இமயமலையிலிருந்து வந்த விசாரிப்பு.. ராமதாஸுக்கு போனை போட்ட ரஜினிகாந்த்.. இதுவல்லவோ அரசியல் நாகரீகம்
சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.. அங்கு அவருக்கு சிகிச்சை நடந்து வருகிறது.. மருத்துவர்கள் குழுவும் உடனிருந்து ராமதாஸை கவனித்து வருகிறார்கள். இந்நிலையில், மருத்துவமனையிலுள்ள டாக்டர் ராமதாஸூக்கு நடிகர் ரஜினிகாந்த் இமயமலையிலிருந்து போனை போட்டு விசாரித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு ராமதாஸுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது..

ராமதாஸூக்கு போன்
இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி சொல்லும்போது, இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் நன்றாக உள்ளன.. 2 நாட்கள் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள்.. தொடர்ந்து சாப்பிடும் மாத்திரைகளை எடுக்க வேண்டும் என்றும் சொல்லியுள்ளனர் என்றார்.
பிறகு, மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "பாமக நிறுவனர் ராமதாஸ், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை மூத்த இதயநோய் சிகிச்சை நிபுணர் மருத்துவர் செங்கோட்டுவேலு கண்காணித்து வருகிறார்.
மருத்துவ பரிசோதனை
அவருக்கு முழுமையான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் இரு தினங்களில் அவர் வீட்டுக்குச் செல்வார்" என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின், ராமதாஸை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்... மேலும், அவர் விரைந்து நலம்பெற்று, தமது வழக்கமான பணிகளைத் தொடர்ந்திட விழைகிறேன் என்று தன்னுடைய எக்ஸ் தளத்திலும் பதிவிட்டுள்ளார் ஸ்டாலின்.
முதலமைச்சரை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் நேற்றிரவு ராமதாசை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இன்று காலையில் நடிகர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
ராமதாசுக்கு போனை போட்ட ரஜினி
இந்நிலையில், டாக்டர் ராமதாஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தகவல் இமயமலையில் ஆன்மீக சுற்றுப் பயணம் செய்து வரும் ரஜினிக்கு தெரிவிக்கப்பட்டது.
இதைக்கேட்டதுமே ரஜினிகாந்த் உடனடியாக டாக்டர் ராமதாசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்... மேலும் மருத்துவர்கள் தந்து வரும் சிகிச்சை முறைகளையும் ரஜினி கேட்டறிந்ததுடன், விரைவில் பூரண நலம் பெற வேண்டிக்கொள்வதாகவும் டாக்டர் ராமதாசிடம் ரஜினி கூறியுள்ளார்.
டாக்டர் ராமதாஸை பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்தே ரஜினியை எதிர்ப்பவர்.. குறிப்பாக நெய்வேலி போராட்டத்தில் ரஜினியை அதிகம் சீண்டியது ராமதாஸ்தான்..
பாபா பட போஸ்டர்
படத்தின் போஸ்டர்களில் ரஜினி புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்ததற்கும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தவர் டாக்டர் ராமதாஸ்.. சினிமாவில் புகை மற்றும் மது அருந்தும் காட்சிகளுக்கு பாமக சார்பில் பலமான எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது.
இதனால் பாபா பட வெளியீட்டின்போது, வட மாவட்டங்களில் பெரும் சர்ச்சையே அன்றைய காலத்தில் நடந்தது.. அதிலும், ஜெயம்கொண்டத்தில் உள்ள ஒரு தியேட்டரின் ஸ்கிரீன் கிழிக்கப்பட்டது... இன்னொரு இடத்தில் 'பாபா' படப்பெட்டியும் தூக்கி செல்லப்பட்டது.
அரசியல் நாகரீகம்
இதற்கு பிறகு காவிரி விவகாரத்திலும் ராமதாஸ் ரஜினியைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.. 2004 தேர்தலில் பாமக போட்டியிட்ட 6 தொகுதிகளில் மட்டும் தோற்கடிக்க ரஜினி தன்னுடைய ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.. ஆனாலும், அந்த 6 இடங்களிலும் பாமக வெற்றிபெற்றது நினைவிருக்கலாம்.
இதெல்லாம் கடந்த கால நிகழ்வுகள் என்றாலும், நாளடைவில் இப்படியான மோதல்கள் குறைந்துவிட்டன.. எனினும், அரசியலில் ஆயிரம் விமர்சனங்கள், கருத்து மோதல்கள் இருந்தாலும், தனிப்பட்ட முறையில் அரசியல் நாகரீகத்தை அனைத்து கட்சி தலைவர்களுமே தமிழகத்தில் கடைப்பிடித்து வருவது போற்றத்தக்கது..
அந்தவகையில், முதல்வர் ஸ்டாலின் முதல், ரஜினிகாந்த வரை டாக்டர் ராமதாஸின் உடல்நலனில் அக்கறை காட்டி விசாரித்திருப்பது, தமிழக மக்களின் கவனத்தையும் பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications