இன்றும் ஒரு பேட்டி + குழப்பம்.. ரஜினிகாந்த் தெளிவாதான் இருக்கார்.. நாமதான் குழம்பி போயுள்ளோம்!!
ரஜினிகாந்த் மக்கள் மன்ற மா.செ.கூட்டத்தில் பேசியது என்ன?
சென்னை: நாம ஏற்கனவே சொன்னதுதான்.. ரஜினிகாந்த் தெளிவாதான் இருக்கார்.. நாமதான் குழம்பி போயுள்ளோம்... இன்னைக்கும் அப்படிதான் நம்மை தெளிவாக குழப்பிவிட்டு போயுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்!!
Recommended Video
நடிகர் என்றால் நடிக்கிற வேலையை மட்டும் பார்க்க வேண்டும்.. அரசியலில் இறங்குகிறேன் என்றால் உடனே இறங்கிவிட வேண்டும்.. இது ரெண்டுமே இல்லாமல் மக்களை போட்டு குழப்புவதே ரஜினியின் முக்கிய வேலையாக இருக்கிறது.
கட்சி ஆரம்பிப்பேன், எல்லா தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவேன்னு சொல்லி 2 வருஷம் ஆகிறது.. இதை புதுப்பிப்பது போல தமிழருவி மணியன், அர்ஜுன் சம்பத், கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் கட்சி ஆரம்பிப்பார், அவர்தான் 2021-ல் முதல்வர் ஆவார் என்று மறக்காமல் ரஜினிகாந்த்தை நினைவுபடுத்தி போய் கொண்டிருந்தார்கள். ஆனால் தன் படங்களை ஓட வைப்பதற்கான ஒரு வர்த்தக சூழ்ச்சியாகத்தான் ரஜினியின் ஒவ்வொரு முறை பேச்சும் பார்க்கப்பட்டது.

அரசியல்
எனினும் தன் சினிமா தொழிலுக்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாமல் அடிக்கடி எதையாவது பேசி பரபரப்பை உண்டுபண்ணி கொண்டிருந்தார்.. துக்ளக் விழா, பெரியார் சர்ச்சை, சிஏஏ விவகாரம் என அரசியல் களத்தை தேவையில்லாமல் சூடேற்றி கொண்டிருந்தார். குறிப்பாக மத்திய அரசை விமர்சிக்கவும், கண்டிப்பாக இவர் அரசியல் கட்சியை ஆரம்பித்துவிடுவார் என்றுதான் கடந்த சில தினங்களாக எதிர்பார்க்கப்பட்டது.. இந்த சமயத்தில் கமலும் தன் பங்கிற்கு வந்து சேர்ந்து அரசியல் செய்ய தயார் என்று சொல்லவும் மேலும் பரபரப்பின் சூடு அதிகமானது.

அறிவிப்பு?
இப்படிப்பட்ட சூழலில்தான் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது.. அதனால் எப்படியும் அரசியல் அறிவிப்பு குறித்த செய்தியை கண்டிப்பாக வெளியிடுவார் என்ற ஆவல் எழுந்தது.. குறைந்தபட்சம் கட்சியின் பெயரையாவது வெளியிடுவார் என்று கருதப்பட்டது.. ஆனால் வழக்கம்போல ஏமாற்றத்தையே தந்துள்ளார் ரஜினிகாந்த்.. மறக்காமல் மக்களையும் குழப்பிவிட்டு சென்றுள்ளார்.

ஒன்றரை மணி நேரம்
மக்களுக்கு ரஜினியிடம் பெரிதாக எதிர்பார்ப்பு இருப்பதாக தெரியவில்லை. ஆனால் திடீரென இந்த கூட்டம் கூட்டப்பட்டதால் ஏதோ சொல்லப் போறார் போல என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் கூட்டம் நடந்திருக்கிறது.. 37 மாவட்டங்களைச் சேர்ந்த செயலாளர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள்.. என்ன பேசினார்கள் என்று முழுமையாக தெரியாது.. யாரையும் எதுவும் கருத்து சொல்லகூடாது என்று ஸ்ட்ரிக்ட்டாக உத்தரவு போட்டு விட்டாராம்!

ஏமாற்றம்
வெளியில் போய் யாரிடமும் உள்ளே பேசியதை சொல்லவே கூடாது ஓக்கே.. என்று ஸ்டிரிக்டாக கூறிய ரஜினி வெளியே வந்து பேசியதுதான் செம காமடி. அதாவது உள்ளே நடப்பதை வெளியில் சொல்லக் கூடாது என்று கூறி விட்டு அவரே வெளியில் வந்து ஏமாற்றம் ஏற்பட்டது என்று கூறி அனைவரையும் குழப்பியுள்ளார். இந்த சந்திப்பில் நம் செய்தியாளர்கள் 2, 3 கேள்விகளை காரசாரமாகவே எழுப்பினர். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நீங்களும், கமலும் சேர்ந்து நிரப்புவீர்களா என்று கேட்டனர். அதற்கு நேரம் வரும்போதுதான் பதில் தெரியும் என்றார்.

என்ன விஷயம்?
அடுத்து, நீங்கள் கட்சி தொடங்குவதாக அறிவித்து 2 வருஷம் ஆச்சே.. இன்றைய கூட்டத்தில் என்ன பேசினீர்கள் என்று கேள்வி கேட்டனர்.. கூட்டத்துக்குள் என்ன நடந்தது என்பது பற்றி இப்போதைக்கு வெளியே சொல்ல முடியாது என்றார். ஒரு விஷயத்தில் ஏமாற்றம் என்கிறீர்களே அது என்ன விஷயம்? என்று கேட்டனர்..அது தனிப்பட்ட முறையில் ஏமாற்றம்.. நேரம் வரும்போது சொல்றேன்.. என்றார்.

இது மட்டும் புரிகிறது
ஏமாற்றம்னு ஏன் ரஜினி செய்தியாளர்களிடம் சொல்லணும்.. அது என்ன என்று கேட்டால் பிறகு சொல்கிறேன் என்று ஏன் சொல்லணும்.. என்பது மில்லியன் டாலர் குழப்பம். ரஜினி என்றாலே தெளிவின்மை என்றாகி விட்டது. அதை அவரே அடிக்கடி தொடர்ந்து நிரூபித்து வருகிறார். இதைச் சுட்டிக் காட்டினால் கோபம் வேறு வருகிறது. ஆக மொத்தம் ரஜினி கட்சி ஆரம்பித்து இதுதாம்ப்பா கட்சி என்று சொல்லும் வரை எதுவுமே தெளிவா இருக்காது என்று மட்டும் புரிகிறது.












Click it and Unblock the Notifications