ராகுலின் உச்சரிப்பால் கண்கலங்கிய 'வெங்காயம்' .. தமிழ் மக்கள் மனதை வென்றாரா ராகுல்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் பிரச்சாரம் செய்து வரும் ராகுல் காந்தியின் தேர்தல் வியூகம் குறித்தும், அதன் விளைவுகள் குறித்தும் அலசுகிறது இந்த கட்டுரை.

Recommended Video

    கரூர்: கொஞ்சம் தமிழ்… ‘கமகம’ காளான் பிரியாணி…அசத்திய ராகுல் காந்தி!

    தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி இப்போதே பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டது. 'தமிழ் வணக்கம்' என்ற பிரச்சார யுக்தியை கையில் எடுத்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட அடுத்த சில தினங்களிலேயே மீண்டும் தமிழகம் வருகை புரிந்துள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    rahul gandhi village cooking mushroom briyani tn election 2021

    ஒரே மாதத்தில் இரண்டு முறை ராகுல் தமிழகத்துக்கு வருகை புரிந்திருக்கிறார்.

    கடந்த 23ஆம் தேதியன்று கொங்கு மண்டலத்தில் பிரச்சாரத்தை துவக்கிய ராகுல் காந்தி, தொழில்துறை முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள், ஜிஎஸ்டி, வேளாண் சட்டங்கள் என பாஜகவை விமர்சித்தார்.

    தமிழர்களின் மொழி மற்றும் இனத்திற்கான தனித்துவத்தை பாஜக அங்கீகரிக்கவில்லை என்றும், ஆனால் தான் தமிழர் உணர்வையும், தமிழர் கலாசாரத்தையும் மதிப்பதாகவும் கூறினார்.

    ராகுலின் எளிய அணுகுமுறை

    இப்படியாக பிரச்சாரம் ஒருபக்கம் இருக்க, அதைவிட சற்று சுவாரஸ்யம் தூக்கலாக, சாலையோர கடையில் தேநீர் பருகுவது, மக்களிடம் செல்பி எடுத்துக் கொள்வது, மாட்டு வண்டியில் பயணிப்பது போன்ற அவரது செயல்பாடுகள் தான் கடந்த ஒரு வார சமூக தள டிரெண்டிங் ரிப்போர்ட்டுகளாக உள்ளன.

    இந்த நிலையில், சமையல் நிகழ்ச்சி ஒன்றில் ராகுல் காந்தி கலந்து கொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஒரு பிரபல யூடியூப் சேனலை நடத்தி வருபவர்கள் செய்த காளான் பிரியாணியை, அவர்கள் இடத்திற்கே சென்று, கலந்து கொண்டு, சமைத்து, அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து, தமிழில் கலந்துரையாடி 'ரொம்ப நல்லா இருக்கு' என்று சொல்லிவிட்டு திரும்பியிருக்கிறார் ராகுல்.

    ராகுலே 'ரொம்ப நல்லா இருக்கு'-னு சொன்ன அப்புறம் சும்மா இருந்தா எப்படி!? ஒரே நாளில் பல லட்சம் வியூஸ்களை அள்ளியது அந்த யூடியூப் சேனல். அந்த நிகழ்வு முழுவதும் ராகுலுடன் இருந்தது காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி.

    தனது தமிழக வருகை மூலம் மக்கள் மனதில், 'அட பரவாலப்பா..' என்று சொல்ல வைத்துவிட்டார் ராகுல் காந்தி. சாமானிய மக்களுடன் செல்பி எடுத்தது, மாட்டு வண்டியில் போனது என்று அனைத்திற்கும் செம ரீச் கிடைத்தது.

    ஆனால், ராகுல் தமிழகம் வந்தது இதற்கு தானா? அவரது போட்டோக்களுக்கான லைக்ஸ், ரீடிவீட்ஸ், கமெண்ட்ஸ், வீடியோவுக்கான வியூஸ், வியூவர்ஸ் இது மட்டும் போதுமா?

    rahul gandhi village cooking mushroom briyani tn election 2021

    இதுகுறித்து பிரபல அரசியல் ஆய்வாளர் அ.பெருமாள் மணியிடம் ஒன் இந்தியா தமிழ் சார்பாக நாம் உரையாடிய போது,

    "ராகுலின் தமிழக வருகை, எளிமையாக இருப்பது, சமைப்பது போன்றவையெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். ராகுலையே இங்கு மறந்திடுங்க..

    முதலில், ஒரு தலைவர் மக்களிடையே பேசுகிறார் என்றால், அவர் மக்கள் சார்ந்த எந்த பிரச்சனையை கையிலெடுத்து பேசினார்? என்பது தான் பிரதானம். நாம் ஒரு தலைவரை கூப்பிட்டு வந்து விதவிதமா செல்பி எடுக்க வைப்பது , அதை சமூக தளங்களில் வைரலாக்குவது, மாட்டு வண்டியில் ஏற்றி அதை வைரலாக்குவது என்பதெல்லாம் சிம்பல்ஸ். வெறும் குறியீடுகள் தான். ஆனா, தலைவர்கள் என்ன பிரச்னையை பற்றி பிரதானமாக பேசினார்கள்? மக்களிடம் அது போய் சேர்ந்ததா? மக்கள் மத்தியில் அது வைரலானதா? என்பது தான் இங்கு தேவை.

    மக்கள் பிரச்சனை வைரல் ஆனதா?

    செல்பி எடுப்பது, சாதாரண ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவது, வெங்காய பச்சடி செய்வது போன்றவை மக்களிடம் போய் சேர்ந்துவிட்டது. ஆனால், மக்கள் பிரச்சனை பற்றி பேசிய எந்த விஷயம் மக்களிடம் போய் சேர்ந்திருக்கிறது? தமிழக மக்களுக்கு என்று என்ன உறுதி மொழி கொடுக்கப்பட்டிருக்கிறது? அது தானே நமக்கு வேண்டும்!?

    ராகுல் மாதிரியான ஒரு டயனமிக் தலைவரை கொண்டு வந்து நீங்கள் நிறுத்தும் போது, அனைத்தும் பளிச்சென்று தான் இருக்கும். அவரோட கரிஷ்மா, அழகு எல்லாமே இருக்கும். ஆனால், தமிழகத்தின் ஆதாரமான பிரச்சனை குறித்து என்ன பேசப்பட்டது? என்பதே இங்கு முக்கியம். அது மக்களிடம் போய் சேர்ந்ததா? ஒருவேளை அப்படி மக்களிடம் சென்று சேர்ந்திருந்தால் உண்மையிலேயே அவர்களுக்கு வெற்றி தான். ஆனால், அது இல்லாமல் இப்படி bits and pieces-ஆக போய் சேர்ந்தது என்றால், தமிழகம் மாதிரி சென்சிட்டிவான ஒரு மாநிலத்தில் இதுக்கெல்லாம் என்ன ஒரு பலன் இருக்கும்?

    தொழில்நுட்பத்தின் ராஜ்ஜியம்

    இது போன்ற செயல்பாடுகள் மூலம் நவீன தொழில்நுட்பத்தை நன்றாக பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வளவு தான். ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்ட்டா என்று அனைத்து தளங்களும் நமது செயல்பாடுகளை ரீச் செய்ய பேருதவி புரிகின்றன. ஆனால், வெறும் செல்பி, மாட்டு வண்டி, சமையல் போன்றவற்றால் யாருக்கு என்ன லாபம் ஏற்பட போகிறது?

    rahul gandhi village cooking mushroom briyani tn election 2021

    இங்கு பிரச்சனை என்னவெனில், அனைத்தும் மிக நேர்த்தியாக திட்டமிடப்படுகிறது. பி.ஆர்.ஓ-க்கள் மூலம் தலைவர்களின் ஒவ்வொரு செயலும் திட்டமிடப்படுகிறது. தலைவர்கள் எங்கே தண்ணீர் குடிக்கணும், எங்கே நிற்கணும், யாரிடம் செல்பி எடுக்க வேண்டும் என்பது வரை அணு அணுவாக திட்டமிடப்படுகிறது.

    தலைவர்களை அவர்கள் பாணியிலேயே இருக்க விடுவதில்லை. தலைவர்களின் இயல்பான கரிஷ்மா-வை இவர்களே வெளிவர தடுக்கிறார்களோ என்று தான் எனக்கு தோன்றுகிறது. இதுபோன்ற இன்ச் பை இன்ச் திட்டமிடல் மூலம், வாக்காளர்களை இவர்கள் குறைத்து மதிப்பிடுகிறார்களோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

    இது எல்லாம் ஓகே தான். End of the day, தலைவர்கள் என்ன பிரச்னையை பற்றி பேசுகிறார் என்பதை பொறுத்தே மக்களை அவர்களுடன் நெருக்கமாக்கும். இது ராகுலுக்கு மட்டுமில்ல; அனைத்து தலைவர்களுக்கும் பொருந்தும்.

    இவை சமூக தளத்துடன் நெருக்கமாக உள்ள ஒரு ஸ்க்ரிப்ட் மட்டுமே. இதன் பிரதான நோக்கம் சமூக வலைத்தளத்தை சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கமே.

    அரசியல் கட்சிகளின் பிரதான சிக்கல்

    ஆனால், இதில் அனைத்து கட்சிகளுக்கும் உள்ள சிக்கல் என்னவெனில், அவர்கள் சமூக தளங்களை Balance செய்யும் விதம் தான். செல்பி எடுப்பது, சமைப்பது போன்ற நிகழ்வுகளை ஒருபக்கம் ரீச் செய்தால், மறுபக்கம் தலைவர்கள் பேசும் மக்கள் பிரச்சனை குறித்த ரீச்சும் இருக்க வேண்டும். அது தான் சமூக தளங்களை Well Balanced-ஆக பயன்படுத்தியதாக கருத முடியும். ஏனெனில், சமூக தளத்தை எவரும் புறக்கணிக்கவும் முடியாது.

    ஆனால், ஒன்று மட்டும் உண்மை. அரசியல் கட்சிகள் தேர்தலுக்காக இதுபோன்று சமூக தளங்களை பயன்படுத்துவதன் சாதக, பாதகம் இன்னும் ஒருசில தேர்தல்கள் கடந்தால் தான் தெரியவரும்.

    கடைசியாக ஒன்றை மட்டும் சொல்லி நிறைவு செய்ய விரும்புகிறேன். அரசியல் தலைவர்களின் பி.ஆர்.ஓ.க்கள் அணு அணுவாக பிளான் செய்வது இங்கு மாற வேண்டும். மூச்சு விடுவதைத் தவிர்த்து அனைத்தும் பி.ஆர். கண்ட்ரோலில் இருப்பது தவிர்க்கப் பட வேண்டும்.

    அரசியலை நிச்சயம் மார்க்கெட்டிங்காக செய்ய முடியாது. தலைவர்கள் ரோட்ஷோ செய்வதை விட, நேரடியாக பிரச்சனைகளை பேசுவது தான் தேவை. அது தான் மக்களின் தேவையும் கூட. இங்கே எண்டெர்டெயின்மெண்ட் தேவையில்லை; பிரச்சனைகளுக்கு தீர்வு மட்டுமே தேவை" என்றார்.

    மக்கள் மனதை கவர்ந்த ராகுல்

    எது எப்படியோ... ராகுலின் குக்கிங் வீடியோ ஏகத்துக்கும் வைரல் என்பது மறுக்கவே முடியாத உண்மை.

    அந்த யூடியூப் சேனல் குழுவினருடன் கைக்குலுக்கியது தொடங்கி, சாப்பிட்டு முடித்து கைக்கழுவியது வரை, ராகுலின் அணுகுமுறை, செயல்பாடுகள் என அனைத்தும் மக்கள் மனதில் பச்சக்கென்று ஒட்டிக் கொண்டது.

    குறிப்பாக, யூடியூப் குழுவினருடன் இணைந்து 'தயிர் பச்சடி' செய்ய பேண்ட் அணிந்திருந்தாலும் 'வேட்டிய மடிச்சுக் கட்டு' மோடில் ராகுல் காந்தி களமிறங்கியது வேற லெவல்.

    கண்கலங்கிய வெங்காயம்

    'வெங்காயம்' என்று ராகுல் காந்தி தமிழில் உரக்கச் சொன்னதை கேட்டு வெங்காயமே கண்ணீர் சிந்தியிருக்கும். பிறகு, வெங்காயத்துடன் தயிரை மிக்ஸ் செய்யும் முன்னர், இது என்னவென்று கேட்டு, 'தயிறு' என்று லோக்கல் ஸ்லாங்கில் அவர் உச்சரித்த வார்த்தையை கேட்டு 'ஹிந்தி' வாடை மேற்கு திசையை நோக்கி ஓடியிருக்க வாய்ப்புள்ளது.

    பிறகு 'கல்லுப்பு' என்று அவர் சொன்ன போது, தமிழுக்கே சந்தேகம் வந்திருக்கும், இந்தாளுக்கு உண்மையிலேயே நம்மள தெரியுமோ என்று. அனைத்தையும் கலந்து அவரே மிக்ஸ் செய்ய பச்சடி தயார்.

    அப்புறமென்ன... கம கம மணம் வீசும் காளான் பிரியாணி தலைவாழை இலையில் இட்டு ராகுலுக்கு பரிமாறப்பட்டது. சமையல் குழுவினருடன் சேர்ந்து அவரும் உற்சாகமாக சாப்பிட்டு மகிழந்தார்.

    அடுத்து என்ன?

    அப்போது, சமையல் குழுவினரைப் பார்த்து, 'நீங்கள் அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்க, அவர்களோ வெளிநாடு போய் சமைக்கணும் சார்... முதலில் அமெரிக்க போகணும்-னு ஆசை என்று சொல்ல, 'நான் நீங்க அமெரிக்கா போக ஏற்பாடு செய்யட்டுமா?' என்று ராகுல் கேட்டதை அங்கு எவருமே எதிர்பார்க்கவில்லை.

    சிறிது நேரத்தில் ராகுல் எழுப்பிய அந்த ஒரு கேள்வியும் 'அட ஆமாம்ல' ரகத்தில் இருந்தது. 'நீங்கள் ஏன் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கும் சென்று சமைக்கக் கூடாது?' என்று அவர் கேட்டது உண்மையிலேயே 'அப்லாஸ்' வாங்கக் கூடிய கேள்வி என்றே சொல்ல வேண்டும்.

    வெளிநாடு சென்று சமைக்க வேண்டும் என்று விரும்பும் நீங்கள், இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு சென்று முதலில் ஏன் சமைக்கக் கூடாது என்பதே அவருடைய கேள்வியின் சாராம்சம். இந்த கேள்வியினாலும் பலரது ஹார்ட்டை வென்றார் ராகுல்.

    ஒட்டுமொத்தமாக, ராகுலின் இந்த தமிழக பயணம், அவரது இந்த எளிய அணுகுமுறை காங்கிரஸ் கட்சிக்கோ அல்லது அது சார்ந்த கூட்டணிக்கு ஓட்டுகளாக மாறுமா அல்லது ராகுலுக்கு மக்கள் மனதில் இடம் மட்டும் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+