ஜெகன்மூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிக்கிறோம். ஒரு தொகுதியை ஏற்கிறோம். இரட்டை இலை சின்னத்தில் கே.வி.குப்பம் தொகுதியில் நானே போட்டியிடுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications