இப்பவும் சூப்பர் ஸ்டார் ரஜினிதான்! விஜயின் லியோ பாக்ஸ் ஆபீஸ் சாதனையை முறியடிக்கிறது கூலி!
சென்னை: ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் டீசர், ட்ரெய்லர், அனிருத்தின் இசை என அனைத்தும் சேர்ந்து திருவிழா போன்ற உற்சாகத்தை உருவாக்கியுள்ளன. இந்த 'கூலி' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் (Coolie box office collection) புதிய சாதனைகளை படைப்பது உறுதியாகியுள்ளது.
'கூலி' Vs 'லியோ': பாக்ஸ் ஆபிஸ் யுத்தம்!
ரஜினிகாந்தின் 'கூலி' படத்தின் முதல் நாள் வசூல் ரூ. 150 கோடி அல்லது அதற்கு அதிகமாக இருக்கும் என சினிமா விமர்சகர்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்கள் கணித்துள்ளன. இது நடந்தால், கோலிவுட்டின் வரலாற்றில் 'கூலி' திரைப்படம் மிகப் பெரிய "முதல் நாள்" வசூலை ஈட்டிய படமாக மாறும்.

இதன்மூலம், தளபதி விஜய்யின் 'லியோ' படத்தின் முதல் நாள் வசூலான ரூ. 148 கோடியை 'கூலி' முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு, விஜய்யின் 'GOAT' ரூ. 105 கோடியும், ஷங்கர்-ரஜினிகாந்தின் '2.0' ரூ. 100 கோடியும் வசூலித்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
அமெரிக்காவில் மட்டும், 'கூலி' திரைப்படம் $1.7 மில்லியன் டாலர் முன்பதிவு வசூலை அடைந்து, விஜய்யின் 'லியோ' படத்தின் அமெரிக்க முன்பதிவு வசூலான $1.3 மில்லியன் டாலரை முறியடித்துள்ளது.
விஜய்-ரஜினிகாந்த் போட்டியின் பின்னணி
கோலிவுட்டில் கடந்த மூன்று தசாப்தங்களாக, விஜய் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரின் ஆதிக்கப் போட்டி நீடித்து வருகிறது. பாக்ஸ் ஆபிஸில் மட்டுமல்ல, சம்பளத்திலும் இருவரும் கடுமையான போட்டியில் ஈடுபட்டு வருகின்றனர். ரஜினிகாந்த் 2020ல் 'தர்பார்' படத்திற்கு முதல் முறையாக ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கினார், அதே சமயம் விஜய் 2021ல் 'மாஸ்டர்' படத்திற்கு முதல் முறையாக ரூ.100 கோடி சம்பளம் பெற்றார்.

ரசிகர்களிடையே 'காக்கா-கழுகு' சர்ச்சை
2023ல் 'ஜெய்லர்' ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் சொன்ன "காக்கா-கழுகு" கதையானது விஜய்க்கு எதிராக சொல்லப்பட்டதாக தவறாக விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர், ரஜினிகாந்த் 'லால் சலாம்' ஆடியோ வெளியீட்டு விழாவில் தெளிவாக கூறினார்: "விஜய் என் கண்ணெதிரே வளர்ந்தவர். 'தர்மத்தின் தலைவன்' படப்பிடிப்பின்போது அவர் வெறும் 13 வயதில் இருந்தார். அவர் இப்போது அரசியலுக்குப் போகிறார். எங்களுக்கிடையே போட்டி இருப்பதாக சொல்வது வேதனையை தருகிறது. எங்கள் ரசிகர்கள் எங்களை ஒருவருக்கொருவர் போட்டியாக பார்க்க வேண்டாம்" என்று அவர் தெரிவித்தார். இருப்பினும் ரஜினி-விஜய் இடையே யார் முதலிடம் என்பதில் போட்டி இருப்பதாகவே இரு தரப்பு ரசிகர்களும் கருதுகிறார்கள்.
முன்பதிவில் ரூ. 100 கோடியை நெருங்கிய 'கூலி' சாதனை!
தமிழகத்தில் மட்டும், 'கூலி' படம் முன்பதிவில் ரூ. 27 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்தியா முழுவதும் மொத்த முன்பதிவு வசூல் ரூ. 53 கோடியை தாண்டியுள்ளது. வெளிநாட்டு முன்பதிவுகள் ரூ. 35 கோடிக்கு மேல் குவிந்து, உலகளாவிய மொத்த முன்பதிவு வசூல், படம் வெளியாவதற்கு 12 மணி நேரத்திற்குள்ளாகவே ரூ. 88 கோடியைத் தாண்டியுள்ளது. இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே ரூ. 100 கோடியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ரஜினிகாந்தின் படங்களுக்கு உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் ஆதரவை மீண்டும் நிரூபிக்கிறது.

பாக்ஸ் ஆபிஸ் ஆதிக்கத்தின் அம்சங்கள்
வடமாநில சந்தையில் ரஜினியின் ஆதிக்கம்: ரஜினிகாந்த் வடமாநில சந்தையிலும், தெலுங்கு மாநிலங்களிலும் விஜயை விட பெரிய வசூலை ஈட்டுகிறார். 2010ல் 'ரோபோ' படம் தெலுங்கு மொழியில் டப்பிங் செய்யப்பட்டு, அந்த ஆண்டிலேயே தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது. கேரள மாநிலத்தில் விஜய் படங்கள் ரஜினி படங்களை விட அதிக வசூல் செய்கின்றன. 'லியோ' கேரளாவில் ரூ.60 கோடியும், ரஜினியின் 'ஜெய்லர்' ரூ.57.75 கோடியும் வசூலித்தன.
தமிழ் சினிமா
உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் 'கூலி'யின் வரலாற்று பாக்ஸ் ஆபிஸ் புயலுக்காகக் காத்திருக்கின்றனர். ரஜினிகாந்தின் வாழ்க்கையில் மட்டுமல்ல, கோலிவுட் வரலாற்றிலும் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கவிருக்கிறது 'கூலி' திரைப்படம். இந்த போட்டியானது தமிழ் சினிமாவின் வணிகத் திறனை உலக அளவில் நிரூபிக்கும் ஒரு வாய்ப்பாகவும் கருதப்படுகிறது. கன்னட சினிமா கூட வசூலில் சாதனை படைத்து வருகிறது. தெலுங்கு சினிமா 1000 கோடியை தாண்டி வசூலித்துள்ளது. பெரும் கலைஞர்களை கொண்ட தமிழ் சினிமா ஏன் அதை செய்யவில்லை என்ற கேள்விக்கு கூலி, தக்க கூலியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள் தமிழர் ரசிகர்கள்.












Click it and Unblock the Notifications