களமிறங்கும் ராகுல் காந்தி! இன்றே சென்னைக்கு வருகை.. நாளை குமரியில் தொடங்கும் மிக நீண்ட "யாத்திரை"!
சென்னை: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று மாலை சென்னைக்கு வருகிறார். சென்னையில் ராகுல் காந்தியை வரவேற்க காங்கிரஸ் கட்சியினர் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியில் தலைமைக்கான பிரச்சனை நிலவி வரும் நிலையில் அக்கட்சி பாரத் ஜோடா யாத்திரை என்ற மிகப்பெரிய யாத்திரையை நாடு முழுக்க நடத்த உள்ளது. தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியை மீட்டு எடுக்கும் விதமாக இந்த யாத்திரை நடைபெற உள்ளது.
அது மட்டுமின்றி தேசிய அளவில் பாஜகவிற்கு எதிராக மக்களை திரட்டும் விதமாகவும், கட்சி சாராத பலரை பாஜகவிற்கு எதிராக ஒன்று திரட்டும் விதமாகவும் இந்த யாத்திரை நடைபெற உள்ளது.
காங்கிரஸ் நடத்த போகும் மிகப்பெரிய யாத்திரையாக இது பார்க்கப்படுகிறது.

என்ன செய்வார்?
இதை காங்கிரஸ் கட்சி இரண்டாவது உப்பு சத்தியாகிரக போராட்டமாக பார்க்கிறது. ராகுல் காந்தி செப்டம்பர் 7 - ந்தேதி குமரியில் இந்த பயணத்தை துவக்குகிறார். இந்த நடைப்பயணத்தில் ஒவ்வொரு 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு ராகுல் காந்தியுடன் 50 ஆயிரம் பேர் உடன் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிக பிரம்மாண்டமாக இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுக்க இந்த யாத்திரை நடத்தப்பட உள்ளது. ஆனால் இதில் மற்ற எதிர்க்கட்சிகள் கலந்து கொள்வது சந்தேகம்தான்.

திட்டம் என்ன?
காங்கிரஸ் மட்டுமின்றி காங்கிரஸ் சாராத பல அறிவுஜீவிகள், இடதுசாரிகள், எழுத்தாளர்கள் இந்த பேரணியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த யாத்திரையை முன்னிட்டு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று மாலை சென்னைக்கு வருகிறார். சென்னையில் ராகுல் காந்தியை வரவேற்க காங்கிரஸ் கட்சியினர் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். நாளை காலை ஸ்ரீபெரும்பதூரில் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். நாளை காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ கன்னியாகுமரியில் தொடங்க உள்ளது.

ஏற்பாடு என்ன?
3750 கிலோமீட்டருக்கு இந்த யாத்திரை நடத்தப்பட உள்ளது. இவ்வளவு தூரத்தையும் ராகுல் காந்தி நடந்தே செல்வார். ஒவ்வொரு மாநிலத்திற்குள் செல்லும் போதும் அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியுடன் உடன் செல்வார்கள். கன்னியாகுமரியில் தொடங்கினாலும் யாத்திரை தமிழ்நாடு வழியாக செல்லாமல், கேரளா வழியாக செல்ல உள்ளது. 150 நாட்கள் காங்கிரஸ் சார்பாக இந்த யாத்திரை நடத்தப்பட உள்ளது.

எவ்வளவு தூரம்
தினமும் 20- 30 கிலோ மீட்டர் தூரம் ராகுல் காந்தி இதற்காக நடைபயணம் செல்ல உள்ளார். அதேபோல் குஜராத் போன்ற மாநிலங்களுக்குள் இந்த யாத்திரை செல்லாது. கன்னியாகுமரியில் இருந்து கேரளா.. அங்கிருந்து கர்நாடகா, ஆந்திர பிரதேசம் தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை அடக்கி கடைசியில் ஜம்மு காஷ்மீரில் பயணத்தை முடிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. கன்னியாகுமரியில் காந்தி மண்டபத்தில் நடக்கும் தொடக்க நிகழ்வில் முதல்வர் ஸ்டாலினுடன் கலந்து கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications