அரசியல் குறித்த கேள்வி.. கும்பிடு போட்ட ரஜினிகாந்த்.. அடுத்த நொடியே சசிகலா சொன்ன அந்த வார்த்தை
சென்னை: சென்னை போயஸ் கார்டனில் சசிகலா புதிதாக கட்டியுள்ள வீட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் சென்றார். அப்போது வீட்டை சுற்றிப்பார்த்த ரஜினிகாந்த், வீடு கோவில் மாதிரி இருக்குது என்று கூறினார். அப்போது ரஜினிகாந்திடம் அரசியல் குறித்த கேள்வியை எழுப்பியதுமே சசிகலாவும் உடனே ரியாக்ஷன் செய்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை போயஸ்கார்டனில் உள்ள வேதா நிலைய இல்லத்தில் வசித்து வந்தார். ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அவருடன் சசிகலாவும் இருந்து வந்தார். அவர் இறந்த பின்னர், சசிகலா சிறைக்கு செல்லும் வரை இந்த இல்லத்தில் தான் இருந்தார். சிறையிலிருந்து வெளியே வந்ததும் சென்னை திநகரில் உள்ள இளவரசி மகள் கிருஷ்ணபிரியா வீட்டில் தங்கியிருந்தார்.

அங்கிருந்தபடியே போயஸ் தோட்டத்தில் வீட்டை கட்டி முடித்தார். இந்த புதிய இல்லத்திற்கு கடந்த மாதம் கிரகப்பிரவேசம் நடந்தது. "ஜெயலலிதா இல்லம்" என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த இல்லத்திற்கு ஜெயலலிதா பிறந்த தினமான இன்று சசிகலா குடியேறினார். இந்த நிலையில், சசிகலாவின் இந்த வீட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் வருகை தந்தார். கிரகபிரவேசத்தில் பங்கேற்காத இயலாத சூழல் இருந்ததால், இன்று ரஜினிகாந்த் சசிகலா வீட்டிற்கு சென்றார்.
சசிகலா வீட்டிற்குள் வந்ததும் வீடு கோவில் மாதிரி இருக்குங்க என்று சொல்லியபடியே நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தை சுற்றிப்பார்த்தார். வீட்டின் அறைகள் எல்லாம் பிரமாண்டமாக இருக்கிறது என்று பேசியபடியே வீட்டை சுற்றிப்பார்த்தார். தொடர்ந்து சசிகலாவை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் கையெடுத்து கும்பிட்டபடி வாழ்த்து கூறினார். தொடர்ந்து சசிகலாவுக்கு கிப்ட் ஒன்றை அளித்தார். இதன் பின்னர் சிறிது நேரம் சசிகலாவுடன் நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.
இதனை தொடர்ந்து வீட்டிற்கு வெளியில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது:- வீடு கோவில் மாதிரி இருக்குது. கிரகப்பிரவேசத்திற்கு வந்தேன். இந்த வீடு சசிகலாவுக்கு பெயர், புகழ், சந்தோஷம், நிம்மதி எல்லாம் கொடுக்க வேண்டும் என்று சொல்லி ஆண்டவனிடன் வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது செய்தியாளர்கள், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் இன்று. அவர் இப்போது இல்லை. அவருடைய ஆளுமையை நிரப்ப இப்போது உள்ளவர்கள் யாரால் முடியும் என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த நடிகர் ரஜினிகாந்த், "அரசியல் குறித்து பேச விரும்பவில்லை என்று சிரித்தபடியே நன்றி" என்று கூறி அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றுவிட்டார்.
முன்னதாக ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்திக்கும் போது சசிகலாவும் உடன் இருந்தார். ரஜினிகாந்திடம், தமிழகத்தில் ஜெயலலிதா போன்ற ஆளுமை இல்லாத இடத்தை பூர்த்தி செய்ய போவது யார் என்று செய்தியாளர்கள் கேட்ட போது, அரசியல் குறித்து பேச விரும்பவில்லை என்று ரஜினிகாந்த் சொன்னார். அப்போது உடன் இருந்த சசிகலாவும் பெர்சனல் விசிட் ஆக வந்து இருக்கிறார் என்று கூறினார். பின்னர் ரஜினிகாந்தை வாசல் வந்து வரை வழியனுப்பி வைத்தார்.












Click it and Unblock the Notifications