போதை ஊசி கிடைக்குமிடம் போலீஸுக்கு மட்டும் தெரியாதது ஏன்? நறுக்குனு கேட்ட ராஜேஸ்வரி பிரியா
சென்னை: போதை பொருட்கள் கிடைக்குமிடம் பொதுமக்களுக்கு தெரியும் போது போலீஸாருக்கு தெரியாமல் இருப்பது ஏன் என அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து ராஜேஸ்வரி பிரியா தனது எக்ஸ்வலை தளத்தில் கூறியிருப்பதாவது:
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் போதை ஊசி செலுத்தி கொண்டதால் மரணித்துள்ளான் என்ற செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது. போதைப் பொருட்களின் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது இதனை தடுக்க வேண்டிய அரசு விளம்பர ஆட்சி செய்து கொண்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் பலவகையான போதைப் பொருட்கள் மாணவர்கள் மத்தியில் பயன்படுத்தபட்டு வருகிறது. பெற்றோர்கள் பிள்ளைகளை வெளியே அனுப்புவதற்கே அச்சப்பட வேண்டிய சூழ்நிலை நிலவியுள்ளது தமிழகம் போதை மாநிலமாக மாறியதனையே எடுத்து காட்டுகிறது.
போதைப் பொருள் விற்பனைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் ஆணையிட வேண்டும். முடியவில்லையென்றால் காவல்துறைக்கு தனி அமைச்சர் அமைத்து செயல்பாடுகளை முறைபடுத்த வேண்டும்.
பல இடங்களில் போதைப் பொருட்கள் கிடைக்குமிடம் ஊர்மக்கள் அனைவருக்கும் தெரிகிறது, ஆனால் காவல் துறைக்கு மட்டும் தெரிவதில்லை அது ஏன்? நட்பு பாராட்டுவதாக இருக்குமோ? இவ்வாறு ராஜேஸ்வரி பிரியா கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவர் நேற்று முன் தினம் மாலை பிராட்வே பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து போதை ஊசி எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது சிறிது நேரத்தில் சிறுவன் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவருடைய நண்பர்கள், அந்த சிறுவனை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் மருத்துவ பரிசோதனையில் சிறுவன் போதை ஊசி எடுத்துக் கொண்டதால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். மருத்துவமனைக்கு வந்த காவல் துறையினர் இறந்த மாணவரை பரிசோதனை செய்ததில் அவரது பாக்கெட்டில் போதை மருந்து, ஊசி போன்றவை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சிறுவனுக்கு போதை ஊசியை கொடுத்தது யார், எப்படி இவர்களுக்கு சுலபமாக போதை மருந்து கிடைக்கிறது? என்பது குறித்து காவல் துறையினர் சென்னை முழுவதும் முழுவீச்சில் சோதனை மற்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள். சிறுவனுக்கு 6 மாதமாகவே இந்த பழக்கம் இருப்பதாகவும் போதைக்கு அடிமையானதால் அவர் படிப்பையும் பாதியில் நிறுத்தியதாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.
மேலும் இறந்த சிறுவனை போல் பல சிறுவர்கள் போதை ஊசியை பயன்படுத்துகிறார்கள். ஒரு சில நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகளை அதிகமாக எடுத்து அதை சிரிஞ்ஜில் போட்டு ஏற்றிக் கொள்கிறார்கள். எனவே போதை பொருட்களை சப்ளை செய்பவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கஞ்சா விற்பனையும் அதிக அளவில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. தமிழகத்தில் அண்மைக்காலமாக சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் போதை பொருட்களை கடத்தி வருகிறார்கள். சிலர் கஞ்சாவை ஊடுபயிராகவும் வளர்த்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications