ராஜேஸ்வரி பிரியா இதோ வந்துட்டாங்க.. மதுவிலக்கு எங்கே? மத்திய அரசை கை காட்டறீங்க? டக்னு பார்த்த திமுக
சென்னை: மதுவினால் பல குடும்பங்கள் சீரழிந்து வருவதனையும், பல இளம் விதவைகள் உருவாகுவதையும், பல லட்சம் பேர்கள் மதுவிற்கு அடிமையாகி உடல்நலம் பாதிக்கப்பட்டு வருவதனையும் உணர்ந்து தமிழக அரசு உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த முன் வர வேண்டும்" என்று வலியுறுத்தியிருக்கிறார் ராஜேஸ்வரி பிரியா.
தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க மாநில அரசால் முடியாது என்றும், நாடு முழுவதும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த சட்டம் கொண்டு வரப்பட்டால் மட்டும் தான் மதுவிலக்கு சாத்தியம் என்றும் திமுக அமைச்சர் ரகுபதி பேசியிருப்பது, பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

"அப்படியானால், மாநாடு நடத்தி என்ன பயன்? மது ஆலைகளை நடத்தும் திமுகவின் பிரதிநிதிகளை மேடையில் வைத்துக்கொண்டு மதுவிலக்கு பற்றி பேசுவதால் என்ன பயன்? என்னைப் பொறுத்தவரை மதுவிலக்கு தொடர்பான போராட்டங்கள் சமரசமற்றதாக இருக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்..
அமைச்சர் ரகுபதி: "அமைச்சர் ரகுபதியின் பேச்சு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரசின் குரலாகத் தெரியவில்லை. மாறாக, மது ஆலை அதிபர்கள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் பேசுவதைப் போல இருக்கிறது. மதுவுக்கு ஆதரவான சட்ட அமைச்சர் ரகுபதியின் இந்தப் பேச்சு கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், திமுக அரசை தொடர்ந்து சாடிவரும் ராஜேஸ்வரி பிரியாவும், தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டிற்கு தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார்.. திமுகவின் கபட நாடகம் என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
மதுபானம்: "மாநில சுயாட்சி வேண்டும் என்று கூறி வரும் திமுக மதுவிலக்கிற்கு மட்டும் தன்னிடம் அதிகாரம் இருந்தும் மத்திய அரசின் மீது பழி போடுவது எந்த விதத்தில் நியாயம். இந்திய அரசியலமைப்பு (பிரிவு 47)ன் கீழ் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மதுபானம் மற்றும் போதை பொருட்களை தடைசெய்ய அந்தந்த மாநிலங்களே முடிவு செய்ய முடியும் என்று இருக்கும் போது யாரை ஏமாற்ற இந்த நாடகம்.
மது வியாபாரத்தினால் மட்டும் அரசுக்கு ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயும் மேலும் கட்சிக்கு பல நூறு கோடி ரூபாய் கள்ள வருமானமும் கிடைத்து வருவதனை இழக்க மனம் இல்லாத திமுக அரசு கபட நாடகத்தை அரங்கேற்றி வருகின்றது. பீகார், குஜராத், நாகாலாந்து, மிசோரம் போன்ற மாநிலங்களில் மாநில அரசே மதுவிலக்கை அமல்படுத்தி இருக்கும்போது ஏன் தமிழக அரசால் அதனை செய்ய முடியாது?
வாக்குறுதி: ஏற்கனவே திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் மாநில அரசால் செய்ய முடியாத நீட் விலக்கை முடியும் என்று அறிவித்திருந்ததை அனைவரும் அறிவோம். தற்போது மாநில அரசால் செய்ய முடியும் என்கின்ற மதுவிலக்கை தன்னால் முடியாது என்று நாடகம் ஆடி வருகின்றது. தன்னால் செய்ய முடியாததை முடியும் என்றும் செய்ய முடிவதை முடியாது என்றும் கூறி ஏமாற்றுவது தான் திராவிட மாடலோ?
நீதிமன்றங்களில் மது தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் மட்டும் அது அரசின் கொள்கை முடிவு என்று வாதிடும் தமிழக அரசு, மதுவிலக்கு மாநில அரசால் சாத்தியமில்லை என்று மத்திய அரசை கை காட்டுவது நகைப்பாக உள்ளது.
மதுவிலக்கு: மதுவினால் பல குடும்பங்கள் சீரழிந்து வருவதனையும், பல இளம் விதவைகள் உருவாகுவதையும், பல லட்சம் பேர்கள் மதுவிற்கு அடிமையாகி உடல்நலம் பாதிக்கப்பட்டு வருவதனையும் உணர்ந்து தமிழக அரசு உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த முன் வர வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார் ராஜேஸ்வரி பிரியா.












Click it and Unblock the Notifications