4 நாட்களாக வெளுத்தெடுத்த மழை.. சென்னையில் இன்றும் மழைக்கு வாய்ப்பிருக்கா?.. வெதர்மேன் ட்வீட்!
சென்னை: இன்று முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழையின் அளவு குறையும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக் காற்று காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வந்தது. இந்த நிலையில் 22 ஆம் தேதிக்குள் வங்கக் கடலில் ஒடிஸா கடலோரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது.
இதனால் சென்னையில் கடந்த 4 தினங்களாக அடைமழை பெய்து வந்தது. மாலை நேரங்களில் கருமேகங்கள் சூழ்வதும் சிறிது நேரத்தில் மணிக்கணக்கில் மழை பெய்வதுமாக இருந்தது.

விடிய விடிய கொட்டிய மழை
சில நேரங்களில் விடிய விடிய மழை பெய்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் எந்த பகுதியும் விடாமல் மழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. ஒரு வேளை வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பொய்த்து போனாலும் இந்த நிலத்தடி நீரை பயன்படுத்திக் கொள்ளலாம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

பிரதீப் ஜான் ட்விட்டர்
இதுகுறித்து பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் நேற்றைய தினம் 4 ஆவது நாளாக சென்னையில் மழை கொட்டியது. இதில் அண்ணாநகரில் 4 நாட்களும் பெய்தன. அது போல் அம்பத்தூரில் முதல் நாள் மழை பெய்யாமல் இருந்த நிலையில் அடுத்த நாள் மழை வெளுத்து வாங்கியது.

4 நாட்களும்
அது போல் இந்த 4 நாட்களும் சென்னையில் பரவலாக மழை பெய்தது. இன்று முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழையின் தாக்கம் குறையும் என தெரிவித்துள்ளார். இந்த குறைந்த காற்றழுத்தம் உருவான பின்னர் மேற்கு கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகம்
தென்மேற்கு பருவமழை கேரளம் மற்றும் தமிழகத்தின் தெற்கு பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது. இதனால் கேரள எல்லையில் உள்ள தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான கோவை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் சாரல் மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications