தொழுகையில் கரம்கோர்த்த இஸ்லாமிய சகோதரர்கள்.. தமிழ்நாட்டுக்கு மழை வேணும்.. விண்ணதிர்ந்த பிரார்த்தனை
பெரம்பலூர்: வெயில் வாட்டி வதைத்துவரும்நிலையில், மழைவேண்டி இஸ்லாமியர்கள் கூட்டுத்தொழுகைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழகமெங்கும் வெயில் கொளுத்தி கொண்டிருக்கிறது.. அளவுக்கு அதிகமான வெப்பம் நிலவும் என்று வானிலை மையம் எச்சரித்து வந்தபோதிலும்கூட, சமாளிக்க முடியாத அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது.

கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே வெயில் மண்டையை பிளந்து வருவதால், தமிழக மக்கள் விழிபிதுங்கியிருக்கிறார்கள்.. குறிப்பாக சேலம், ஈரோடு, கரூர், தர்மபுரி, திருத்தணி, திருப்பத்தூர், வேலூர் மாமாவட்டங்களில் 105, 106 டிகிரி என தொடர்ந்து பதிவாகி கொண்டிருக்கிறது..
ஈரோடு: இதில் டாப்பில் உள்ளது ஈரோடு, சேலம் மாவட்டங்கள்தான்.. இங்கெல்லாம் 108 டிகிரியையும் கடந்து, இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளது.
முக்கியமாக, ஈரோட்டில் 11-வது நாளாக நேற்று 110 டிகிரி வெயில் கொளுத்தியது. இதைவிட கொடுமை, ஊட்டி, கொடைக்கானல், வால்பாறையில்கூட வெயிலின் தாக்கம் அதிகரித்துவருகிறது.. இதில், ஊட்டி "ரிக்கார்டு பிரேக்" செய்துள்ளது.. ஊட்டியில் இதுவரைக்கும் இப்படி வெப்ப அளவு பதிவானதேயில்லை.. இதனால் ஊட்டி மக்கள் விழிபிதுங்கி கொண்டிருக்கிறார்கள்.
நீர்மோர் பந்தல்கள்: அதனால்தான், பல்வேறு அரசியல் கட்சிகளும், தனியார் அமைப்புகளும் ஆங்காங்கே நீர் மோர் பந்தல்களை திறந்து வைத்து வருகினறன.. தேவையில்லாமல் வெயிலில் அலைய வேண்டாம் என்று வானிலை மையமும், தமிழக சுகாதாரத்துறையும், தொடர்ந்து பொதுமக்களை கேட்டுக் கொண்டு வருகின்றன.
இதனிடையே மழை வருவதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.. இன்னும் 3 நாளில் தமிழகத்தில் மழை வரப்போகிறதென்று வானிலை ஆய்வு மையமும் கூறியிருக்கிறது..
நல்ல மழை: இந்நிலையில்தான், மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தியிருக்கிறார்கள்.. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் இஸ்லாமிய பிரச்சார சபை சார்பில், மழை வேண்டி இந்த சிறப்பு தொழுகை தமிழகமெங்கும் நடத்தப்பட்டு வருகிறது..
அந்தவகையில், கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியிலும் இன்று சிறப்பு தொழுகை நிகழ்வு நடத்தப்பட்டது. மௌலவி யூனுஸ் ஃபிர்தெளசி தலைமையில் நடந்த இந்த சிறப்பு தொழுகையில், 500 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய சகோதரர்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர்... மழை வேண்டி சிறப்பு தொழுகை நடத்திய பிறகு, அதில் கலந்து கொண்டு சிறப்பித்த அத்தனை பேருக்கும் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.
சிறப்பு தொழுகை: 2 நாட்களுக்கு முன்பு, திருப்பூரில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மழை வேண்டி நேற்று சிறப்பு தொழுகை நடைபெற்றது.. திருப்பூர், பெரிய கடை வீதி, நொய்யல் வீதி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி வளாகத்திலேயே, மாவட்ட பேச்சாளர் பஷீர் அலி தலைமையில், இந்த தொழுகை நடந்தது. இதில் திரளான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.
விவசாயிகள் போதிய நீர் இல்லாததால் விவசாயம் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருவதாலும், கால்நடைகளுக்கு புற்கள் கூட இல்லாமல் விவசாயிகள் தவிப்பதாலும், மழை பெய்ய வேண்டி இந்த தொழுகை மேற்கொள்ளப்பட்டது.. பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களிலும் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு கூட்டுத்தொழுகை நடத்தி பிரார்த்தனை செய்தனர்.
கூட்டுத்தொழுகை: தமிழகத்தில் வரலாறு காணாத, இந்த கடும் வெப்பம் குறைய வேண்டும், பொது மக்களுக்கு தேவையான குடிநீர் ஆதாரத்திற்கும், விவசாயத்திற்கு தேவையான நீர் ஆதாரத்திற்கும், கடும் வெப்பத்தின் தாக்கம் குறைந்து பூமி குளிரவேண்டும் என்பன உள்ளிட்டக் காரணங்களுக்காக, நல்ல மழை வேண்டி இந்த சிறப்பு கூட்டுத்தொழுகைகளை இஸ்லாமிய சகோதரர்கள் தொடர்ந்து நடத்தி கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications