"விஜய் திரும்பிப் போகும்போது விரைவாக போறாரே எப்படி?” அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் எழுப்பும் கேள்வி!
சென்னை: "விஜய் ஒவ்வொரு கூட்டத்தையும் முடித்துவிட்டு திரும்பிச் செல்லும்போது மட்டும் எப்படி விரைவாகச் செல்கிறார்? அப்போது மட்டும் செல்வாக்கை இழந்துவிடுவாரா? வருகை தரும்போது மட்டும் பல மணி நேரம் கூட்ட நெரிசலில் சிக்குகிறார் என்றால் செயற்கையாக கூட்டத்தை கூட்டினீர்கள் என்பதுதானே உண்மை?" என அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கரூர் துயரச் சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் மூன்று நாட்கள் கழித்து, தவெக தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "சி.எம் சார், உங்களுக்கு ஏதாவது பழிவாங்கும் எண்ணம் இருந்தால், என்னை என்ன வேண்டுமானாலும் பண்ணுங்க. அவர்கள் மீது கை வைக்காதீர்கள். நான் ஒன்று வீட்டில் இருப்பேன் அல்லது அலுவலகத்தில் இருப்பேன். என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்." எனக் கூறியுள்ளார் விஜய்.

கரூர் துயரம் சதியா?
விஜய் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசியிருக்கும் விஷயங்கள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளன. ஏற்கனவே தவெக தொண்டர்கள் பலர் கரூர் துயரச் சம்பவத்தின் பின்னணியில் சதி நடந்திருக்கலாம் என வதந்தி பரப்பி வரும் சூழலில் விஜய்யின் பேச்சு சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளது. இந்நிலையில், அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன், விஜய்யின் வீடியோ தொடர்பாக நமது ஒன் ஒந்தியா தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
ராஜகம்பீரன் பேசுகையில், "விஜய் கூட்டத்தில் சதித் திட்டம் தீட்டினார்கள் என்பதற்கான சாட்சியம் எங்குமே இல்லை. 27 ஆயிரம் பேர் கூடியிருந்த கூட்டத்தில் எல்லார் கண் முன்பும் தானே பலர் வெயிலால், பசியால், தாகத்தால் நெரிசலால் மயங்கி விழுந்தார்கள். அவர்களை ஆம்புலன்ஸ் அள்ளிச் சென்ற நிலையில் அவர்கள் உயிரிழந்தது எல்லார் கண் முன்பும் தானே நடந்தது. அதை சதி எனக் கூறினால் எப்படி நம்புவது?
திரும்பிச் செல்லும்போது மட்டும்..
விஜய் ஒவ்வொரு கூட்டத்தையும் முடித்துவிட்டு திரும்பிச் செல்லும்போது மட்டும் எப்படி விரைவாகச் செல்கிறார்? அப்போது மட்டும் செல்வாக்கை இழந்துவிடுவாரா? வருகை தரும்போது மட்டும் பல மணி நேரம் கூட்ட நெரிசலில் சிக்குகிறார் என்றால் செயற்கையாக கூட்டத்தை கூட்டினீர்கள் என்பதுதானே உண்மை?
விஜய் சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து பட்டினம்பாக்கம் இல்லத்துக்குச் செல்கிறார். அப்போது ஏன் கூட்டம் இல்லை? விஜய் இங்கு வருகிறார்.. அங்கு வருகிறார் என பில்டப் கொடுத்து உருவாக்குகிற கூட்டம் தான் இது. கரூரில் நடந்தது செயற்கைப் பேரிடர். மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல.
இதனை திமுக மீது பழிபோட்டு விஜய் தப்பிக்க நினைத்தால், இந்த தவறுக்குப் பொறுப்பேற்காத ஒற்றைக் காரணத்துக்காகவே விஜய் மக்களால் நிராகரிக்கப்படுவார். அவரது அரசியல் வாழ்க்கை மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறிவிடும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications