பணிப்பெண்ணை ராணி போல் அலங்கரித்து! முதல்வர் கான்வாயில் அழைத்து வந்த ஜெயலலிதா! ரபி பெர்னார்டு தகவல்
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தன் வீட்டில் பணியாற்றி வந்த பணிப்பெண்ணுக்கு ராணி மாதிரி அலங்காரம் செய்து தனது சொந்த காரில் ஊர்வலமாக திருமண மண்டபத்திற்கு அழைத்து வந்தது ஆச்சரியமளித்ததாக முன்னாள் எம்பி ரபி பெர்னார்டு தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து ரபி பெர்னார்டு கூறுகையில் ஜெயலலிதாவுக்கு பர்ஃபெக்ஷன் மிகவும் பிடிக்கும். நியூஸ் படிக்கும் போதும் வெளிநாட்டு அரசியல்வாதிகளின் பெயர்களை சரியாக எப்படி உச்சரிக்க வேண்டும் என்ற நோட் போட்டு அனுப்பி வைப்பார்.

ஒரு முறை டிவியில் சமையல் ஷோக்களை ஜெயலலிதா பார்த்துள்ளார். அப்போது செய்ய தேவையான பொருட்களை ஒருவர் கூறியுள்ளார். அப்போது அவர் ஒவ்வொரு பொருளாக எடுத்து போட்டுள்ளார். இதையடுத்து அவர் சமைத்து முடித்துவிட்டார். நிகழ்ச்சியும் முடிந்துவிட்டது.
பெர்ஃபெக்ஷன்: உடனே ஜெயலலிதாவிடம் இருந்து போன் வந்தது. தேவையான பொருட்களில் பெருங்காயம் என சொன்னாரு , ஆனால் அவர் சமையலில் சேர்க்கவே இல்லையே என கேட்டிருந்தார். அந்த அளவிற்கு கூர்ந்து கவனிப்பார்.
ஒய்எம்சிஏவில் திருமணம்: ஒரு முறை அமைச்சரவையில் இருந்தவர்களின் மகன், மகள்களுக்கு ஒய்எம்சிஏ மைதானத்தில் திருமணம் நடந்தது. அந்த திருமணத்தை ஜெயலலிதாதான் தலைமையேற்று நடத்தி வைத்தார். அப்போது அவர் வீட்டில் வேலை செய்து வந்த பெண்ணுக்கும் அதே இடத்தில் திருமணம் செய்து வைத்தார். நிறைய சீர் செய்து முதல்வராகியிருந்த போது தானே மேக்கப் போட்டுவிட்டு தனது காரிலேயே அந்த பெண்ணை அழைத்து வந்து திருமண மண்டபத்தில் விட்டார்.
கதீடரல் சாலை: அது போல் கதீடரல் சாலையிலிருந்து கோட்டைக்கு சென்றுக் கொண்டிருந்த போது அங்கு ஒரு பெண் டீக்கடை வைத்திருந்தார். அந்த சமயத்தின் போது ஒரு முறை அந்த பெண்ணை காணவில்லை. உடனே காவல் துறையினரிடம் அந்த பெண்ணுக்கு என்ன ஆயிற்று என விசாரிக்க சொன்னார்.
வைர தோடு: போலீஸாரும் அலைந்து திரிந்து விசாரித்ததில் அவருக்கு உடல்நிலை பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணுக்கு நிதியுதவி செய்திருந்தார். அது போல் சிறிய வயதில் சர்ச் பார்க்கில் படித்த போது ஆண்டுவிழாவை முடித்துக் கொண்டு சென்ற போது அவருடைய தாய் ஜெயலலிதாவுக்கு வைர தோடு அணிவித்து அனுப்பியிருந்தார்.
சிக்னலில் கழை கூத்தாடி: காரில் வீடு திரும்பிய போது சிக்னலில் கழைக்கூத்தாடி பெண் ஒருவர் எல்லோரிடமும் யாசகம் கேட்டபடியே வந்த நிலையில் ஜெயலலிதாவின் காரிடம் வந்துள்ளார். அப்போது தன்னிடம் காசு இல்லாத நிலையில் தான் அணிந்திருந்த வைர தோட்டை கழற்றி அப்படியே அந்த தட்டில் போட்டுள்ளார்.
அன்பை அள்ளிக் கொடுக்கும் ஜெயலலிதா: வீட்டுக்கு வந்ததும் தோடு குறித்து அவரது தாய் கேட்ட போது நடந்ததை சொல்லியுள்ளார். அவரது தாய் திட்டினாராம். என்னிடம் காசு இல்லை, அதனால் தோடு போட்டேன், இதில் என்ன இருக்கிறது என கேட்டாராம். அது போல் அன்பு என வந்துவிட்டால் எதை கொடுப்பது, எதை கொடுக்கக் கூடாது என்பது ஜெயலலிதாவுக்கு தெரியாது. இவ்வாறு ரபி பெர்னார்டு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications