ராஜாஜி நடத்திய ‘தர்ம யுத்தம்'..! அண்ணா தோல்வி; காமராஜ் வெற்றி: 1962இல் காங். வென்றது எப்படி?
சென்னை: தமிழகத்தில் கடந்த 1962ம் ஆண்டு நடந்த தேர்தலில் நேருவை எதிர்த்து அரசியல் செய்த ராஜகோபாலாச்சாரியை பின்னுக்குத் தள்ளிவிட்டு மூன்றாவது முறையாக முதல் அமைச்சராக காமராஜ் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினார்.
1962 பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதிவரை தேர்தல் நடைபெற்றது. கடந்த 15 ஆண்டுகளாக அன்றைய 'மெட்ராஸ்' மாநிலத்தைக் காங்கிரஸ் ஆட்சி செய்து முடித்திருந்தது. அதாவது 1942 தொடங்கி 1962வரை 'மெட்ராஸ்' மாநிலத்தைக் காங்கிரசே ஆண்டது.

ராஜாஜி எழுதிய எச்சரிக்கை கடிதம்
காமராஜருடன் பிணக்கு உண்டாகி, காங்கிரசை விட்டு வெளியேறி ராஜாஜி, 62 தேர்தலின் போது தனியாகச் சுதந்திர கட்சியை உண்டாக்கி இரண்டரை ஆண்டுகளைக் கடந்திருந்தார். அவரது கட்சிக்கு நட்சத்திர சின்னம் வழங்கப்பட்டிருந்தது. நீல வண்ணக் கொடியில் நட்சத்திரம் பதித்த கொடியைச் சுதந்திர கட்சி வானில் பறக்கவிட்டிருந்தது.
அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியில் நேருக்கு இணையாகக் கருதப்பட்ட சில தலைவர்கள் சுதந்திராக் கட்சியில் இணைந்திருந்தனர். செல்வந்தர்கள் பலரும் இக்கட்சியை ஆதரிக்கத் தொடங்கியிருந்தனர். காந்தி மறைந்த பிறகு தன்னை அவரது இடத்திற்கு உயர்த்திக் கொள்ளும் முயற்சியை ராஜாஜி மேற்கொண்டிருந்தார்.
1962இல் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரசையும் காமராஜையும் மிகக்கடுமையாகச் சுதந்திர கட்சி எதிர்த்தது. காங்கிரஸின் அதிகார பலம், ஆட்சி அதிகாரம் ஒழிக்கப்பட வேண்டும் என அறைகூவல் விடுத்து வந்தார் ராஜாஜி. தமிழக வாக்காளர்களை நோக்கி அவர் 07.02.1962 அன்று கைப்பட ஒரு கடிதம் எழுதினார்.
அதில், "என் எச்சரிக்கைகளைக் கேளுங்கள். குழப்பத்துக்கும் பயத்துக்கும் இடம் கொடுக்காமல் சுதந்திரக் கட்சிக்கு 'ஓட்' செய்யுங்கள். காங்கிரசுக்கு 'ஓட்' செய்யாதீர்கள். சுதந்திரக் கட்சி அபேட்சகர் (வேட்பாளர் என்று அர்த்தம்) இல்லாத இடங்களில் காங்கிரசைத் தீவிரமாக எதிர்க்கும் அபேட்சகர்களுக்கு 'ஓட்' செய்யுங்கள். பெருத்த எதிர்கட்சியை நிர்மாணித்து எல்லா சட்டசபைகளிலும் நிறுத்த வேண்டும். அப்போதுதான் எதேச்சாதிகாரம் தடைப்படும். தேர்தலுக்கு முன் காங்கிரஸ் தலைவர்கள் தேனைப் பீல் பேசுவார்கள். எல்லாம் சர்வாதிகாரத்துக்கு அஸ்திவாரம்" என்று கூறியிருந்தார் ராஜகோபாலாச்சாரி.
காங்கிரஸ் வாக்குறுதிகள் பொய்யா?
1962இல் இந்தியாவின் மீது சீனா போர் தொடுத்திருந்தது. போர் மேகங்கள் நாட்டை அச்சுறுத்தி வந்தன. பிரதமர் நேரு வலிமையான தலைவராகத் தன்னைத் தக்கவைக்கப் பல மாநிலங்களின் ஆதரவைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அவர் நினைத்திருந்தால், போர் சூழலைக் காரணம் காட்டி சர்வாதிகாரியாக மாறியிருக்க முடியும். ஆனால், அவர் இந்திய ஜனநாயகத்தைத் தழைக்க வைக்க விரும்பினார் என தன் அரசியல் அனுபவக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் எழுத்தாளர் ஜெயகாந்தன்.
இந்தக் காலகட்டத்தில் நடந்த தேர்தலில்தான் நாடு எதேச்சதிகாரம் பெற்றுவிடும் என்றும் நேருவின் சோஷலிஸக் கொள்கை நாட்டை பின்னோக்கி தள்ளிவிடும் என்றும் கம்யூனிச எதிர்ப்பாளரான ராஜாஜி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
மேலும் காங்கிரஸ் முன்வைத்த சோஷலிஸ திட்டங்கள் சாத்தியமற்றவை என தன் தேர்தல் வாக்குறுதிகள் மூலம் மக்களுக்கு தன் ஆதரவு பத்திரிகை வாயிலாகப் புரியவைக்க முயன்றார் ராஜாஜி. அதாவது மாநிலத்தில் உள்ள 10 லட்சம் ஏக்கர் விளைநிலங்களை, இரண்டரை லட்சம் உழவர் குடும்பங்களுக்கு எப்படிப் பகிர்ந்து அளிக்க முடியும் என்றும், மாதம் 300 ரூபாய்க்கு மேல் குடும்ப வருமானம் கொண்டுள்ள வெறும் 15% தரப்பினரின் சொத்துக்களை எப்படி மீதமுள்ள 85% பேருக்குப் பகிர்ந்து கொடுத்து வாழ்வின் தரத்தை உயர்த்த முடியும்? இது சாத்தியமா எனக் கேட்டார்.
"தொழில் நிறுவனங்கள் தன்னிச்சையாகச் செயல்படவிடாமல் காங்கிரஸ் அரசு கட்டுப்பாட்டை விதிக்கிறது. ஆகையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தொழில் உரிமையைப் பேணிக்காக்கவே சுதந்திரக் கட்சி. இந்தத் தேர்தல் ஒரு தர்மயுத்தம்" என்று பேசினார் ராஜாஜி. சுருக்கமாக எழுதினால், அமெரிக்க - காந்தியக் கலவையாகச் சுதந்திரக் கட்சி இருந்தது. ஆனாலும், ராஜாஜியின் கட்சி பெரிய அதிர்வைத் தேர்தல் களத்தில் உண்டாக்கவில்லை.
சுதந்திரமான தொழில் உரிமையில் சர்க்காரின் தலையீடு ஒருவகையில் முதலாளிகளுக்கு இடைஞ்சலாக இருந்தது. காங்கிரஸ் அல்லாத கட்சிகள் 'லைசென்ஸ் பர்மிட் முறை' நாட்டில் ஊழலை உண்டாக்கும் என்றே கருத்துக் கூறி வந்தனர். காங்கிரஸ் ஆட்சியில் இது மறைமுகமான ஊழலை ஊக்குவிக்கும் என்றும் கூறினர். ஒருவகையில் அது உண்மைதான் என்று எழுதியுள்ளார் எழுத்தாளர் ஜெயகாந்தன்.
திமுக கையில் 50 தொகுதிகள்
இவர் அடிப்படையில் கம்யூனிஸ்ட். ஆனால், காமராஜரையும் அவரது ஆட்சியையும் ஏற்றுக்கொண்டு இக்காலகட்டத்தில் பிரச்சார பீரங்கியாகச் செயல்பட்டார். சீனப் போரைச் சமாளிக்க நேருவின் கரத்தை வலிமையாக்க வேண்டும் என முடிவு எடுத்திருந்த இவருக்கு திமுகவின் வளர்ச்சி மிகப்பெரிய எரிச்சலைக் கொடுத்திருந்தது. இவர் காமராஜை ஆதரித்ததற்கு திமுகவின் வளர்ச்சி ஒரு பிரதான காரணம். இதே காலகட்டத்தில் காங்கிரஸை, காமராஜரை, நேருவை மிகக் கடுமையாக எதிர்த்து ஒரு மாநிலக் கட்சியாக திமுக வளர்ந்து வந்தது. இந்த வளர்ச்சியைக் காமராஜர் புரிந்துகொண்டார்.
மேலும் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைக்க யோசித்து வந்தார். 1962 தேர்தலில் திமுக 50 தொகுதிகளைக் கைப்பற்றியது. காங்கிரஸ் 139 இடங்களில் வென்று ஆட்சியை அமைத்தது. இந்த முறை முந்தைய தேர்தலில் திமுக வென்ற சில தொகுதிகளில் காங்கிரஸை மீண்டும் வெற்றி பெறச் செய்தது காமராஜரின் தேர்தல் வியூகம். ஆனாலும் திமுக இம்முறை அதிக தொகுதிகளை வென்று வாகை சூடி இருந்தது.
சாத்தூரில் போட்டியிட்ட காமராஜ் வென்றார். காஞ்சிபுரத்தில் நின்ற திமுக தலைவர் அண்ணாதுரை தோல்வியைத் தழுவியது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. ராஜாஜி மற்றும் திமுகவின் பலத்த எதிர்ப்பைத் தாண்டி காமராஜ் மூன்றாவது முறையாக முதல் அமைச்சராகப் பதவியேற்றார்
எழுதியவர் - கடற்கரய்












Click it and Unblock the Notifications