நாய்க்கு பிரியாணி.. மக்களை இழிவுபடுத்திப் பேசிய ராகவா லாரன்ஸ்! எழுந்த கண்டனம்.. பறந்த விளக்கம்!
சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் அரசியலுக்கு வருவது தொடர்பாக கடந்த சில நாட்களாக பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், அவர் பேசிய ஒரு கருத்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், தாம் கூறிய கருத்தை சிலர் தவறாகப் புரிந்துகொண்டு பரப்பி வருவதாகவும், மக்களை ஒருபோதும் இழிவுபடுத்தும் நோக்கில் பேசவில்லை என்றும் ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக அரசியலில் தற்போது தவெக அரசின் செயல்பாடுகள், திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் மற்றும் புதிய அரசியல் முகங்களின் வருகை ஆகியவை முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளன. அந்த வரிசையில் நடிகரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் அரசியலுக்கு வரலாம் என்ற தகவல்கள் வெளியாகின.

முதல்வர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற பிறகு, திருச்சி கிழக்கு தொகுதி காலியானது. இதனால் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தவெக சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உருவானது.
ராகவா லாரன்ஸ்
அப்போது ராகவா லாரன்ஸ் பெயரும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. முதலில் இதனை வதந்தி என பலர் கருதியிருந்தாலும், அண்மையில் வெளியிட்ட வீடியோவில் அரசியலுக்கு வருவது குறித்து ரசிகர்களின் கருத்தை கேட்டு முடிவு எடுக்கப் போவதாக ராகவா லாரன்ஸ் அறிவித்தார். அதன்பிறகு ரசிகர்களிடமிருந்து கிடைத்த கருத்துகளை ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த போது, தவெக அரசின் செயல்பாடுகள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அரசியல் வருகை
அதற்கு பதிலளித்த அவர், "அரசுக்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுக்க வேண்டும். மாற்றத்தை எதிர்பார்த்து மக்கள் வாக்களித்துள்ளனர். உடனடியாக முடிவுகளை எதிர்பார்க்க முடியாது" என்று கூறினார். ஆனால் அதே பேட்டியில் அவர் பயன்படுத்திய ஒரு உவமை சர்ச்சையை ஏற்படுத்தியது. "சில தெரு நாய்களுக்கு பிஸ்கட் பிடிக்காது; பிரியாணி தான் பிடிக்கும். அதுபோல மக்களுக்கும் அவர்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் இருக்கும்" என்ற பொருளில் அவர் பேசியிருந்தார். இந்தக் கருத்தை சிலர் கடுமையாக விமர்சித்தனர். மக்களை தெரு நாய்களுடன் ஒப்பிட்டு பேசிவிட்டார் என்று சமூக வலைதளங்களில் பதிவுகள் பரவின.
சர்ச்சைக்கு விளக்கம்
அரசியலுக்கு வருவதற்கு முன்பே தேவையற்ற சர்ச்சையில் சிக்கிக் கொண்டார் என்றும் சிலர் கருத்து தெரிவித்தனர். இதனால் உருவான விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார். அதில், "நான் மக்களை ஒருபோதும் நாய்களுடன் ஒப்பிட்டு பேசவில்லை. நான் சொன்ன கருத்தை முழுமையாக பார்க்காமல் சிலர் தவறாக பரப்பி வருகின்றனர். என் ரசிகர்களும், பொதுமக்களும் எனக்கு தாய்க்கு சமமானவர்கள். அவர்களை மதிப்பது என் கடமை" என்று தெரிவித்துள்ளார்.
அரசியல் வருகை
மேலும், அரசியலுக்கு வருவது குறித்த இறுதி முடிவை இன்னும் அறிவிக்கவில்லை என்றும், ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் விருப்பத்தை கருத்தில் கொண்டு விரைவில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவேன் என்றும் கூறியுள்ளார். ராகவா லாரன்ஸின் இந்த விளக்கம் வெளியான பிறகும் சமூக வலைதளங்களில் விவாதம் தொடர்ந்து வருகிறது. ஒரு தரப்பினர், அவர் பேசியதை முழுமையாக கேட்காமல் சிலர் சர்ச்சையாக்கியுள்ளதாக கூறுகின்றனர்.
தவெகவில் இணைவு
மற்றொரு தரப்பினர், பொதுவெளியில் பேசும் போது பிரபலங்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இதற்கிடையில், ராகவா லாரன்ஸ் விரைவில் தவெகவில் இணையக்கூடும் என்ற தகவல்களும் அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. ஆனால் இதுகுறித்து அரசியலில் இணைவது குறித்து அவர், இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.












Click it and Unblock the Notifications