அடுத்த 24 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் கன மழை.. வானிலை மையம் எச்சரிக்கை
Recommended Video

சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் இன்று கூறியதாவது: நேற்று, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டியுள்ள தமிழக கடற்கரை பகுதியில் நிலவிய வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று வலு குறைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக தமிழகத்தின் உள்பகுதிகளில் நிலவுகிறது.
தொடர்ந்து வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து இது வலுவிழக்க கூடும்.

மழை அளவு
தமிழகம், புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் நல்ல மழை பெய்துள்ளது. சோழவரம், மாதவரம் 12 செ.மீ, ரெட்ஹில்ஸ் 11 செ.மீ, பொன்னேரி 10 செ.மீ, நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் தலா 9 செ.மீ, தாமரைப்பாக்கம், நெய்வேலி 8 செ.மீ, தரமணி, செங்கல்பட்டு 7 செ.மீ, திருத்தணி, பாண்டிச்சேரி, சமயபுரம், செஞ்சி, பூண்டி பகுதிகளில், 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

கன மழை
அடுத்த 24 மணி நேரத்தில், வட தமிழகத்தில் பரவலாகவும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும். கன மழையை பொருத்தளவில் விழுப்புரம், புதுவை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நாமக்கல், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, வேலூர், ஈரோடு, கரூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

சென்னை மழை அளவு
சென்னையை பொறுத்தளவில், இடைவெளி விட்டு மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மாவட்டத்தில், அக்டோபர் 1 முதல் இன்றுவரையிலான நிலவரப்படி 31 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இயல்பு மழை அளவு 66 செ.மீ ஆகும். எனவே 45 விழுக்காடு குறைவான மழைதான் பதிவாகியுள்ளது. 2 தினங்கள் முன்புவரை 60 சதவீதம் மழை பற்றாக்குறை இருந்தது. கடந்த 2 தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக, இந்த சதவீதம் இப்போது குறைந்துள்ளது.

32 சதவீதமாகும்
தமிழகம் முழுக்க அக்டோபர் 1 முதல் இன்று வரை, 26 செ.மீ மழை பெய்துள்ளது. இயல்பான அளவு 32 சதவீதமாகும். இந்த ஒரே மழையால் பற்றாக்குறை பூர்த்தி செய்ய முடியாது. இனி வரும் காலங்களில் வரும் மழையும் சேர்ந்தால் பற்றாக்குறை குறையுமா என்று எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications