கை கொடுக்காத "வன்னியர்" அஸ்திரம்.. வடக்கில் வாகை சூடும் திமுக?.. எப்படி நடந்தது? பரபரக்கும் கணிப்பு!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் வடதமிழக தொகுதிகளில் திமுக கூட்டணி அதிக அளவில் இடங்களை கைப்பற்றும் என்று புதிய தலைமுறை கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 151 முதல் 158 இடங்கள் பெற்று ஆட்சியை கைப்பற்றும் என்று நேற்று புதிய தலைமுறை கருத்து கணிப்பு வெளியிட்டு இருந்தது. அதிமுக அணிக்கு 76 முதல் 83 இடங்கள் கிடைக்கும் என்று இந்த சர்வேயில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
புதிய தலைமுறையின் இந்த சர்வேயில் பல சுவாரசியமான தகவல்கள் இடம்பெற்று இருந்தது. அதில் முக்கியமானது மண்டல வாரியாக திமுக, அதிமுக வெல்ல போகும் தொகுதிகள் ஆகும்.

கணிப்பு
இந்த கணிப்பின்படி தமிழகத்தில் தெற்கு மண்டலத்தில் திமுகவுக்கு 45-49 இடங்கள் கிடைக்கும். மேற்கு மண்டலத்தில் திமுகவுக்கு 11-14 இடங்கள் கிடைக்கும். தமிழகத்தில் மத்திய மண்டலத்தில் திமுகவுக்கு 21-22 இடங்கள் கிடைக்கும். வடக்கு மண்டலத்தில் திமுகவுக்கு 54-59 இடங்கள் கிடைக்கும். தமிழகத்தில் சென்னை மண்டலத்தில் திமுகவுக்கு 17-18 இடங்கள் கிடைக்கும்.

வடக்கு மண்டலம்
தமிழகத்தில் தெற்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு 11-15 இடங்கள் கிடைக்கும். மேற்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு 28-31 இடங்கள் கிடைக்கும். மத்திய மண்டலத்தில் அதிமுகவுக்கு 14-15 இடங்கள் கிடைக்கும். தமிழகத்தில் வடக்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு 19-24 இடங்கள் கிடைக்கும். சென்னை மண்டலத்தில் அதிமுகவுக்கு 0-1 இடங்கள் கிடைக்கும்.

வடக்கு மண்டலம்
இதன் மூலம் வடக்கு மண்டலத்தில் திமுக புதிய பாய்ச்சலை நிகழ்த்தும் என்று கணிப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடக்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு 19-24 இடங்கள் கிடைக்கும், ஆனால் தமிழகத்தில் வடக்கு மண்டலத்தில் திமுகவுக்கு 54-59 இடங்கள் கிடைக்கும். இதுவரை இல்லாத அளவிற்கு வடக்கு மாவட்டங்களில் திமுக அதிக இடங்களை வெல்ல போவதாக கணிப்பு தெரிவித்துள்ளது.

நம்பிக்கை
வட தமிழகத்தில் திமுகவின் இந்த எழுச்சிக்கு காரணம் என்ன என்று அரசியல் வல்லுனர்களிடம் விசாரித்ததில் அவர்கள் பல காரணங்களை அடுக்கினார்கள்.. அதன்படி வன்னியர் உள் இடஒதுக்கீடு மூலம் வடதமிழகத்தில் மாபெரும் வெற்றியை பெறலாம் என்று அதிமுக கூட்டணி நம்பி இருந்தது. ஆனால் இந்த கருத்து கணிப்போ அப்படியே அதிமுகவின் திட்டத்திற்கு எதிராக வந்துள்ளது.

சறுக்கல்
அதிமுக கூட்டணியின் திட்டம் சறுக்கியது எங்கே? இந்த உள் இடஒதுக்கீடு குறித்து முதலில் பார்ப்போம். எம்பிசியில் மொத்தம் 115 ஜாதியினர் இத்தனை நாட்கள் 20% இடஒதுக்கீட்டை பெற்றுவந்தனர்.இதில்தான் தற்போது உள் இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டு வன்னியர்களுக்கு 10.5% கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஜாதிகளில் 22 ஜாதிகளுக்கு 2.5% மற்றும் 25 சாதிகளுக்கு 7% வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொதிப்பு
இதுதான் வன்னியர் உள் இடஒதுக்கீடு. இது கண்டிப்பாக வன்னியர்கள் மத்தியில் அதிமுகவிற்கு பெரிய மதிப்பை கொடுத்துள்ளது. இதை மனதில் வைத்துதான் தமிழகத்தில் பாஜக 23 இடங்களில் அதிமுக கூட்டணியில் போட்டியிடுகிறது. ஆனால் இதே உள் இடஒதுக்கீடு அதிமுகவிற்கு எதிராக "கவுண்டர் அட்டாக்காகவும்" மாறியுள்ளது. வன்னியர்கள் போக வட தமிழகத்தில் இருக்கும் மற்ற 114 ஜாதியினர் இதனால் கொதிப்பில் உள்ளனர்.

சப்போர்ட்
அதிலும் வடதமிழகத்தில் அதிகமாக இருக்கும் உடையார், முதலியார் போன்ற ஜாதியினர் கோபத்தில் உள்ளனர். வடதமிழகத்தில் இவர்களும் சமமாக இருக்கிறார்கள். வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு என்றால் எங்கள் நிலை என்ன? என்று கேட்க தொடங்கி உள்ளனர். இதுதான் அங்கு அதிமுகவிற்கு எதிராக திரும்பி உள்ளது. தேமுதிகவும் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டதால் முதலியார் வாக்கு வங்கியும் அதிமுகவிற்கு சரிந்துள்ளது.

காரணம்
இதெல்லாம் போக தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகனின் திமுக சப்போர்ட், திமுக எம்பி செந்தில்குமாரின் வளர்ச்சி என்று வன்னியர்கள், கவுண்டர்கள் வாக்கும் கொஞ்சம் சிதறி உள்ளது. இதுதான் வடதமிழகத்தில் திமுகவின் திடீர் எழுச்சிக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. திமுகவிற்கு பாரம்பரியமாக வாக்களிக்கும் வன்னியர் வாக்குகளும் திரும்ப போகிறது என்கிறார்கள் வல்லுநர்கள்.

ஆனால்
ஆனால் இந்த கருத்து கணிப்பில் இருப்பது போல வடக்கில் திமுக எழுச்சி பெறுமா அல்லது வன்னியர் வாக்குகளை மொத்தமாக அள்ளி அதிமுக ஷாக் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். கருத்து கணிப்புகள் எப்படி வந்தாலும்.. கடைசி நொடியில் கூட கள நிலவரம் மாறலாம் என்பதால் திமுக, அதிமுக இரண்டும் கவனமாக பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.












Click it and Unblock the Notifications