"அவர் ஒன்னும் போற மாதிரி தெரியல".. திமுகவை ஆள நினைத்தாரா வைகோ? போட்டு உடைத்த மல்லை சத்யா

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவில் இருந்து பிரிந்து மதிமுகவைத் தொடங்கிய வைகோவின் அரசியல் நகர்வுகள் மற்றும் அவரது வன்மத்திற்கான பின்னணியை முன்னாள் மதிமுக நிர்வாகி மல்லை சத்யா பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.. வைகோவின் அதிகார ஆசை, உட்கட்சி ஜனநாயகப் படுகொலை மற்றும் அவரது மகன் துரை வைகோவின் திடீர் அரசியல் வருகை போன்றவற்றையெல்லாம் மல்லை சத்யா கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக மீது ஏன் இவ்வளவு வன்மம்? என்ற கேள்விக்கும் பதிலளித்துள்ளார்.

News time TN என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள மல்லை சத்யா, "வைகோ எப்போதும் திமுகவுக்கு, தான் தலைமை தாங்க வேண்டும், அதை தன்வசப்படுத்த வேண்டும் என்றுதான் நினைத்தார். அப்போது கூட, உங்களுக்கான காலகட்டம் இருக்கிறது, காத்திருங்கள் என்று மூத்த தலைவர்கள் சொன்னார்கள்.

Vaiko

அதற்கு "இன்னும் எத்தனை நாளைக்கு காத்துட்டு இருப்பது, அவர் ஒன்னும் போவது மாதிரி தெரியல" என்ற வார்த்தைகளை எல்லாம் வைகோ பயன்படுத்தினார். கலைஞருக்கு பிறகு நாம் தலைவராக வரலாம் என்று எதிர்பார்த்தார். அப்படி தலைமை தாங்க முடியாத சூழல் வரும்போதுதான் அவர் மதிமுகவை உருவாக்குகிறார்.

மல்லை சத்யா - திமுக மீது வெறுப்பு ஏன்

மதிமுகவின் மூலமாக திமுகவின் அழிவை முடித்து வைக்கலாம் என்று பார்த்தார். ஆனால், 1996 தேர்தலிலேயே அவரை வீழ்த்தி திமுக ஆட்சி கட்டிலுக்கு வந்தது. தனித்துப் போட்டியிட்ட தேர்தல்களில் தோல்விகளை சந்தித்தோம். எந்தவொரு சந்தர்ப்பம் கிடைத்தாலும் அவர் திமுகவை வீழ்த்துவதற்குத்தான் உபயோகப்படுத்தினார் வைகோ. எல்லா காலகட்டத்திலும் அதைத்தான் பயன்படுத்தினார்.

திமுக என்ற சக்தி வைகோவுக்கு நெகட்டிவாக எதுவுமே பண்ணவில்லை. அவரைப் போற்றிப் பாதுகாத்தது திமுகதான். மதிமுக தொண்டர்கள் கொள்கைப் பற்றுடையவர்கள் என்ற காரணத்தினால் தமிழ்நாட்டில் எத்தனையோ கட்சிகள் இருந்தாலும் அவர்கள் அதிமுக, பிஜேபி, காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்குப் போக விரும்ப மாட்டார்கள், திமுகவுக்குத்தான் போக வேண்டும் என்று விரும்புவார்கள்.

உதயசூரியன் சின்னம்

இந்த உளவியலைப் புரிந்து கொண்ட வைகோ, திமுக ஆட்சி கட்டிலில் இருக்கின்ற வரையிலும் நாம் அந்த இடத்தை விட்டு விலகக்கூடாது என்று நினைத்தார். நாம் விலகினால், இனி அவரை நம்பி பயனில்லை என்ற முடிவுக்கு வந்து ஒட்டுமொத்த மதிமுகவினரும் திமுக பக்கம் போய் சேர்ந்துவிடுவார்கள் என்பதை அறிந்து, மதிமுகவினர் யாரும் திமுகவில் சேரக் கூடாது என்று தடுத்து நிறுத்திக் கொண்டே வந்தார்.

2021ம் ஆண்டு தேர்தலில் 6 பேர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதற்காகவே, எங்களை அறிவாலயத்தில் கொண்டு போய் தளபதியிடம் ஒப்படைத்து, "இவங்க எல்லாம் இன்னையிலிருந்து திமுக" என்று வைகோ எங்களை வாடகைக்கு விட்டு சென்றார். காரணம், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றால் திமுகவில் இருந்தால்தான் முடியும் என்பதால் அப்படி செய்தார்.

அந்த 6 பேரில், தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்ததற்கு பின்னால் நான் மட்டும்தான் என்னுடைய உறுப்பினர் அட்டையை மதிமுகவில் மீண்டும் புதுப்பித்துக் கொண்டேன்.

மகன் துரை வைகோ

வாரிசு அரசியலை எதிர்த்து, நீங்கள் எந்தக் கொள்கையை முன்வைத்து மதிமுக என்ற கட்சியை உருவாக்கினீர்களோ, அதை நீங்களே உடைக்கிறீர்கள். அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் வாரிசு அரசியலில் வந்தவர் என்று சொல்கிறீர்கள். ஆனால், அவர் தனது கால்சட்டைப் பருவத்தில் இருந்தே திமுகவில் அடிமட்டத்திலிருந்து பணியாற்றி உழைத்து இந்த இடத்திற்கு வந்தவர். அவருக்கு அந்த அரசியல் ஸ்பேஸ் இருக்கிறது.

ஆனால், உங்கள் மகன் துரை வைகோவைப்போல 50, 52 வயது வரை உலகம் முழுவதும் சொத்துக்களை வாங்கிக்குவித்து, நல்ல வாழ்க்கை வாழ்ந்துவிட்டு, இப்போது திடீரென்று அரசியல் தேடி வந்தவர் அல்ல ஸ்டாலின்.

மதிமுகவில் வைகோ ஒரு அறிவிக்கப்படாத உட்கட்சி ஜனநாயக படுகொலையைச் செய்தார். பொதுவாக ஒரு தீர்மானம் குறித்துப் பேசப் போகிறோம் என்றால் 15 நாட்களுக்கு முன்பே நோட்டிபிகேஷன் கொடுக்க வேண்டும். ஆனால், உங்கள் மகன் அரசியலுக்கு வர வேண்டுமா, வேண்டாமா என்று ஒரு வாக்கெடுப்பு நடத்துகிறீர்கள். அந்த வாக்கெடுப்பு நடத்துகிற கடைசி நிமிடம் வரை எங்களுக்குத் தெரியாது.

மதிமுக அதிருப்தியாளர்கள்

இப்படி ஒரு ஜனநாயக படுகொலையை வைகோ செய்து தனது மகனைக் கொண்டு வந்த போதுதான், இயக்கத்தின் மூத்த முன்னோடிகள் எல்லாம், இவர் ஒரு போலியான முகம் கொண்ட தலைவர், கொள்கை சார்ந்தவர் அல்ல, ஒரு சந்தர்ப்பவாதி என்று புரிந்து கொண்டு விலகி நின்றார்கள்.

அப்படி விலகிய அவர்கள் அனைவரும், திமுகவுக்குப் போக வேண்டும் என்று நினைத்த போது, வைகோ அறிவாலயத்திற்குச் சென்று, "மதிமுகவிலிருந்து அதிருப்தியாளர்கள் யார் வந்தாலும் நீங்கள் கட்சியில் சேர்க்கக் கூடாது, நாம் கூட்டணியில் இருக்கிறோம்" என்று ஸ்டாலினிடமோ அல்லது கட்சியின் முன்னணித் தலைவர்களிடமோ சொல்லி அதைத் தடுத்து நிறுத்தினார்கள்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+